திருமதி அழகியாக ஜொலிக்கும் தயாரிப்பாளரின் மனைவி!2 குழந்தைகளுக்கு தாயானபிறகு சோனாலி பிரதீப்பின் எடை 98 கிலோ... டயட் + ஒர்க் அவுட் வழியாக இன்று அவர் மிஸஸ் பியூட்டி!

‘‘கல்யாணத்துக்குப் பிறகுதான் இவ்ளோ வெயிட் போட்டுட்டேன். ம்... எங்க மெயின்டெயின் பண்ண முடியுது. குடும்பம், புருஷன், குழந்தைங்க... அவங்க மிச்சம் வைக்கிற சாப்பாடு வீணாகக் கூடாதுன்னு அதை எல்லாம் சாப்பிட்டு இப்படி ஆகிட்டேன்!’’திருமணமான இரண்டு பெண்கள் சந்திக்க நேர்ந்தால் பெரும்பாலும் பேச்சு இப்படித்தான் இருக்கிறது.ஆனால், திருமதி சோனாலி பிரதீப் இதற்கு நேர் எதிராக இருக்கிறார்.

யெஸ். திருமணமான பிறகு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளி வருகிறார். இந்தியாவின் எல்லா இடங்களிலும் நடக்கும் அழகிப் போட்டிகளில் மட்டுமல்ல... மொரீஷியஸ் சென்றும் மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் 2019 எர்த் உட்பட பல அழகிப் பட்டங்களை வென்று திரும்பியிருக்கிறார்.

‘‘அட நீங்க வேற… என் பழைய உடல் எடையைக் கேட்டீங்கன்னா பயந்து போயிடுவீங்க! சொந்த ஊர் கோவை, கவுண்டம்பாளையம்.
ஆரம்பத்துல மார்க்கெட்டிங் மானேஜர், சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்னு நிறைய கார்ப்பரேட் கம்பெனிகள்ல வேலை பார்த்தேன். எனக்கு பூர்வீகம் குஜராத். ஆனா, தாத்தா காலத்துலயே தமிழ்நாட்டுக்கு வந்துட்டோம். கணவர் பெயர் பிரதீப் ஜோஸ். மலையாளப் படத் தயாரிப்பாளர். தமிழ்லயும் ‘கடிகார மனிதர்கள்’னு ஒரு படத்தை தயாரிச்சு வெளியிட்டிருக்கார்.

எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்காங்க. இப்ப ஸ்கில் டெவலப்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். பொண்ணுக்கு வயசு 13. எட்டாவது படிக்கறா. பையனுக்கு 8 வயசு. 2வது படிக்கறான்.ரெண்டு குழந்தைகளுமே சிசேரியன்தான். இதனால அதிகமா வேலைகள் செய்ய முடியலை, உடல் உழைப்பு குறைஞ்சிடுச்சு. அப்புறம் குழந்தை பிறந்திருக்கறதைக் காரணம் காட்டி நெய், இனிப்பு, வறுத்த உணவுகள்னு அதிகமான சாப்பாடு. விளைவு... 98 கிலோ எடை போட்டுட்டேன்...’’ என்று சிரிக்கும் சோனாலி பிரதீப், இதனால் தன்னால் உட்கார்ந்தால் எழுந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகச் சொல்கிறார்.

‘‘என்னாலயே நம்ப முடியலை. ஒரு காலத்துல கல்லூரில ரேம்ப் வாக் எல்லாம் செய்துட்டு இருந்த நான், திடீர்னு 500 மீட்டர் நடக்கவே கஷ்டப்படற நிலைக்கு வந்து சேர்ந்தேன். மனசு சொல்றதைக் கேட்கவே மாட்டேன்னு உடல் அடம் பிடிச்சுது. இருந்த வெயிட்டை ஜிம்முக்கு போய் ஒர்க் அவுட் செஞ்சு எல்லாம் குறைக்க முடியாதுனு தோணுச்சு...’’ என்ற சோனாலி பிரதீப், முதல் வேலையாக சாப்பாட்டில் கை வைத்திருக்கிறார்.

