ராயபுரம் ரயில்வே அச்சகம்...



தலபுராணம்

கடற்கரைச் சாலையிலிருந்து சென்னை ராயபுரம் நோக்கி செல்லும் வழியில் இருக்கிறது ரயில்வே அச்சகம். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு குடோன் போல பரபரப்பின்றி அமைதியுடன் காட்சி தருகிறது. ஆனால், உள்ளே விறுவிறுப்பான அச்சகப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று நாம் எடுக்கும் அனைத்துவிதமான ரயில்வே டிக்கெட்டுகளும் இங்கேதான் அச்சடிக்கப்படுகின்றன.

1926ம் வருடத்திலிருந்து இந்த அச்சகம் இயங்கி வருவதாகச் சொல்கிறார்கள்.  தென்னிந்தியாவில் முதன்முதலாக பயணிகள் ரயில் போக்கு

வரத்து மெட்ராஸின் ராயபுரத்திலிருந்து இயக்கப்பட்டது.

1856ம் வருடம் மே 28ம் தேதி ராயபுரத்திலிருந்து ஆற்காட்டிற்கு நீராவி எஞ்சின் மூலம் அந்த ரயில் ஓடியது. அப்போது ரயில் போக்குவரத்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து வந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒப்புதலுடன் நடைபெற்றது. இப்படியாக, ‘மெட்ராஸ் ரயில் கம்பெனி’ேய முதல் ரயிலை இயக்கியது.

முதல் வகுப்பில் ஒரு மைல் தூரம் பயணிக்க  ஒருவருக்கு இரண்டு அணாவும், இரண்டாம், மூன்றாம் வகுப்புகளுக்கு ஒன்பது பைசாவும் வசூலிக்கப்பட்டன.அன்று இந்த டிக்கெட்டுகள் அட்டைகளில் தரப்பட்டன. இந்தஅட்டை டிக்கெட் முறையை 1840களில் இங்கிலாந்தில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த தாமஸ் எட்மண்ட்சன் உருவாக்கினார். இதனால், இது எட்மண்ட்சன் ரயில்வே டிக்கெட் எனப்பட்டது.  

அதற்கு முன்புவரை ரயில் நிறுவனங்கள் பயணிகளுக்கு கையால் எழுதப்பட்ட டிக்கெட்டுகளையே கொடுத்து வந்தன. ஆனால், இங்கிலாந்தில் கூட்டம் அதிகமுள்ள ரயில்நிலையங்களில் ஒருபுறம் க்யூவில் பயணிகள் கால்கடுக்க நிற்க, மறுபுறம் டிக்கெட் எழுதித் தரும் கிளார்க்குகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதனைத் தவிர்க்கும் பொருட்டே முன்கூட்டியே டிக்ெகட் தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்படியாகவே, எட்மண்ட்சன் அட்டை டிக்கெட் முறை வந்தது. இந்த நடைமுறை, ஐரோப்பாவிலும் இங்கிலாந்தின் காலனியாதிக்க நாடுகளிலும் பின்பற்றப்பட்டன.இந்த அட்டைகளைப் பிரின்ட் செய்யும் அச்சகத்தை இந்தியாவில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் ரயில் நிறுவனத்தினர் அமைத்தனர்.

ராயபுரத்திலுள்ள ரயில்வே அச்சகம், 1892ம் வருடம் கர்நாடகாவின் தார்வாட்டில் இருந்ததாகவும் அங்கிருந்தே 1926ல் ராயபுரத்திற்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான ஆவணங்கள் இல்லை.ஆனால், 1926ம் வருடம் மெட்ராஸ் டிரேட் ஸ்கூல் ஆரம்பித்தபோது இந்த ரயில்வே அச்சகத்திலிருந்து பணியாளர்கள் அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

தவிர, 1927ம் வருடத்திய ஜெர்மன் பிரின்டிங் மிஷின் ஒன்று இன்றும் இந்த ரயில்வே அச்சகத்தில் உள்ளது. அதிலிருந்து நாம் இந்த அச்சகத்தின் காலத்தைக் கணிக்க வேண்டியிருக்கிறது. அன்று இந்தியா முழுவதும் இங்கிருந்தே டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. இதற்குமுன் ரயில்வேயின் அச்சகப் பணிகள் தனியார் பிரின்டிங் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டன.

