துருவ நட்சத்திரம் ADITHYA VARMA கமல் இயக்கம்... விக்ரம் பளிச்‘எப்படி இருக்கீங்க..?’ கேட்டுவிட்டு கண்களால் சிரிக்கிறார் விக்ரம். ‘கடாரம் கொண்டான்’ புன்னகையும் நிதானமுமாக  நிற்கிறார்.

‘‘என்னுடைய சினிமா கேரியரில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். பொறுப்போட உழைச்சேன்... கலை நிரந்தரம். வாழ்க்கை குறுகியதுன்னு சொல்வாங்க. அதுதான் உண்மை. என்னோட ஒவ்வொரு படமும் முதல் படம் போல, ரொம்ப சின்சியராக பண்றேன். படத்தைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போறப்ப, ஆடியன்ஸ் மனசுல திருப்தியோட திரும்பணும். அதைக் கொடுக்க முடிஞ்சா படம் ஹிட்! அதுக்குப் போராடறது இருக்கே... அதுதான் சவால்!

இப்ப ‘கடாரம் கொண்டான்’ வரைக்கும் பார்த்திங்கன்னா, எனக்குள்ளே வளர்ச்சியைப் பார்க்கிறேன். விரும்பி, விரும்பி நான் தண்ணீர் மாதிரி மாறியிருக்கேன். நீங்க எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும், அந்த வடிவத்துக்கு மாறிடுவேன்.

ஆனால், பாத்திரம் செய்கிற இடத்தில் நான் இல்லை. அது ஒரு கிரியேட்டர் கையில்தான் இருக்கு. அந்த லட்சியத்தோடு இருக்கிறவங்களோட கை கொடுக்க நான் தயாரா இருக்கேன். அப்படி அமைஞ்சதுதான் இந்த ‘கடாரம் கொண்டான்’. கண்டிப்பா நீங்க எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் இந்தப் படத்துல இருக்கு...’’ அருமையாக பேசத்தொடங்குகிறார் விக்ரம். தமிழ் சினிமாவின் தனிக் குரல்.

முதல் தடவை க்ரே கெட்டப். அடிதடியா, ஆக்ரோஷமா... தோற்றமே வித்தியாசமா இருக்கு...நிறைய வித்தியாசங்கள் இந்தப் படத்திலேயே இருக்கு. என்னனு சொன்னால், படத்தோட சில ரகசியங்களைச் சொல்ல வேண்டியிருக்கும். படம் வரும்போதுதான் எல்லாமே தெரியணும். அப்பதான் சுவாரஸ்யம் இருக்கும்.

‘வில்லன் மாதிரியும் தெரியுதே’ன்னு கேட்கிறீங்க. நம்ம எல்லார்கிட்டேயும் கொஞ்சம் வில்லத்தனம் இருக்குதா, இல்லையா..? அதையும் வந்து சினிமாவைப் பார்த்துத்தான் தெளிவு படுத்திக்கணும்!‘கடாரம் கொண்டான்’ பார்க்கும்போது கஷ்டமான படம் மாதிரி தெரியாது. எங்களோட ஓட்டம் படத்தில் இருக்கிற மாதிரி, நீங்க எங்களை பின் தொடர்வது நடக்கும்.

வானவில் மாதிரி, கொஞ்ச நேரம் ஆச்சரியப்படுகிற நேரத்திற்கு நின்னு பார்த்திட்டு போவோமே, அது மாதிரி இந்தப் படத்தில் நிறைய நடத்திருக்கு.

நல்ல படங்கள் பார்க்கும் போது ஒரு சந்தோஷம் வருமில்லையா, அந்த சந்தோஷம் எனக்கும் இருக்கு. மக்களுக்கும் இருக்குமேயாயின் இது ஒரு வெற்றிப்படம். இதில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் தன் பெயரைக் காப்பாற்றி வைத்துக்கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கு.
சிவாஜி, கமல், விக்ரம்னு பேச்சு இருக்கு...

என் காதிலும் அது மாதிரி பேச்சு விழுந்திருக்கு. ஆனால், ஏற்காடு கான்வென்டில் படிக்கும் போது வாரத்தில் ஒருநாள் சினிமா பார்க்க வாய்ப்பு கிடைக்கும். வீட்டு ஆசைக்காக படித்துக் கொண்டிருந்தாலும், மனசெல்லாம் ‘சினிமா சினிமா’னு அடிச்சுக்கும். அப்படிப்பட்ட நாட்களில் எல்லாம் கமல் சினிமாதான் பார்க்க ரொம்பவும் இஷ்டமாக இருந்திருக்கு.

அவர்தான் எப்பேர்ப்பட்ட கலைஞன்! ட்ராக் ரெக்கார்ட் என்ன மாதிரி இருக்கு! எதிலும் இறங்கிப்போய் அந்த கேரக்டரில் உட்கார்ற விதம்... என்ன மாயம் அதெல்லாம்… எல்லாமே அவர் நடிச்ச சினிமாவில் நடந்திருக்கு. இப்ப அதே கமல் சார் தயாரிக்கிற சினிமாவில் நடிக்கிறதும் ‘விக்ரமின் ஸ்டைல் நடிப்பு’னு அவரே மனமுவந்து வார்த்தைகள் சொல்றதும்... இடையில் எவ்வளவு நடந்திருக்கு பாருங்க..!

