ரத்த மகுடம்-62பிரமாண்டமான சரித்திரத் தொடர்

நிமிர்ந்த அனந்தவர்மர்  மெல்ல  எழுந்து சாளரத்தின் அருகில் சென்றார்.ஓரமாக மறைந்தபடி குனிந்து திரைச்சீலையை கீழே லேசாக விலக்கினார்.அறை வாயிலில் இரு காவலர்களும்; சற்றே தள்ளி நான்கு காவலர்களும் அசையாமல் நின்றிருந்தனர். அறுவர் கரங்களிலும் ஈட்டிகள். அனைவரது கச்சையிலும் எப்பொழுது வேண்டுமானாலும் உருவும் வகையில் வாட்கள்.

இந்த அணிவகுப்புக்கு இடையில் குறிப்பிட்ட காலவெளியில் சாளுக்கிய வீரர்கள் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமுமாக நடந்துகொண்டிருந்தனர்.நடைபயின்றவரின் கண்கள் எட்டு திசைகளையும் ஊடுருவியபடியும் அலசியபடியும் இருந்ததை அனந்தவர்மரால் உணர முடிந்தது.தான் இருந்த அறைப்பக்கம் வரும்பொழுதெல்லாம் வீரர்களின் கருவிழிகள் தாழிடப்பட்ட அறைக் கதவையும், சாளரங்களையும் தவறாமல் கண்காணிப்பதை கவனித்தார்.

இப்படி நடக்கும் என ஊகித்ததாலேயே அனந்தவர்மர் காற்றில் திரைச்சீலை அசைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். இதன் ஒரு பகுதியாகவே அவ்வப்போது கீழ்நோக்கி அதை உயர்த்தி வெளி நடமாட்டத்தை கவனித்தார்.காவல் பலமாகவே இருக்கிறது. அதேநேரம் காவலுக்கு நிற்கும் சாளுக்கிய வீரர்கள் உட்பட அரண்மனைப் பணியாளர்கள் வரை ஒருவருக்கும், தான் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாது என்பதை அறியவும் அனந்தவர்மருக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.

தனக்குள் புன்னகைத்தார்.‘விக்கிரமாதித்தா... சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற வாரிசுகள் இருவர் மீண்டும் போட்டி போடுகின்றனர் என்ற உண்மை பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் மட்டுமல்ல... சாளுக்கிய வீரர்களுக்கும் தெரியக் கூடாது என கவனமாக காய்களை நகர்த்து
கிறாய். தெரியும் பட்சத்தில் சாளுக்கியப் படைகள் இரண்டாகப் பிரியலாம்... அது எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமாகலாம்... இதனால் சாளுக்கியர்களின் சாம்ராஜ்ஜிய கனவு கரைந்து போகலாம்... ஏன், சாளுக்கிய தேசமே இருந்த இடம் தெரியாமல் மறையவும் செய்யலாம் என அஞ்சுகிறாய்.

எப்படி உன் உடலில் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் ரத்தம் ஓடுகிறதோ அப்படி என் உடலிலும் அவரது குருதியேதான் பாய்கிறது!
நியாயமாக எனக்குக் கிடைக்க வேண்டிய அரியணைக்காகத்தான் போராடுகிறேனே தவிர என் தாய்நாட்டைக் கூறு போட்டு விற்பனை செய்ய உரிமைக் குரலை எழுப்பவில்லை.

சாம்ராஜ்ஜியமாக விரிந்து தென்னகம் முழுக்க சாளுக்கியர்கள் ஆள வேண்டும் என்ற கனவு எனக்கும் இருக்கிறது.
பல்லவ மன்னனிடம் படை உதவி கேட்டது சாளுக்கியர்களின் சிம்மாசனத்தில் நான் அமர்ந்து படை திரட்டி அதே பல்லவர்களை வேரோடு அழிக்கத்தான்!

அர்த்த சாஸ்திரத்தில் எதிரிகளையும் சாதகமாகப் பயன்படுத்தச் சொல்கிறார் கவுடில்யர். இந்த வழியையே நான் பின்பற்றுகிறேன்...
பார்க்கலாம், நம் தந்தை இரண்டாம் புலிகேசியின் பேரரசுக் கனவை மூத்தவனான நான் நிறைவேற்றுகிறேனா அல்லது இளையவனான நீ நிறைவேற்றுகிறாயா என்று.

