மத்திய அரசின் அலட்சியம்...கடலில் மூழ்கும் தமிழகம்!`டியர் மிஸ்டர் மோடி அண்ட் எம்பிக்களே...’

இப்படியொரு பதாகையை ஏந்தி, `காலநிலை மாற்றத்துக்கான சட்டத்தை உடனே நிறைவேற்றுங்கள்; நம் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்!’ என நாடாளுமன்ற வளாகத்தில் நின்றவருக்கு வயது 7தான்! மணிப்பூரைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவியான லிசிப்ரியா கங்குஜம், கடந்த மாத இறுதியில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டார்!

அந்த மாணவியிடம் மீடியாக்கள் போட்டி போட்டு அவரது பின்னணி குறித்து விசாரித்தது.``கடலின் மட்டம் உயர்ந்துகொண்டே போகிறது. பூமியும் சூடாகிறது. பருவ நிலை மாற்றத்திலிருந்து இந்தியாவின் வருங்காலத் தலைமுறையைக் காப்பாற்ற உடனே செயல்படுங்கள்...’’ என்றே திரும்பத் திரும்ப சொன்னார் லிசிப்ரியா கங்குஜம்.

இவர், கடந்தாண்டு மங்கோலியாவில் நடந்த ஏஷியன் மினிஸ்ட்ரியல் கான்ஃபரன்சில் கலந்துகொண்டு இயற்கைப் பேரழிவின் ஆபத்துகளைக் குறைப்பதைப் பற்றி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஏப்ரலில், ஐநா சபையிலும் இயற்கைப் பேரழிவின் ஆபத்துகளைக் குறைப்பது குறித்து உரையாற்றியிருக்கிறார்.

அப்போது, `‘பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற காரணங்களால் மக்கள் அழிவதைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனக்குப் பயமாக இருக்கிறது! இயற்கைப் பேரழிவுகளால் மக்கள் தங்கள் வீடுகளை இழக்கும்போதும், குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழக்கும்போதும் நான் அழுகிறேன். எல்லோரும் ஒன்று கூடுங்கள்; நமக்கான உலகைக் காப்பாற்ற வேண்டும்!’’ என்று உலக நாடுகளுக்கே அறைகூவல் விடுத்து பலரது பாராட்டையும் பெற்றார்.

வருங்காலத் தலைமுறைக்காகக் குரல் கொடுக்கும் இந்த மாணவியின் மனதில் பதிந்த ஆழமான உள்வாங்குதல், ஏன் உலகத் தலைவர்களுக்கு இல்லை என்பதே கேள்வி.இயற்கையின் நியதிக்கு எதிராக இந்த பூமியை மட்டும் மாசினால் நாசமடையச் செய்வது மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளிமண்டலத்தையே நாம் நிர்மூலமாக்குகிறோம். நாடுகளுக்குள் ஏற்பட்ட போட்டியால், எளிய மக்களும் மற்ற உயிரினங்களுமே முதல் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். அறிவியல் ரீதியாக உலக வெப்பமயமாதலும், அதனால் உலகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளும் என்ன..?
நாம் வாழும் பூமியைச் சுற்றி பரவியுள்ள வாயுக்களால் ஆன காற்று மண்டலத்தை வளிமண்டலம் என்றும், அதற்கு ேமலுள்ள பகுதியை விண்வெளி என்றும் அறிவியல் சொல்கிறது.

பூமியைச் சுற்றிலும் அதன் மேற்பரப்பில் சுமார் 10 ஆயிரம் கி.மீ உயரம் வரை பரவியுள்ள வளிமண்டலத்தில், நைட்ரஜன் (78.08%), ஆக்ஸிஜன் (20.94%) வாயுக்கள் அதிகமாகவும், கார்பன் டை ஆக்ஸைடு, ஆர்கான், ஓசோன் போன்ற வாயுக்கள் குறைவாகவும் அடுக்குகளாக உள்ளன.
புவியின் மேற்பரப்பிலிருந்து 29 கி.மீ உயரத்திற்குள்ளேயே மொத்த காற்றில் 97% அளவுக்கு அடங்கி விடுகிறது.

இதில் பூமியை ஒட்டிய வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள நீராவியானது, இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் வேறுபடுகிறது.
அதாவது பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் வளிமண்டலக் காற்றின் வெப்பநிலை, அழுத்தம், காற்றின் ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவின் அளவு போன்றவற்றைப்பற்றிக் குறிப்பிடுவது வானிலை எனவும்; 35 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒவ்வொரு நாளும் நிலவும் வானிலையின் தொகுப்பை காலநிலை என்றும் வரையறுக்கின்றனர். அதாவது வானிலைக் கூறுகளே காலநிலைக் கூறுகளாக செயல்படுகின்றன.

பூமியின் அனைத்து நீரும் பெருங்கடல், நீரோடை, ஏரி, நிலத்தடி, மண், காற்று ஆகியவற்றில் இருந்தாலும், மொத்த நீரின் அளவில் 97% பெருங்கடலில் சேமிப்பாக உள்ளது. 2%க்கும் குறைவான நீர் அண்டார்க்டிகாவில் பனிக் கவிப்புகளாகவும் (ice caps), ஆல்ப்ஸ் மலைகளில் பனி ஆறுகளாகவும் (glaciers) சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

நிலத்தினடியில் 0.5% நீரும், பூமியின் மேற்பரப்பில் ஓடை, ஆறு, ஏரி ஆகியவற்றின் மூலம் 0.05%மும், வளிமண்டலத்தில் காணப்படும் நீரின் அளவு மொத்த நீரில் 0.0001 சதவீதமாகவும் உள்ளன.இந்த கணக்கையெல்லாம் பார்க்கும்போது கடல் வாழ் உயிரினங்கள் தவிர மற்ற இடங்களில் வசிக்கும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து வகை விலங்கினங்களுக்கும், தாவரயினங்களுக்கும் மிகக் குறைந்தளவே இயற்கை சட்டத்தின்படி தண்ணீரின் தேவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது புரியும்!