வி.பெருமாள் செட்டி அண்ட் சன்ஸ் நிறுவனம் ஜார்ஜ் டவுனில் ஹோ அண்ட் கோ என்ற அச்சகத்தை நடத்தி வந்தது. இந்த அச்சகம் தென்னிந்திய ரயில்வேயின் அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரராக செயல்பட்டது. இதுவே, அன்றைய ரயில்வேயின் அச்சகப் பணிகளைக் கவனித்தது.

ஆரம்ப காலங்களில் மெட்ராஸ் மாகாண ரயில்வே நிறுவனங்கள், ‘மெட்ராஸ் ரயில் கம்பெனி’, ‘தென்னக மராட்டா ரயில்வே’ எனத் தனித்தனியாக செயல்பட்டு வந்தன. 1908ம் வருடம் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து மெட்ராஸ் அண்ட் சதர்ன் மராட்டா ரயில்வே (M&SM) என மாறியது.
1944ம் வருடம் ரயில்வே நிறுவனங்கள் அனைத்தையும் பிரிட்டிஷ் இந்திய அரசு கையகப்படுத்தியது. 1951ம் வருடம் தென்னகத்திலிருந்த ரயில்வே நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தென்னக ரயில்வே உருவானது.

தென்னக ரயில்வேயில் ஆறு கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில், மெட்ராஸ் ராயபுரத்திலும் திருச்சியிலும் அச்சகங்கள் செயல்பட்டன. இவை இரண்டையும் சேர்த்து இந்தியா முழுவதும் மொத்தம் 14 ரயில்வே அச்சகங்கள் செயல்பட்டு வந்தன.  அன்று திருச்சியில் இருந்தே பயணிகளுக்கான அட்டை டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிற்கும், ேகரளாவிற்கும் இந்த டிக்கெட்டுகள் அனுப்பப்பட்டன.

‘‘அப்போ வாரத்துக்கு பத்து லட்சம் அட்டை டிக்கெட்டுகள் அச்சடித்து அனுப்பினோம்...’’ என நம்மிடம் நினைவு கூர்ந்தார் ரயில்வே ஊழியர் ஒருவர்.
கர்நாடகப் பகுதிக்கான அட்டை டிக்கெட்டுகள் மட்டும் மெட்ராஸில் இருந்து அச்சடிக்கப்படாமல் அனுப்பப்பட்டன. காரணம், மெட்ராஸுடன் இணைந்த ஒரு அச்சக யூனிட் மைசூரில் இயங்கி வந்ததுதான். அங்கே அவர்கள் ஊர், தேதி, கட்டணம் உள்ளிட்ட விஷயங்களை அச்சிட்டுக் கொண்டனர்.

மெட்ராஸ் அச்சகத்தில் ரயில்வே அட்டவணை, முன்பதிவிற்கான பாரம், அபராதத்திற்கான பாரம் என ரயில்ேவயில் உள்ள அனைத்துத் துறைகள் சம்பந்தமான பணிகளும் நடந்தன. சுமார் 1,200 விதமான அச்சடிப்புப் பணிகள் நடந்து வந்ததாகத் தெரிவிக்கின்றனர் அச்சக அதிகாரிகள்.
2002ம் வருடம் கணினிமயமான பிறகு அட்ைட டிக்கெட்டுகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது. இதனால் ராயபுரம் அச்சகம், கணினிக்குத் தேவையான டிக்கெட்டுகளை அவுட்சோர்சிங் முறையில் வெளியே தனியார் அச்சகத்தில் இருந்து அச்சிட்டு வாங்கியது.