அச்சப்படாதே... மீண்டும் நம் இருவருக்குள் அரியணைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளியில் கசிய விடமாட்டேன். படை உதவி செய்வதாகச் சொல்லியிருக்கும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரும் இந்த விஷயத்தில் ரகசியம் காப்பதாக உறுதி அளித்திருக்கிறார், அதுவும் அனுதினமும், தான் பூஜிக்கும் சிவலிங்கத்தின் மீது சத்தியம் செய்து.

எனவே, உன் வழியிலேயே நானும் அமைதி காக்கிறேன். நம் இருவருக்கும் இடையிலான பிரச்னை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொள்கிறேன்.
ஆனால், இறுதியில் வெற்றி பெறப்போவது நான்தான்!’மனதுக்குள் உறுமியபடியே சத்தம் எழுப்பாமல் படுக்கைக்கு வந்த அனந்தவர்மர், விரிக்கப்பட்டிருந்த பட்டையும், அரக்கினால், தான் வட்டமிட்ட வாளையும் பார்த்தார்.

அவர் வதனத்தில் பெருமிதம் ஜொலித்தது.‘முட்டாள் விக்கிரமாதித்தா! காஞ்சி மாநகரத்தை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு பல்லவ மன்னன் ஓடிவிட்டான் என்றா நினைக்கிறாய்! படைகளைத் திரட்டி வருகிறானடா! அவனிடம் இப்பொழுது ஆயுதங்கள் குவிந்து வருகின்றன!’
நிம்மதியுடன் அந்த பட்டை சுருட்டி தன் இடுப்பில் செருகிவிட்டு படுக்கையில் சாய்ந்தார்; உறங்கத் தொடங்கினார்...

‘‘வாருங்கள் கங்க இளவரசே...” ராமபுண்ய வல்லபர் வரவேற்றார். ‘‘தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு
வருந்துகிறோம்...’’‘‘என்ன இது அமைச்சரே... நீங்கள் போய் என்னிடம்...’’ சங்கடத்துடன் பதிலளித்த கங்க இளவரசன், ராமபுண்ய வல்லபரை உற்றுப் பார்த்தான்.

‘‘என்ன இளவரசே?’’
‘‘ஒன்று கேட்கலாமா?’’
‘‘கேளுங்கள்...’’
‘‘அனந்தவர்மர் மீண்டும் பிரச்னை செய்கிறாரா? என் தந்தையிடம் இதைத் தெரிவிக்கலாமா?’’
ராமபுண்ய வல்லபர் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.
‘‘நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை இளவரசே... தேவைப்பட்டால் சாளுக்கிய மன்னரே உங்கள் தந்தையைத் தொடர்பு கொள்வார்...’’
மேற்கொண்டு கங்க இளவரசன் பேச்சை நீட்டிக்கவில்லை. ‘’சொல்லுங்கள் அமைச்சரே... தாங்கள் என்னை அழைத்த காரணம்..?’’
‘‘மன்னர் உத்தரவு...’’

‘‘கட்டளை இடுங்கள்...’’
‘‘முன்பே நம் மன்னர் இட்டதுதான்...’’ என்றபடி தன் மடியில் இருந்து ஓலைக் குழலை எடுத்து கங்க இளவரசரிடம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர்.
அதைப் பெற்றுக் கொண்ட கங்க இளவரசனின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஏனெனில் குழல் உடைக்கப்பட்டிருந்தது!
‘‘மன்னர்தான் உடைத்து, தான் எழுதியதை மீண்டும் படித்துப் பார்த்தார்!’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் சங்கடம் வழிந்தது. சிறியவர்கள் முன்னால் இப்படித் தடுமாற வேண்டிய நிலை எதிரிக்கும் வரக்கூடாது.

‘‘கிளம்புகிறேன் அமைச்சரே!’’‘‘நல்லது இளவரசே... என்ன செய்யவேண்டும் என மன்னர் உங்களிடம்...’’
‘‘முன்பே தெரிவித்துவிட்டார்... சாளுக்கிய வீரர்களிடம் மட்டும் இம்முறையும் எந்த முத்திரை மோதிரத்தையும் காண்பித்து தடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்!’’ கண்சிமிட்டிவிட்டு கங்க இளவரசன் அகன்றான்.ராமபுண்ய வல்லபர் நெளிந்தார்.‘‘எதற்காக யோசிக்கிறீர்கள் மன்னா?’’ கேட்ட மருத்துவருக்கு வயது 80க்கு மேல் இருக்கும். பழுத்த பழம். வெண்தாடி,ஆடைகளற்ற மார்பில் புரண்டு கொண்டிருந்தது.

