ஒரு நாள் ஷூட்டுக்கு 45 நாட்கள் உழைப்பு!



ஸ்போர்ட்ஸும், ஹாரருமாக கலகலத்த ‘ஜடா’வில் ‘அட’ சொல்ல வைத்தவர் படத்தின் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யா. அதிலும் அதன் இரண்டாம் பாதியில் விரட்டும் நைட் எஃபெக்ட்ஸில், மிரட்டும் ஸ்கோரை அள்ளியிருப்பார். இதற்கு முன் சுசீந்திரனின் ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘மாவீரன் கிட்டு’ தவிர, ஏராளமான விளம்பரப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருப்பவர் இவர்.

‘‘தமிழ் சினிமால வடசென்னைனாலே, கைல கத்தியை கொடுத்து வன்முறைக் களமா காட்டறாங்க. எனக்கு இதுல உடன்பாடு இல்ல. அங்கயும் ரசனையான மனிதர்கள் இருக்காங்க. அதைத்தான் ‘ஜடா’ல காட்டியிருக்கேன். க்ளைமாக்ஸில் வரும் ஃபுட்பால் மேட்ச் சீனை அத்தனை பேரும் பாராட்டினாங்க.
சந்தோஷமா இருக்கு. அதைப்போல அதில் வரும் நைட் எஃபெக்ட்ஸுக்கு பலூன் லைட் பயன்படுத்தாமயே லைட்டிங் பண்ணியிருந்தேன். ‘இருட்டை இருட்டாகவே காட்டியிருக்கீங்களே’னு எல்லாரும் வியக்கறாங்க. ஆடியன்ஸ் இந்தளவு கவனிக்கறது சந்தோஷமா இருக்கு!’’ ஆச்சரியமாகிறார் கேமராமேன் சூர்யா.

‘‘பூர்வீகம் சிதம்பரம். நான் சென்னைவாசி. பிஎஸ்சி எலெக்ட்ரானிக் சயன்ஸ் முடிச்சிட்டு எம்சிஏ பண்ணிட்டிருந்தேன். செகண்ட் இயர் பண்ணும்போதே, ஒளிப்பதிவு துறையில காதல் வந்திடுச்சு. இனிமே கேமராதான் என் லைஃப்னு தீர்மானிச்சதும் பிரிட்டீஷ் கவுன்சில், கன்னிமாரா லைப்ரரினு கிளம்பிப் போய் கேமரா தொடர்பான அத்தனை புத்தகங்களையும் தேடிப்பிடிச்சு படிச்சேன்.

‘சூப்பர் டீலக்ஸ்’ பி.எஸ்.வினோத் சார்கிட்ட விளம்பரப் படங்களுக்கு ஒர்க் பண்ணியிருக்கேன். அவர் தவிர, சில ஒளிப்பதிவாளர்கள்கிட்டயும் வேலை பாத்திருக்கேன். இயக்குநர்கள் சுசீந்திரனும் லெனின் பாரதியும் என் நண்பர்கள். ‘வெண்ணிலா கபடிக்குழு’வுக்கு முன்னாடி இருந்து சுசீந்திரனை தெரியும். அந்த டைம்ல மலையாளத்துல ‘ஆர்டினரி’ கேமராமேன் ஃபைசல் அலிகிட்ட நான் அசோசியேட் கேமராமேனா இருந்தேன்.

அப்ப சுசீந்திரன், ‘ஆதலால் காதல் செய்வீர்’ கதையை என்கிட்ட சொன்னார். அதோட க்ளைமாக்ஸ் சீன்ல ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன். வந்துட்டேன். கோலிவுட்ல எல்லாருமே டிஜிட்டல் போயிட்டிருந்த டைம்ல, ஃபிலிம்ல ஷூட் பண்ண விரும்பினேன். ஏன்னா, க்ளைமாக்ஸ் போர்ஷன்ல இருந்த அழகியலை கெடாமல் கொண்டு வரணும்னா அதுக்கு ஃபிலிம் தேவை. இதுலதான் அந்த எமோஷனை கொடுக்க முடியும்னு நம்பினேன். அது உண்மையும் கூட!