‘‘நொறுக்குத் தீனிகளை குறைச்சேன். தேவையான சாப்பாட்டை மட்டும் சாப்பிட்டேன். 7 முதல் 9 கிலோ வரை குறைஞ்சேன். எனக்கே நான் லைட்டான மாதிரி உணர்வு. சர்வசாதாரணமா உட்கார்ந்து எழுந்தேன். இதுக்கு மேலயும் வெயிட் குறைக்க ஜிம்முல சேர்ந்தேன்.

எல்லாம் சரியாக இரண்டு வருடங்களாச்சு! அதுவரை பொறுமையா இருந்தேன். விடாம ஒர்க் அவுட் செஞ்சேன்...’’ என்ற சோனாலி பிரதீப், நண்பர்களின் ஊக்குவிப்பால்தான் மிஸஸ் அழகிப் போட்டிகளில், தான் பங்கேற்கத் தொடங்கியதாக சொல்கிறார்.

‘‘‘சூப்பரா மாறிட்டியே... இங்க நடக்கற மிஸஸ் கோவை அழகிப் போட்டில கலந்துக்க’னுநண்பர்கள் சொன்னாங்க. சிரிப்பா இருந்தாலும் ‘ஏன் கூடாது’னு தோணிச்சு. ‘மிஸஸ் ஃபிட் மாம் 2015’, ‘ஃபேஷன் பிரின்ஸஸ் 2016’, ‘மிஸஸ் இந்தியா ஸ்பார்க்லிங் திவா 2017’னு வரிசையா போட்டிகள்ல கலந்துட்டு அழகிப் பட்டம் ஜெயிக்க ஆரம்பிச்சேன்!

புனேல நடந்த போட்டில ‘மிஸஸ் இந்தியா 2017’ பட்டம் வாங்கினேன். அடுத்துதான் ‘மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் பியூட்டி வித் பர்போஸ் 2019’, ‘மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் 2019 எர்த்’இதுக்கான போட்டிங்க கடந்த அக்டோபர் 12 முதல் 18 வரை மொரீஷியஸ்ல நடந்தது. மொத்தம் 41 போட்டியாளர்கள்.

இறுதிக் கட்டத்துக்கு தேர்வான 10 பேர்ல நானும் ஒருத்தி. இறுதிச் சுற்று வரை போகணும்னு நினைச்சேன்... பார்த்தா பட்டமே கிடைச்சுடுச்சு...’’ சந்தோஷமாக சொல்லும் சோனாலி பிரதீப்பிடம் ஃபைனலில் கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா..? ‘ஏன் இந்த பட்டம் ஜெயிக்கணும்னு நினைக்கிறீங்க?’

‘‘இதுக்கு நான், ‘பலருக்கும் மாடல் மட்டுமல்ல... ரோல் மாடலாகவும் இருக்க விரும்புறேன்’னு பதில் சொன்னேன். நடுவர்களுக்கு இந்த பதில் பிடிச்சிருந்தது. ஆடியன்ஸும் பலமா கைதட்டினாங்க. சந்தோஷமா இருந்தது.எனக்கு என் கணவரும் பசங்களும் முழு சப்போர்ட் பண்றாங்க.

என் குடும்பம் என்னைப் பார்த்து பெருமைப்படணும்னு கனவு கண்டேன்... அது நிறைவேறிட்டு இருக்கு...’’ என்று சொல்லும் சோனாலி பிரதீப்பை முகநூலில் ஆயிரக்கணக்கானவர்கள் ஃபாலோ செய்கிறார்கள். காரணம், இவர் கொடுக்கும் டயட், நியூட்ரிஷன் டிப்ஸ்.

‘‘கல்யாணமாகிட்டாலோ குழந்தை பிறந்துட்டாலோ வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுனு நினைக்காதீங்க... ஓரமா முடங்காதீங்க. பிடிச்சதை பிடிச்சா மாதிரி செய்யுங்க. ஆரோக்கியத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுங்க...’’ என்று சொல்லும் சோனாலி பிரதீப், மார்பகப் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வரும் பிங்க் அமைப்பின் அம்பாசிடராக இருக்கிறார்!

ஷாலினி நியூட்டன்