இடுப்பில் காவி வேஷ்டியை இறுகக் கட்டியிருந்தார். ஸ்படிக மாலையும் துளசி மாலையும் கழுத்து முதல் வயிற்றின் நாபிக் கமலத்துக்கு மேல் வரை தவழ்ந்து கொண்டிருந்தது.‘‘ஒன்றுமில்லை மருத்துவரே...’’ சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் பதிலளித்தார்.என்றாலும் அவர் கண்களில் தென்பட்ட கவலையை மருத்துவர் கவனித்தார்.‘‘ஒன்றுமில்லை என நீங்கள் சொல்வதிலேயே ஏதோ இருக்கிறதே மன்னா..?’’ வாஞ்சையுடன் சொன்ன மருத்துவர், விக்கிரமாதித்தரின் அருகில் வந்தார்.

‘‘மன்னா! நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டும் என்றில்லை. இந்த பரத கண்டத்திலேயே சாளுக்கியர்களுக்கு நிகராக மூலிகை, தைல ரகசியங்களைத் தெரிந்தவர்கள் யாருமே இல்லை. இதற்கு நம் பகுதியில் இருக்கும் அஜந்தா குகை ஓவியங்களே சாட்சி. அந்த வர்ணக் குழைவின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ளத்தான் மகேந்திர வர்ம பல்லவரும் ஆயனார் சிற்பியும் தங்கள் வாழ்க்கை முழுக்க முயன்றார்கள்...’’
‘‘தெரியும் மருத்துவரே...’’

‘‘அறிந்துமா கவலைப்படுகிறீர்கள்? மன்னா! எனது மேற்பார்வையில் அல்ல நானே நேரடியாக இறங்கி நீங்கள் அனுப்பிய பெண்ணை ‘சிவகாமி’யின் தோற்றத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன்!’’
‘‘...’’
‘‘தலைமுறை தலைமுறையாக மூலிகைகளுடனும் தைலங்களுடனும் எங்கள் குடும்பம் புழங்கி வருகிறது! அனைத்து அனுபவங்களையும் ஒன்று திரட்டித்தான் ‘சிவகாமி’யை உருவாக்கி இருக்கிறோம்! எனவே, எங்கே நம் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என நீங்கள் கவலைப்படுவதில் பொருளில்லை...’’

‘‘நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்கிறேன் மருத்துவரே... இயற்கைச் சீற்றங்களாலும் அழியாத மூலிகைக் கலவையை உருவாக்கும் திறன் சாளுக்கியர்களுக்கு உண்டு என்பது எனக்குத் தெரியாதா?’’‘‘அப்படியானால் என் திறமை மீது அய்யம் கொள்கிறீர்களா மன்னா?’’
‘‘என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள் மருத்துவரே! என் தந்தைக்கு சமமானவர் நீங்கள். இன்று நான் உயிருடன் இருக்கவே உங்கள் சிகிச்சைதானே காரணம்?’’

‘‘உங்கள் உதடுகள் இப்படிச் சொன்னாலும் உள்ளம் கவலையை வெளிப்படுத்துகிறதே... அதற்கு அர்த்தம் என்ன மன்னா?’’
‘‘ராமபுண்ய வல்லபர் அவசரப்பட்டு செய்த காரியம்...’’‘‘விளங்கவில்லையே..?’’

‘‘மருத்துவரே... எங்கே நாம் உருவாக்கிய சிவகாமி பல்லவர்கள் பக்கம் சாய்ந்துவிட்டாளோ என்று நினைத்து வீரர்களிடம் கட்டளையிட்டு அவள் மீது சரமாரியாக அம்பு பாய்ச்சும்படி செய்துவிட்டார்...’’
‘‘அடாடா... இறந்துவிட்டாளா?’’
‘‘இல்லை... கரிகாலன் காப்பாற்றி விட்டான்...’’

‘‘யார்... சோழ இளவரசனா..?’’
‘‘ஆம் மருத்துவரே...’’
‘‘இதற்கும் உங்கள் கவலைக்கும்...’’

‘‘தொடர்பிருக்கிறது மருத்துவரே... பல்லவ நாட்டின் கைதேர்ந்த மருத்துவக் குழு அவளுக்கு சிகிச்சை தரும்படி கரிகாலன் ஏற்பாடு செய்திருக்கிறான்...’’
‘‘ம்...’’‘‘இதனால் எங்கே நம் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன்...’’
‘‘அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம் மன்னா...’’
‘‘என்ன சொல்கிறீர்கள் மருத்துவரே?’’

‘‘உண்மையை மன்னா... நீங்களும் இதுவரை அறியாத உண்மை!’’
‘‘சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் மருத்துவரே...’’
‘‘பல்லவ மருத்துவர்கள் என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் நம் ரகசியம் வெளிப்படாது...’’
‘‘எப்படி..?’’

‘‘இதுபோல் நடக்கலாம் என முன்பே ஊகித்து உங்களிடம் கூட சொல்லாமல் ஒரு காரியம் செய்திருக்கிறேன் மன்னா..!’’வியப்புடன் மருத்துவரை ஏறிட்டார் விக்கிரமாதித்தர். ‘‘என்ன காரியம் மருத்துவரே?’’
‘‘மூலிகைப் பூச்சுதான் மன்னா... அதுவும் இருமுறை!’’
‘‘...’’
‘‘சிவகாமிக்கு எந்தத் திறமையான மருத்துவர் சிகிச்சை அளித்தாலும் அவள் தோற்றம் பொய் எனக் கண்டறிவார்கள். பூசிய தைல காப்பை கவனமாக அகற்றி அதனுள் இருக்கும் உருவத்தை வெளியே கொண்டு வருவார்கள்!’’
‘‘இதையேதானே மருத்துவரே நானும் சொல்கிறேன்?’’

‘‘பொறுங்கள் மன்னா... சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன்... அப்படி வெளிப்படும் உருவமும் பொய்யானதுதான்!’’‘‘என்ன..?’’‘‘ஆம் மன்னா! போலியான உருவத்தையே மீண்டும் வைத்திருக்கிறேன்!’’
‘‘...’’

‘‘இருமுறை அல்ல, மூன்று முறை மூலிகைக் காப்பை அகற்றினால்தான் உண்மையிலேயே எந்தப் பெண்ணை சிவகாமியாக மாற்றி நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதையே பல்லவர்களால் கண்டுபிடிக்க முடியும்!’’
‘‘அதுவரை..?’’

‘‘யாரையோ சிவகாமியாக மாற்றியிருக்கிறோம் என கரிகாலன் தெரிந்து கொள்வானே தவிர ‘யாரை’ அனுப்பியிருக்கிறோம் என அறியவே மாட்டான்! நம் மர்மம் ஒருபோதும் வெளிப்படாது!’’

கேட்க கேட்க வியப்பின் உச்சிக்கே சென்ற சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் சடாரென மருத்துவரின் கால்களில் விழுந்தார்.‘‘உங்களைப் போன்ற மகான்களைப் பெற சாளுக்கியர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!’’‘‘என்ன... இன்னும் ஆயுதங்கள் வந்து சேரவில்லையா?’’ வியப்பும் கோபமும் ஒருசேர கங்க இளவரசன் கேட்டான்.

‘‘இல்லை இளவரசே... ஸ்ரீராமபுண்ய வல்லபர் சென்ற பவுர்ணமி அன்றே வந்து சேரும் என்றார்... இதோ அடுத்த பவுர்ணமியே வரப் போகிறது...’’
‘‘ஏன் இந்தத் தகவலை முன்பே எங்களுக்குத் தெரிவிக்கவில்லை?’’ கோபத்துடன் கங்க இளவரசன் கேட்டான்.‘‘இல்லையே இளவரசே! இதுவரை ஐந்து தூதுவர்களை அனுப்பினோமே...’’இதைக் கேட்டு கங்க இளவரசன் அதிர்ந்தான்.

வந்தவர்கள் என்ன ஆனார்கள்? எங்கே மறைந்தார்கள்? ஆயுதங்கள் எங்கே சென்றன?
சங்கிலியால் சிவகாமி கட்டப்பட்டிருந்தாள்.சங்கிலியின் முனைகளை பல்லவ வீரர்கள் பிடித்திருந்தார்கள். தவறு, இழுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை.சிவகாமி நேர்கொண்ட பார்வையுடனும் தலை நிமிர்ந்தும் அலட்சியமாகவும் நடந்தாள்.

அடர் கானகத்தினுள் சென்ற இந்த ஊர்வலத்தின் தலைமைப் பொறுப்பை கரிகாலன் ஏற்றிருந்தான்.அவன் முகத்தில் அவ்வளவு ஆனந்தம். உதடுகள் நிறைய புன்னகை!தன் இடுப்பைத் தடவினான்.காஞ்சி கடிகையில் இருந்து அவன் எடுத்த அர்த்த சாஸ்திர சுவடிகள் பத்திரமாக இருந்தன!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்