பாலே நடனத்தில் நம்பர் ஒன்!



இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் தலைதூக்கி நிற்கும் ஒரு மானுட பிரச்னை இனவெறி. குறிப்பாக கலைத்துறையில் வெள்ளையர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு அடக்கி ஒடுக்கி வைக்கப்படுகிறார்கள் கருப்பினத்தவர்கள்.

அவ்வளவு நெருக்கடிகள், இனவெறி தாக்குதல்கள், வறுமை எல்லாவற்றையும் தாண்டி தனக்கான ஓர் அடையாளத்தை உண்டாக்கி தலைநிமிர்ந்து நின்று சவால் விடுகிறார்கள் கருப்பின ஜாம்பவான்கள். அப்படி சவால் விடுவதோடு தன் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான குரலாகவும் சிலரின் குரல் ஒலிக்கிறது. அப்படியான ஒரு குரல்தான் பிரீஷியஸ் ஆடம்ஸின் குரல்.

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் பிறந்தவர் பிரீஷியஸ் ஆடம்ஸ். கருப்பினப் பெண்ணான இவர் ஒரு பாலே நடன மங்கை. ஏழு வயதில் நடனமாடத் தொடங்கிய பிரிஷியஸிற்கு ஒன்பது வயதில் கிளாசிக்கல் பாலே நடனம் அறிமுகமானது. பதினொரு வயதில் கனடாவில் உள்ள தேசிய பாலே நடனப்பள்ளியில் பயில இடம் கிடைக்க, தனது திறமையை நிரூபித்து உலகளவில் பல பரிசுகளைக் குவித்தார்.

அவரது புகழ் பரவத் தொடங்கியது. இன்னொரு பக்கம் அவர் இனவெறிக்கும் பலியானார். ஆம்; பல முக்கிய நடன நிகழ்வுகளில் அவரால் பங்கு பெற முடியவில்லை. வேண்டுமென்றே அவரைத் தேர்வு செய்யாமல் இருட்டடிப்பு செய்தனர். இதுபோக அவரது நிறத்துக்கு எதிரான ஆடையை அணியச் சொன்னார்கள்.

இளம் பெண்ணான பிரீஷியஸ் இதையெல்லாம் கண்டு பயந்து ஒளிந்துகொள்ளவில்லை. தனது நிறத்துக்கு உகந்த ஆடையை, அணிகலன்களை, காலணியைத்தான் அணிவேன்; நடனமாடும் போது கச்சிதமாக பொருந்தக்கூடிய ஆடையைத்தான் தேர்வு செய்வேன் என்று போராடி அதில் வெற்றிபெற்றார்.

இவரது முடிவுக்கு எதிர்ப்புகள் வந்தாலும் இங்கிலீஷ் பாலே நடனப்பள்ளியின் இயக்குனர் தமரா ரோஜோ ஆதரவாக இருந்தார்.
இப்போது இங்கிலீஷ் பாலே நடனப்பள்ளியில் முக்கிய கலைஞரே பிரீஷியஸ் ஆடம்ஸ்தான்.

இனவெறிக்கு எதிரான ஆடம்ஸின் குரல் பிபிசிக்கு கேட்க, 2019ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த மற்றும் மற்ற பெண்களுக்கு உந்துதலாக இருக்கக்கூடிய 100 பெண்களின் பட்டியலில் பிரீஷியஸ் ஆடம்ஸுக்கும் இடம் கொடுத்து கவுரவித்துள்ளது.                  

த.சக்திவேல்