காற்று மாசு... அபாயகரமான நகரமாக மாறும் சென்னை!‘இந்தியாவில் ஒவ்வொரு 3 நிமிடத்துக்கும் காற்று மாசுபாட்டால் ஒரு குழந்தை இறக்கிறது.

1999 முதல் 2017 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மொத்தம் 1,95,546 குழந்தைகள் காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். அதாவது சராசரியாக தினமும் 535 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.அதிகபட்சமாக ராஜஸ்தானிலும், அதற்கடுத்த இடத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற வையும் உள்ளன...- குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease) இப்படிக் கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO) 2018ல் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில், ‘இந்தியாவைப் போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளின் குழந்தைகளுக்கு காற்று மாசுபாட்டின் கொடிய தாக்கம் அதிகமாக உள்ளது. இங்குள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 98 சதவீதம் பேர் உலக சுகாதார அமைப்பின் காற்று மாசுக் குறியீடு அளவைக் காட்டிலும் (PM - 2.5) அதிகமாக பாதிக்கப்படுன்றனர்...’ என்று தெரிவித்திருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த பிரஜா அறக்கட்டளை, ‘தலைநகர் தில்லியில் முறையே 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் 9,799, 11,900 மற்றும் 9,972 பேர் சுவாச நோயால் இறந்துள்ளனர்; 2015ல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 26 பேர்; 2016ல் 33 பேர்; 2017ல் 27 பேர் இறந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளில் (2015 - 2018) தில்லியில் காற்று மாசை குறிப்பிடும் ஏக்யூஐ (AQI) அளவு 2015ல் 231, 2016ல் 255, 2017ல் 227, 2018ல் 226 என்ற நிலையில் இருந்தது...’ என்கிறது.இப்படி காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்பு, நோய் பாதிப்பு, அசௌகரியம், மூச்சுத்திணறல் போன்றவற்றை புள்ளி விவரங்களில் பட்டியலிட்டிருக்கிறார்கள்.இந்நிலையில்தான் காற்று மாசை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்? உண்மையில் அது காற்று மாசை கட்டுப்படுத்துமா... என்ற கேள்விகள் எழுகின்றன.

நம் பூமியை சூழ்ந்துள்ள வளி மண்டலத்தில் 79% நைட்ரஜனும் 20%க் பிராணவாயுவும், 3% கரியமில வாயுவும், சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன. இவையெல்லாம் சமச்சீரான நிலையில் இருந்தால் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால், வாயுக்களின் விகிதாசாரத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டாலும் இயற்கை வளம், கடல்வாழ் உயிரினங்கள் முதல் அனைத்து உயிரினங்களுக்கும் (மனிதன் உட்பட) எதிர்மறை விளைவுகள்
ஏற்படும்... அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

வாயுக்களின் விகிதாசாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் தொழில்மயமாதலும் நவீனமயமாதலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடுகள்; பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்தும் வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன்கள்; வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு; தொழிற்சாலைகளிலிருந்தும், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்தும் வெளிவரும் உலோகத்துகள்கள்; ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள்... ஆகியவை காற்றை மாசுபடுத்துகின்றன.

இதனால் கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல் மற்றும் புற்றுநோய்... என பல நோய்கள் உண்டாகின்றன. கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் ஏற்படுகிற அமிலமழை, மண்ணின் அமிலத் தன்மையை அதிகப்படுத்தி தாவரங்களின் இலைகளை உதிர்க்கின்றன; நீர்நிலைகளைப் பாதிக்கின்றன.

இந்த இடத்தில் வாயுமண்டலத்தின் ஸ்ட்ராடோஸ்பியரிலுள்ள ஓசோன் படலம், சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான புற ஊதாக்கதிர்களை தடைசெய்கிறதே என்ற கேள்வி எழலாம்.அதிகவேக விமானங்கள் (சூப்பர்சானிக்) வெளியிடும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்ஸைடு; குளிர்சாதனப் பெட்டி, தீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் க்ளோரோஃப்ளோரோ கார்பன்கள் ஆகியவை ஓசோன் படலத்தை சிதைக்கின்றன என்பதையும், இதனால் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் மோனா ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை சூரியக் கதிர்களுடன் இணைந்து, ஒளி வேதி நச்சுப்புகைப் படலத்தை ஏற்படுத்தி நகர்ப்புறங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தில்லி மாநகரம் காற்று மாசால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு சென்றுள்ளது.

ஆனால், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது நம் நாட்டின் தலைநகரான தில்லி மட்டுமல்ல... தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையும்தான் என்ற எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.இது தொடர்பாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது ஃபேஸ்புக் பதிவில், ‘தில்லியின் காற்று மாசு சென்னையையும் பாதிக்கலாம்.

இதுநாள் வரை சென்னையில் காற்று மாசு இல்லை. இதற்கு முக்கிய காரணம், சென்னையின் கடற்பகுதிதான். தவிர வடகிழக்குப் பருவமழை காற்று மாசு ஏற்படாமல் சென்னையைக் காக்கும். ஆனால், இம்முறை மழை குறைவானதால் காற்று மாசு சென்னையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. காற்றின் தரம் 200 - 300 வரை உயர வாய்ப்புள்ளது...’ என்று தெரிவித்துள்ளார்.ஆனால், இவரது பதிவை இந்திய வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது.

