கொரில்லாபணத்திற்காக பேங்கில் கொள்ளையடிக்கும்  நான்கு நண்பர்கள் பற்றிய கதை.போலி டாக்டர், பிக்பாக்கெட்  என திருட்டு வேலைகளில் வாழ்க்கையை மேற்கொண்டு இருக்கிறார் ஜீவா. அவரது நெருங்கிய நண்பர்களான சதிஷ், விவேக் பிரசன்னா, மதன் ஆகிய மூவரும் வேலையையும், பணத்தையும் தேடுகிறார்கள்.

பெரும் பணத்தேவை ஒரு கட்டத்தில் சூழ்ந்து விட ஒரு பேங்கை கொள்ளை அடிக்கப் பார்த்து, தேவையை நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கிறார்கள். எல்லாம் முடியும் வேளையில் அவர்களால் எந்தப் பிரச்சினையும் இன்றி தப்பிக்க முடிந்ததா? கொள்ளையடித்த பணம் என்னவானது? போன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்து பதில் அளிப்பதே கிளைமேக்ஸ்.

நகைச்சுவையை பின்புலமாக வைத்து இயக்குநர் டான் சான்டி களமிறங்கி இருக்கிறார். ஜீவா, சதிஷ், விவேக் பிரசன்னா காமெடி கூட்டணியில் ஜோக்கும், த்ரில்லும் சேர்ந்து கொஞ்சம் மனதிற்கு ஒட்டுதலாக காமெடி கிடைக்கிறது.  சகல ஏமாற்று வேலைகளும் செய்பவராக நன்றாகப் பொருந்துகிறார் ஜீவா.

ஆரம்பத் தொடக்கம் அட்டகாசமான காமெடிக்கு வழி வகுத்துக் கொடுத்து பிரமிப்பை உண்டாக்குகிறது. ஆனால். அந்த வேகத்தை கொண்டு செலுத்தாமல் பிறகு திணறுகிறார்கள். எந்த லாஜிக், ஒழுங்கு பற்றியெல்லாம் வருத்தப்பட்டுக் கொள்ளாமல் சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால் போதும் என்று இறங்கி அடித்தவர்கள், பின் பகுதியில் விவசாயிகள் பிரச்சினையை எடுத்துக்கொண்டு. ஃபினிஷிங் டச் கொடுப்பது ஆச்சர்யம்.

அடிக்கடி சிம்பன்சி மீது அன்பு செலுத்துவது, பொதுப் பிரச்சினைக்காக ஒன்றிணைவது என சினிமா கதாநாயகனுக்கான அனைத்து வேலைகளையும் ஜீவா முன்னின்று பார்க்கிறார். சிம்பன்சியை அதிகம் எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம் காத்திருக்கிறது.

ரசிக்க ரசிக்கக் குறையாத அழகு இருந்தாலும் ஹீரோயின் ஷாலினி பாண்டேக்கு படத்தில் அதிக வேலைகள் இல்லை.  யோகிபாபுவும் வந்து, காமெடி வைட்டமின் ஏற்றி விட்டுப்போகிறார். ராதாரவி, மொட்டை ராஜேந்திரன் கவனிக்க வைக்கிறார்கள். வழக்கம்போல் யோகி பாபுவை அவரது உருவத்தை வைத்து கேலி செய்வார்கள். இதில் அதோடு ஷாலினியையும் இணைத்திருக்கிறார்கள்.

காமெடி கலாட்டாக்களுக்கு அடையாளம் கொடுத்து ஒளிப்பதிவு செய்திருப்பதில் ஆர். பி. குருதேவ் இனம் காணப்படுகிறார். சாம் சி. எஸ்ஸின் பின்னணி இசை ஏற்றமாகி, பாடல்கள் ஏமாற்றமளிக்கின்றன. முன்பின் பாதிகளில் அலுப்புத்தட்டும் சில காட்சிகளில் பலமாக கத்திரி வைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.எப்படியாவது காமெடி வேண்டுமென்று அடம் பிடிக்கிறவர்கள் வந்து பார்த்து ரசிக்கலாம்.

குங்குமம் விமர்சனக் குழு