முற்பட்ட பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு… சமூக நீதியா? அநீதியா?



சென்னை கோட்டையில் முற்பட்ட பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து நடந்த கூட்டம்தான் சென்ற வார வைரல்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே மோடி அரசு கடந்த ஜனவரி மாதம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. அப்போதே இரு அவைகளிலும் கண்டனங்களும் வரவேற்புகளும் கலவையாக எழுந்தன.

உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாக இருந்து வருகிறது. கடந்த 1963ம் ஆண்டே இது தொடர்பான நிலவரத்தைத் தெரிந்துகொள்ள காகா கலேக்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு அரசின் இட ஒதுக்கீடு அவசியமில்லை என்று சொன்னது. பின்னர் வந்த மண்டல் கமிஷனும் இதையே வலியுறுத்தியது.

ஆனால், அதிகார மையங்களில் வலுவாக உள்ள உயர் வகுப்பினர் இந்தக் கோரிக்கையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது இது சட்டமாக மசோதாவும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்தான் தமிழக அரசு இது குறித்து முடிவு எடுக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அழைத்தது.

தமிழகத்தில் இப்போது 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு முன்னேறிய வகுப்பினருக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முன்வந்துள்ளது. இதைப் பொதுப் பிரிவில் இருந்துதான் தருவோம் என்று சொல்கிறார்கள். அதாவது, தமிழகத்தில் உள்ள பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லோருக்குமான 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிய பின் எஞ்சியுள்ள பகுதியில் இருந்தே இந்த புதிய இட ஒதுக்கீடு என்று சொல்கின்றனர்.

மேலும் இந்த இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தினால் மருத்துவப் படிப்பில் இருபத்தைந்து சதவீத இடங்களைக் கூடுதலாகத் தருவதாகவும் மத்திய அரசு சொல்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் இது சிக்கலற்றதாகத் தோன்றும். ஆனால், தமிழகத்தின் பொது நலனுக்கு இது ஒரு கெடு வாய்ப்பு.தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ‘தமிழக அரசு தொடர்ந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சத
விகித இடஒதுக்கீட்டைக் காத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இப்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுமுறை பாதிக்கப்படாமல், இந்த இட ஒதுக்கீட்டினை இந்தக் கல்விஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்காக, கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான கருத்துருக்களை அனுப்பி வைக்குமாறு இந்திய மருத்துவக் குழுமம் அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் கோரியுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான, இந்திய மருத்துவக் குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநில அரசு விண்ணப்பித்தால், கூடுதலாக 1000 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களைப் பெற வாய்ப்புள்ளது...’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சொன்ன பதில் முக்கியமானது. இன்றைக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் சட்ட ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘முன்னேறிய சமுதாயத்துக்குப் பத்து சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்தினால் தமிழகத்துக்கு 25 சதவீத இடங்களை அதிகரிக்கிறோம்’ என்ற மத்திய அரசின் வாக்குறுதியை நம்பி, தமிழகத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிட வேண்டாம்.

சென்னை உள்ளிட்ட நான்கு கல்லூரிகளில் 1000 இடங்கள், பிற 20 கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட இடங்களையும் சேர்த்து 2937 இடங்கள் மட்டுமே உள்ளன. இந்த இரண்டையும் சேர்த்தால் வரும் 3937 இடங்களில்  பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அதாவது, ஒதுக்கப்படும் 587 இடங்களில் 393 இடங்கள் உயர் வகுப்பினர்க்குப் போய்விடும்! மீதமுள்ள 134 இடங்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கிடைக்கும். ஆகவே, 120ஐக் கொடுத்து 393ஐ நம்மிடமிருந்து பறித்துக்கொள்ள திட்டமிடப்படுகிறது.

இந்த பத்து சதவீத இடஒதுக்கீடு இல்லையென்றால், இந்த 393 இடங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் தாராளமாக இன்னும் 120 பேருக்கு மேல் அதிகமாகவே தேர்வு பெறுவார்கள்.

ஆகவே, ‘முன்னேறியவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறோம்’ என்று கூறப்படுவதற்கு நாம் செவி சாய்க்கக் கூடாது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக் காலமாக நாம் கட்டிக் காப்பாற்றி வரும் சமூகநீதிக்குக் களங்கம் கற்பிக்க அனுமதிக்கக் கூடாது. 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு கொள்கை தொடர வேண்டும்...’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சில் அர்த்தமுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்டவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு என்ற பேச்சே சமூக
நீதிக்கு எதிரான சதி. முன்னேறிய சமூகங்கள், உயர்த்தப்பட்ட சாதிகளுக்கு கலாசார மூலதனம் பெரும் பலம். பொருளாதார ரீதியாக ஒரே அந்தஸ்தில் இருக்கும் உயர்த்தப்பட்ட சமூகமும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட  சமூகங்களும் சட்டரீதியாக சம அந்தஸ்து கொண்டவை என்றாலும் சமூகரீதியாக ஒன்றில்லை.

ஒப்பீட்டளவில் முற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இருக்கும் கலாசார மூலதனம் இவர்களுக்குக் கிடையாது. இத்தனை ஆண்டுகால இடஒதுக்கீட்டின் பலன்கள் முழுமையாகப் போய்ச் சேராத காலகட்டத்தில் இப்படியான சலுகைகள் வலியோர் கை மேலும் வலுவாகவே வழி செய்யும். சமூக நீதி மிக்க ஒரு சமூகம் இதை அனுமதிக்கக் கூடாது!

இளங்கோ கிருஷ்ணன்