சென்னையில் உள்ள இந்திய வானிலை மைய இயக்குனர் புவியரசன், ‘‘சென்னையில் வாகனப் புகை மற்றும் குப்பை எரிப்பதால் ஏற்படும் புகை, ஈரக் காற்றால் உறிஞ்சப்பட்டு அதன் தன்மை மாறிவிடும். வெயில் வரும்போது அந்த புகை மறைந்துவிடும். தில்லியில் உள்ள மாசுபாட்டுக்கும், இங்குள்ள புகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...’’ என்றவர், ‘‘சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மாசுபாட்டை கண்காணிக்கும் வசதி இல்லை...’’ என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

சரி... காற்றில் எந்தெந்த மாசு இருக்கிறது; அதனளவு என்ன என்பதை எப்படிக் கணக்கிடுவது?
‘Air Quality Index’ முறையில் அறியலாம். பொதுவாக 50 வரை இருந்தால், நாம் சுத்தமான காற்றைச் சுவாசிப்பதாக அர்த்தம். 50க்கு மேல் சென்றால் காற்றின் தரம் குறைந்துள்ளது என்று அர்த்தம்.

தில்லியைப் பொறுத்தவரை காற்றின் தரம் கடும் தீங்கை விளைவிக்கும் அபாய நிலையான 500ஐத் தொட்டுள்ளது. இந்தக் காற்றை சுவாசிப்பதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ‘சென்னையில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் காற்றில் உள்ள மாசை உண்டாக்கும் துகள்கள் கலையாமல், மாசை அதிகரிக்கச் செய்கின்றன...’ என்றது.

ஆனால் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ‘காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரான் அளவுள்ள நுண்துகள், சென்னையில் சராசரியாக ஒரு கனமீட்டர் காற்றில் 224 மைக்ரோகிராம், தில்லியில் 214 மைக்ரோகிராம் என்று இருந்தது. கடந்த சில நாட்களாக சென்னையில் 375 மைக்ரோகிராம் வரை சென்றது. ஒரு கன மீட்டர் காற்றில், 2.5 மைக்ரான் அளவுள்ள நுண்துகள் முதல் 60 மைக்ரோகிராம் வரை இருக்கலாம்.

ஆனால், சென்னையில் 4 மடங்குக்கு மேல் அதிகரித்து ேமாசமான நிலையில் உள்ளது...’ என்றது.சென்னையின் சாலைகளில் உள்ள மண் புழுதி, வாகனப் புகை, கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் வழக்கமாக உருவாகும் நுண்ணிய மாசு, பனியின் ஈரப்பதத்துடன் சேர்ந்துவிட்டது.

கடல் காற்றும் வீசாததால் அவை நகராமல் காலை நேரங்களில் அப்படியே உள்ளது. இதனால் மக்கள் காற்று மாசு பாதிப்பில் சிக்கி சிரமப்படுகின்றனர். பலருக்கு தொண்டைக் கரகரப்பு, சளி, இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு இதுதொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் எவ்வித எச்சரிக்கையும் வழங்கவில்லை.

‘எல்லாம், கடல் காற்று வீசத் தொடங்கினால் சரியாகிவிடும்’ என்று சர்வ சாதாரணமாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.உண்மை நிலவரமோ வேறாக இருக்கிறது. சென்னையில் 3,300 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம்; 10 மில்லியன் டன் உற்பத்தித் திறன்கொண்ட பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ்; எண்ணூர், மணலி போன்ற இடங்களில் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன. மற்ற பகுதிகளான பள்ளிக்கரணையில் குப்பைகளை மொத்தமாகக்குவித்து எரிப்பதால் வேளச்சேரி போன்ற பகுதிகளில் காற்று மாசு அதிகமாக உள்ளது.

ஓஎம்ஆர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகனப் புகை, கட்டுமானத் தொழிலால் புகை போன்றவைதான் சென்னை காற்று மாசுக்குக் காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சரி... இதற்கு என்ன தீர்வு..?சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துதல், குப்பையை மொத்தமாக ஓர் இடத்தில் கொட்டி எரிப்பதை தவிர்த்தல், கழிவுகளை சூழலை மாசுபடுத்தாத வகையில் மேலாண்மை செய்தல், பசுமை பூங்கா அமைத்தல், மரங்கள் வளர்ப்பு, பொதுப் போக்குவரத்தை ஊக்கப்படுத்துதல், பாதசாரிகள் நடந்து செல்வதற்கு சாலையோர வசதிகள் செய்தல், சைக்கிளில் செல்ல தனிப்பாதை அமைத்தல்... என எளிமையான தீர்வுகளை முன்வைக்கிறார்கள்.

ஆனால், இந்த எளிமையைக் கடைப்பிடிக்கத்தான் அரசு யோசிக்கிறது என்பது முகத்தில் அறையும் நிஜம்! இப்போதைக்கு அதிக பாதிப்பில்லை என அலட்சியமாக இருந்தால் விரைவிலேயே தில்லியை விட மோசமான நிலைக்கு சென்னை செல்லும். காற்று மாசால் நம் மாநிலத்தின் தலைநகரே சீர்குலையும்.                   

செ.அமிர்தலிங்கம்