சுசீயும் ஓகே சொன்னார். ‘தனி ஒருவனு’க்கு முன்னாடி ஃபிலிம்ல ஷூட் பண்ணின படம் ‘ஆதலால் காதல் செய்வீர்’தான். நினைச்சது மாதிரியே அதோட க்ளைமாக்ஸ் போர்ஷனை ‘அஞ்சலி’ மாதிரி லைட்டிங்ல கொண்டு வந்திருப்பேன். 

ஒருமுறை ரவி கே.சந்திரன் சார்கூட பாடல்களை பார்த்துட்டு, கூப்பிட்டு பாராட்டினார். அதையடுத்து ஸ்போர்ட்ஸ் தொடர்பான விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ண போயிட்டேன். ‘மில்லினியம் ஸ்போர்ட்ஸ்’, ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப் உலககோப்பைக்கான படம்னு ஒர்க் போச்சு.

மறுபடியும் சுசீந்திரனோட ‘மாவீரன் கிட்டு’ கிடைச்சது. அது 80கள்ல நடக்கற கதை. பீரியட் ஃபிலிம்னால, அதில் ஒளிப்பதிவு மட்டுமில்லாமல் காஸ்ட்யூம்ஸும் சேர்ந்து ஒர்க் பண்ணினேன். அடுத்து ‘சாம்பியன்’ படத்துக்கும், கதிரின் ‘ஜடா’ படத்துக்கும் ஒரே நேரத்துல ஆஃபர் வந்தது. சுசீந்திரன்கிட்ட உங்களோட ரெண்டு படங்கள் ஒர்க் பண்ணிட்டேன்.

மத்த இயக்குநர்கள் ஸ்டைலையும் கத்துக்கிட்டு வர்றேன்னு சொல்லி, ‘ஜடா’க்கு வந்தேன். அவருக்கும் அதில் ஒரு சந்தோஷம்தான்...’’ புன்னகைப்பவர், விளம்பரப் படத்துறை பற்றியும் பேசினார்.

‘‘விளம்பரப் படம்னா, அதில் டைமிங் ரொம்ப முக்கியம். ஒரு நிமிஷத்துக்குள்ள சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லிடணும். ஒரு படத்துக்கு நாம உழைக்கற நாற்பத்தைஞ்சு நாள் உழைப்பையும் அந்த ஒருநாள் விளம்பர ஷூட்டுக்கு உழைக்க வேண்டியிருக்கும். அந்தளவுக்கு பர்ஃபெக்‌ஷன் பண்ணினாதான், அவுட்புட் திருப்தியா இருக்கும்.

சினிமாவுல ஒரு படத்துக்காக 50 - 60 நாட்கள் ஒர்க் பண்ணும் போது, ஒரு கேமராமேனுக்கு தேவையான சூழல்கள் அமையாம போகலாம். நினைச்ச லொகேஷன்ல ஷூட் பண்ண முடியாது... லைட்டிங், லென்ஸ்னு எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் பட்ஜெட்டை பொறுத்தே கிடைக்கும்.

ஆனா, விளம்பரத் துறைல அப்படியில்ல. அந்த ஒரே நாள் வேலைக்கு அத்தனை விஷயங்களும் ரெடியா ஸ்பாட்டுல இருக்கும். ஆனா, ரெண்டு துறைக்குமே ஒரே உழைப்பைத்தான் கொடுக்கறேன். இப்ப அசோக்செல்வன் நடிக்கற ‘செனோரிட்டா’வுல கமிட் ஆகியிருக்கேன்...’’ என்கிறார் கண்கள் மின்ன!
 
மை.பாரதிராஜா