இந்நிலையில் 2009ம் வருடம் ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி அச்சகங்களுக்குத் தேவையான நவீன பிரின்டிங் மிஷின் வாங்க நிதி ஒதுக்கினார். இதற்கிடையே இந்தியாவில் இருந்த பதினான்கு அச்சகங்களில் ஒன்பது அச்சகங்களை மூட முடிவானது. இப்படியாக, தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை, செகந்தராபாத் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டன. கடந்த வருடம் திருச்சி அச்சகம் மூடப்பட்டு அங்குள்ள ஊழியர்கள் ராயபுரத்திற்கு மாற்றப்பட்டனர்.

இதனால், அட்டை டிக்கெட்டுகளின் அச்சடிப்புப் பணி ராயபுரம் ரயில்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்ேபாது ராயபுரம், பொத்தேரி உள்ளிட்ட இருபத்தி நான்கு ஹால்ட் ஸ்டேஷன்களில் மட்டும் இந்த அட்டை டிக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான அட்டை டிக்கெட்டுகள் மட்டும் ராயபுரத்தில் அச்சாகிறன்றன. முதலில், இவற்றை 250 டிக்கெட்டுகள் வீதம் கட்டுகளாகக் கட்டி வைத்துவிடுகின்றனர். பின்னர், நிலையங்கள் வாரியாக பிரித்து அனுப்புகின்றனர்.

இதில், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குச் செல்ல வேண்டும், சீரியல் எண் என எல்லாமே பிரின்டாகி இருக்கும். அன்றைய தேதியை மட்டும் டிக்ெகட் விற்பனையாளர் இடவேண்டியதுதான்.இந்த டிக்கெட்டுகள் எல்லாம் ஹால்ட் ஸ்டேஷன்களில் தனியார் ஏஜென்சி ஊழியர்கள் மூலம் கவுன்டரில் வழங்கப்படுகின்றன.

அதாவது, ஒரு டிக்கெட்டிற்கு இவ்வளவு பணம் என அந்த ஏஜென்சிகளுக்குக் கமிஷன் தொகையை ரயில்வே வழங்கும். 2014ல் நவீன தொழில்நுட்ப மிஷின் வந்ததும் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் ராயபுரம் அச்சகத்திலேயே அச்சடிக்கப்பட்டன.

இதிலும், சீரியல் எண், ரயில்வேயின் லோகோ உள்ளிட்டவை அச்சிடப்பட்டே வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை அந்தந்த நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் அவர்கள் பிரின்டரில் சேர்த்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டியதுதான்.  

‘‘இங்கே தென்னக ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, கிழக்குக் கடற்கரை ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே என நான்கு ரயில்வேக்களுக்கான அச்சடிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுது. இப்போது நாளொன்றுக்கு 30 லட்சம் முன்பதிவு செய்யப்படாத (UTS) டிக்கெட்டுகளும், பத்து லட்சம் முன்பதிவு (PRS) டிக்கெட்டுகளும் அச்சடிக்கிறோம். வருடத்திற்கு 56 கோடி டிக்ெகட்டுகள் அச்சடிக்கப்படுகிறது...’’ என்கிறார் ராயபுரம் அச்சகப் பணியாளர் ஒருவர்.

தவிர, இந்த டிக்கெட்டின் பின்பக்கம் விளம்பரம் அச்சிடப்படுகிறது. இதன்மூலம் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் 75 பைசா கிடைப்பதாகச் சொல்கின்றனர். இது ரயில்வேக்குக் கிடைக்கும் மற்றொரு வருமானம்.

இந்நிலையில்தான் 2020 மார்ச் மாதத்திற்குள் எல்லா அச்சகங்களையும் மூட ரயில்வே முடிவெடுத்துள்ளது. ஆனால், ‘ரயில்வே துறைக்கு நல்ல லாபம் தரும் இந்த அச்சகங்களை மூடக் கூடாதென’ தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் ராயபுரம் அச்சக ஊழியர்கள்.

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா