அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பது இல்லையே!!



நியூஸ் வியூஸ்

2019ல் வேண்டுமானால் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாம்பியனாக இருக்கலாம்.2015 உலகக் கோப்பை போட்டியில்?ஆஸ்திரேலியாவுடன் 111 ரன்கள் வித்தியாசத்தில் இமாலயத் தோல்வி.நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டு வித்தியாசத்தில் படுதோல்வி.

கத்துக்குட்டியான ஸ்காட்லாந்துடன் மட்டுமே பெரிய வெற்றி.310 என்கிற இமாலய இலக்கை வைத்தும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இங்கிலாந்தை சூறையாடியது இலங்கை.சோதனை மேல் சோதனையாக கடைசி லீக் போட்டியில் வங்கதேச அணியோடு 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

புதுமுக அணியான ஆப்கானிஸ்தானிடம் மட்டும் டக்வொர்த் லூயிஸ் முறையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய சிறிய அணிகளிடம் மட்டுமே 2015 உலகக்கோப்பையில் இங்கிலாந்தால் வெல்ல முடிந்தது.
அப்போதும் கேப்டன் இதே இயான் மார்கன்தான்.‘It is like someone dying’ என்று அந்த உலகக் கோப்பை அனுபவத்தை ஒரே வரியில் வர்ணித்து தன்னுடைய உள்ளக்கிடக்கையை வர்ணித்தார் மார்கன்.

அப்போதும் இங்கிலாந்து சிறந்த அணிதான். அவ்வளவு மோசமான தொடர் தோல்விகள் அவர்களுக்கு துன்பகரமான அதிர்ச்சியாக அமைந்தன.இந்த மகத்தான தோல்வியைப் பெற்ற சில மாதங்களுக்குப் பின்னர் நியூஸிலாந்து, இங்கிலாந்துக்கு டூர் வந்தது.கேப்டன் இயான் மார்கன், தன் வீரர்களுக்கு சொன்ன அறிவுரை ஒன்றே ஒன்றுதான்.“அச்சப்படாதீர்கள். அச்சம் மட்டுமே நம் எதிரி.

உலகக் கோப்பையில் நம்மை எதிரணிகள் வெல்லவில்லை. நம்முடைய அச்சம்தான் நம்மை வென்றது. மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் பந்து வீசுகிறார்கள் என்றெல்லாம் நினைக்காமல், உங்கள் விருப்பப்படி மட்டையைச் சுழற்றுங்கள். எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் எதிரில் நின்றாலும் அச்சப்படாமல் பவுலர்கள் பந்து வீசுங்கள்”முதல் ஒரு நாள் போட்டியிலேயே இங்கிலாந்து 408 ரன்கள் குவித்து, 210 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்து ஆச்சரியப்படுத்தியது.

சட்டென்று விழித்துக் கொண்ட நியூஸிலாந்து அடுத்த போட்டியில் 398 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு பதிலடி தந்தது. இந்த இமாலய ஸ்கோரை கொஞ்சமும் அச்சமின்றி இங்கிலாந்து சேஸ் செய்துகொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. டக்வொர்த் லூயிஸ் முறையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது. ஆனால், 46 ஓவர்களிலேயே இங்கிலாந்து குவித்திருந்த ரன்கள் 365.

அடுத்த போட்டியில் இங்கிலாந்து 302 ரன்கள் குவித்தது. நிச்சயம் வெற்றிதான் என்று கருதிக் கொண்டிருந்தபோது 306 ரன்களை விளாசி நியூஸிலாந்து வெற்றி பெற்றது.இரண்டுக்கு ஒன்று என்கிற கணக்கில் பின்தங்கிய நிலையில் நான்காவது போட்டி நடந்தது. முதலில் ஆடிய நியூஸிலாந்து 350 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நியமித்தது. வழக்கம்போல, ‘அச்சப்படாமல் ஆடுங்கள்’ என்று பேட்ஸ்மேன்களை ஊக்குவித்தார் கேப்டன் மார்கன். அதற்கேற்ப ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஹேல்ஸும், ராயும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார்கள்.

பத்தே ஓவர்களில் 100 ரன்கள் திரட்டினார்கள். வெற்றி பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கை இங்கிலாந்து அணிக்கு வந்தபோது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹேல்ஸ் அவுட் ஆனார். அடுத்த இரண்டு ஓவர்களிலேயே இன்னொரு பேட்ஸ்மேனான ராயும் விக்கெட்டை இழந்தார்.
களத்தில் நின்ற ஜோ ரூட்டோடு இணைந்தார் கேப்டன் மார்கன்.

பெவிலியனில் padஐக் கூட கழ்ற்றாமல் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஹேல்ஸ். சக வீரரான ஜோஸ் பட்லர் அவரிடம் சொன்னார். “இவங்க ரெண்டு பேரும் விக்கெட்டை இழக்காம இருந்தா போதும். அதனாலே அடிச்சி ஆடமாட்டாங்க பாரு…”அவர் சொல்லி வாயை மூடவில்லை. விக்கெட்டை விட்டு இறங்கி வந்து மிட்ஆஃப் திசையில் பந்தை ஒரு சாத்து சாத்தினார் மார்கன். இமாலய சிக்ஸர். அன்று மார்கன் அடித்த 113 ரன்களில் 5 மெகா சிக்ஸர்கள் அடக்கம். 44 ஓவர்களிலேயே 350 என்கிற பிரும்மாண்ட இலக்கை எட்டியது இங்கிலாந்து அணி.

டிரெண்ட்பிரிட்ஜ் நகரில் நடந்த அந்தப் போட்டியில் நெருக்கடியான நேரத்தில் மார்கன் அடித்த பிரும்மாண்ட சிக்ஸர்தான் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டிரெண்ட் செட்டர் என்றே குறிப்பிடலாம். இப்போது உலகக் கோப்பையை பெருமையாக மார்கன் ஏந்துவதற்கு வழி
வகுத்ததும்கூட ஒரு வகையில் அந்த சிக்ஸர்தான் காரணம்.

அச்சப்படாவிட்டால் வெல்லலாம் என்கிற வெற்றி ரகசியத்தை தன்னுடைய அணியினருக்கு தன் அசராத விளையாட்டால் பாடமெடுத்தார் மார்கன்.
அந்த சீரிஸிலும் இங்கிலாந்து வென்றது.அட்டாக்.எதிரி விழித்துக் கொள்வதற்கு முன்பாக சரமாரியாக தாக்குங்கள்.நம்மை பாதுகாத்துக் கொள்வதைவிட, எதிரி நம்மைத் தாக்குவதற்கு முன்பே அவனை நிலைகுலைய வைப்பதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது மார்கனின் பாடம்.கிரிக்கெட்டில் இது சரியான அணுகுமுறையா என்பதெல்லாம் தனி விவாதம்.

ஆனால் அந்த அணுகுமுறை இப்போது 44 ஆண்டுகள் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்தை சாம்பியன் ஆக்கியிருக்கிறது என்பது நாம் கண் முன்னால் காணும் நிஜம்.இத்தனைக்கும் மார்கன் பிறப்பால் இங்கிலாந்துக்காரர் அல்ல. அயர்லாந்தின் தலைநகர் டப்ளினின் புறநகரான ரஷ் என்கிற கடலோர சிறுநகரில் பிறந்தவர். அயர்லாந்தில் கிரிக்கெட் என்பது அவ்வளவு பிரபலமான விளையாட்டும் அல்ல. அங்கு ஹர்லிங் என்கிற ஹாக்கி மாதிரியான விளையாட்டுதான் பிரபலம்.

ஆனால், மார்கனின் முன்னோர் தலைமுறை தலைமுறையாக கிரிக்கெட் ஆடுபவர்கள். இயான் மார்கன் ஹர்லிங், கிரிக்கெட் என்று இரு விளையாட்டுகளிலுமே சிறுவயதில் ஆர்வமாக இருந்தார். இன்று ரிவர்ஸ் ஸ்வீப்பிங் என்கிற பேட்டிங் தொழில்நுட்பத்தில் அவர் சிறந்து விளங்குவதற்கு, சிறுவயதில் பெற்ற ஹர்லிங் பயிற்சியே காரணம்.

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்காக 13 வயதுக்குட்பட்டவர், 15 வயதுக்குட்பட்டவர், 17 வயதுக்குட்பட்டவர் போட்டிகளில் விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக தேசிய அணிக்கு முன்னேறினார். சர்வதேச அளவில் அயர்லாந்துக்கு விளையாடிய வீரர்களிலேயே மிகவும் குறைந்த வயதில் தகுதி பெற்றவர் இவர்தான்.அயர்லாந்து அணிக்காக 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இயான் மார்கன் செய்த சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. யெஸ், அந்தப் போட்டிகளில் அதிக ரன்கள் (606 ரன்கள்) எடுத்த வீரர் என்கிற சாதனைக்கு மார்கனே சொந்தக்காரர்.

அயர்லாந்து அணிக்காக அவர் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியிலேயே 99 ரன்களில் அவுட் ஆனார். 99 ரன்களில் அறிமுகப் போட்டியிலேயே ஒரு வீரர் அவுட் ஆனது அதுதான் முதன்முறை. ஓராண்டுக்குப் பின்னர் கனடா அணிக்கு எதிராக தன்னுடைய முதல் செஞ்சுரியை பதிவு செய்தார். 2007 உலகக்கோப்பை போட்டிக்காகவும் அயர்லாந்து அணியில் இடம்பெற்றார்.

பேட்ஸ்மேனாக தனிப்பட்ட முறையில் எவ்வளவு சாதனைகள் செய்தாலும், சர்வதேச அரங்கில் அவர் விளையாடிக்கொண்டிருந்த அயர்லாந்து என்பது கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிதான். எனவே, இங்கிலாந்துக்காக விளையாட வேண்டும் என்பதே மார்கனின் கனவாக இருந்தது.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் ‘பி’ டீமான இங்கிலாந்து லயன்ஸுக்காக பல்வேறு போட்டிகளில் மார்கன் பங்கேற்றார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பிறகு 2009ல் தொடங்கி தொடர்ந்து விளையாடி வருகிறார்.

2014ல் (2015 உலகக் கோப்பைக்கு இரு மாதங்கள் முன்பு) தொடங்கி இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இருவேறு நாடுகளுக்காக விளையாடி, இரு நாடுகளுக்காகவும் செஞ்சுரி அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் இவர்தான்.மார்கன் மீது இங்கிலாந்து வைத்த நம்பிக்கையை அவர் பொய்ப்பிக்கவில்லை என்பதற்கு இந்த உலகக் கோப்பையே சான்று.

யுவகிருஷ்ணா