எனக்கு என்ன சந்தோஷம்னா, அவரை மாதிரியே கொஞ்சமாவது சினிமாவின் எல்லா பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கேன். ‘பிதாமக’னுக்காக தினம் தினம் சேற்றிலும் சகதியிலும் புரண்டேன். ‘ஐ’ படத்திற்கு 40 கிலோவுக்கு மேலே உடம்பைக் குறைச்சு... என்னை அடையாளம் தெரியாமல் கடந்து போயிருக்காங்க! இதெல்லாம் வெறும் பணத்துக்காக மட்டும்னா நினைக்கிறீங்க..!சில முக்கியமான படங்கள் இன்னும் வராமல் இருக்கே..?

‘துருவநட்சத்திரம்’ இன்னும் ஒரு ஷெட்யூல் இருக்கு. எப்ப வந்தாலும் அதற்குரிய இடம் இருக்கு. ஏன் லேட், எதற்காகன்னு அதற்கான காரணத்தை இப்போ தேடவேண்டாம். நான் எங்கேயும் போயிடலை. ஐ லவ் சினிமா. ஆனா, எந்த அளவுக்கு நான் சினிமாவை நேசிக்கிறேன் என்கிற அந்த தீவிரத்தை, காதலை என்னால் வார்த்தைகளில் சரியாகச் சொல்ல முடியலை. அதனால்தான் நடிச்சுக்காட்ட முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.  

நல்ல சினிமா பண்ணணும். இனி நிறைய வரும். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கமிட் ஆகியிருக்கேன். நல்ல இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்திருக்கேன். இத்தனை நாள், இவ்வளவு பயணம், இப்ப இருக்கிற பொசிஷன்... என எல்லாமே ரொம்ப ஹேப்பி.

இன்னைக்கும் கோடம்பாக்கத்துல யாராவது ஒரு வித்தியாசமான கதையை யோசித்தால் உடனே ‘விக்ரமைக் கேட்டுப் பார்க்கலாமே’னு நினைக்கிற அளவு கிரியேட்டர்கள் மனதில் இடம் பிடிச்சிருக்கேனே... அந்த நிம்மதியில்தான் ஒவ்வொரு நாளும் தூங்கப்போறேன்.
உங்க பையன் துருவ் நடிக்கும் ‘ஆதித்யா வர்மா’ எப்படி வந்திருக்கு..?

அருமையா வந்திருக்கு. என்ன சொன்னாலும் பையனை சொல்றாரேன்னு ஒரு பேச்சு வந்திடுமோன்னு தோணுது. ஆனால், பார்த்ததை சொல்றது தப்பில்லையே! எனக்கு துருவ்கிட்டே பிடிச்சது என்னன்னா, நடிப்பு மேலே அவனுக்கு இருக்கிற க்ரேஸ். அவன் உடனே ஹீரோ ஆயிடணும், உடனே மேலே வந்திடணும்னு யோசிக்கவே இல்லை.

நடிப்பு மட்டும்தான் அவனுக்குப் பிடிக்குது. அப்படியே உள்ளே போய் நடிப்பில் தீவிரம் காட்டுறதை பார்க்க ஆச்சர்யமா இருக்கு. நமக்கெல்லாம் மார்க்கெட், இடம், வெற்றின்னு மனசுக்குள்ளே பரபரப்பு ஓடிக்கிட்டே இருக்கும். அவன் நடிப்பு பத்தி மட்டுமே கவனமா இருக்கான்.

‘ஆதித்யா வர்மா’ பற்றி கவலையே இல்லை. அவனைக் கொண்டு போய் ஒரு நல்ல இடத்தில் வைச்சிடும். அடுத்தடுத்த படங்கள் அவனுக்கு நல்லா அமையணும். அவன் பசிக்கு தீனி போடுற மாதிரி அமையணும். காட்’ஸ் க்ரேஸ்... அப்படி அமையணும்னு ஒரு தகப்பனா நினைக்கிறேன்.கமல் கூட நடிக்கிற ஆசை இல்லையா..?

நிறைய இருக்கு. அப்படி ஒரு ஸ்கிரிப்ட் அமையணுமே! கிடைச்சால் நாளைக்கே அவர்கூட நடிக்க ஆரம்பிச்சிடுவேன். எனக்கு அவரை இயக்குநராக் கூட ரொம்ப பிடிக்கும்!காலத்திற்கு முன்னாடி சில படங்களில் நடிச்சிட்டு போயிருக்கார். சினிமாவின் மீதான அவரது கரிசனத்தைப்பற்றி ஒருத்தரும் அவரைக் கைநீட்டி, பேசிட முடியாது.

நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தால், அதுக்கான பெரிய எதிர்பார்ப்புகளும் இருக்கும். ஊர்ல இருந்து கமல் சார் படங்களை பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்ப அவர் தயாரிப்பிலே படம் நடிக்கிறேன். இதெல்லாம் நடக்கும்போது அவர் கூட சேர்ந்து நடிக்கிறதும் நடக்கும்தானே! பார்க்கலாம்!  

நா.கதிர்வேலன்