இருந்தாலும் மனிதத் தவறுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினால் பருவநிலை மாற்றம், உலகவெப்பமயமாதல் போன்றவை ஏற்பட்டு 2%க்கும் குறைவாக உள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்கி பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.அதாவது, உலகளாவிய வெப்ப உயர்வால் பெரிய பனி விரிப்புகள் (ice sheet) உருகிச் சீர்குலைந்து கடல்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது!

இதனால் கடற்கரையோர நகரங்கள் கடலில் முழ்கி உருக்குலைய நேரிடும். மில்லியன் கணக்கான மக்கள் இடம் பெயர வேண்டியிருக்கும். தவிர, நன்னீர்த் தொகுதிகள் (ஒரு சதவீதத்துக்கும் குறைவான உப்பு அளவைக் கொண்ட நீர்ப்பகுதி), வாழிடங்கள் ஆகியன பேரழிவுக்கு உலகவாழ் உயிரினங்களைக் கொண்டு செல்லும்.

சமீபத்திய புள்ளிவிவரப்படி பார்த்தால் உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதால், வரும் 2100ம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் சுமார் 25 செ.மீ. உயரும் என்று கூறப்படுகிறது.உலகின் வடதுருவப் பகுதியான கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும், தென்துருவப் பகுதியான அண்டார்டிகாவிலும் அதிகளவிலான பனிப்பாறைகள் உள்ளன.

அதிகரித்து வரும் வெப்பமயமாதல் காரணத்தால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்து வருகிறது. இதனால், கடல்நீர் மட்டமும் உயர்ந்து வருவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், ‘உலகில் பல இடங்களிலும் அந்தந்த இடங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப சீரான வேகத்தில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் வரும் 2100ம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் சுமார் 25.4 செ.மீ. உயரும்.

கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகுவது மட்டுமே கடல்நீர் மட்ட உயர்வுக்குக் காரணம் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், மற்ற நாடுகளில் உள்ள சிறு பனிப்பாறைகளும் கடல்நீர் மட்ட உயர்வில் முக்கியப் பங்காற்றி வருகின்றன!
உதாரணமாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் அதிகமான சிறு பனிப்பாறைகள், 2100ம் ஆண்டுக்குள் 30 முதல் 50 சதவீத அளவு உருகிவிடும்; உலக அளவில் நோக்கும்போது, சராசரியாக 18 முதல் 36 சதவீத பனிப்பாறைகள் உருகிவிடும்...’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் மட்டம் உயர்வது குறித்து ஏற்கனவே பல ஆய்வுகளில் தெரிய வந்தாலும்கூட, ஏற்கனவே கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல் மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடல் மட்டம் வேகமாக உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் பறிபோகும். அதாவது லிபியா நாட்டின் நிலப்பரப்பு அளவிலான நிலம் மூழ்கும்!

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழப்பார்கள். லண்டன், நியூயார்க், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும். மக்கள் வசிப்பதற்கு லாயக்கற்ற நாடாக வங்கதேசம் மாறும்... என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  சரி... இந்தியாவைப் பற்றிப் பேசவேண்டுமானால்... உலக நாடுகள் மத்தியில் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் ஆகிய பிரச்னைகளைக் கையாள்வதில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதனால், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, 2030ம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி மூலங்களில் இருந்து 40% மின்சார உற்பத்தி, 100% பேட்டரி வாகனங்கள் மற்றும் 2025ம் ஆண்டுக்குள் பி.எஸ்-4 வாகனங்களில் இருந்து பி.எஸ்-6 வாகனங்களுக்கு மாறுவது உள்ளிட்ட எதிர்கால இலக்கை நோக்கி பயணிப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக்கு மாறாக சூழலியலுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதால் கடற்கரையோர மக்கள் பாதிக்கப்படுவர் என்பதே முகத்தில் அறையும் நிஜம்.மாநில அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா..?

சென்னை என்னவாகும்?

கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய புவி அறிவியல் துறை இணைஅமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, கேரள எம்பி ஆன்றோ ஆண்டனி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். அப்போது, ‘செயற்கைக்கோள் அனுப்பிய படங்களை வைத்து கடற்கரைகளை ஆய்வு செய்தபோது ஆண்டுக்கு 1.46 மில்லி மீட்டர் கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இந்திய கடற்கரைகளில் கடல் மட்டம் ஆண்டொன்றுக்கு 1.3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய், மீத்தேன் போன்ற புதைபடிவ எரிபொருள் எடுப்பதினால் ஏற்படும் வெப்பத்தால் கடல் மட்ட உயர்வு ஏற்படுகிறது. வருகிற 35 ஆண்டுகளுக்குள் 2.2 மில்லிமீட்டர் வரை கடல் நீர் மட்டம் உயரும்.

மேற்குவங்கத்தின் டைமண்ட் துறைமுகத்தில் அதிகபட்சமாக 5.16 மில்லிமீட்டர் (1948 - 2005), ஹால்டியா துறைமுகத்தில் 2.89 மில்லி மீட்டர் (1972 - 2005), குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் 3.18 மில்லி மீட்டர் (1950 - 2005), போர்ட் பிளேர் துறைமுகத்தில் 2.20 மில்லிமீட்டர் (1916 - 1964) என்ற அளவிலும், மிகக் குறைவாக தமிழகத்தின் சென்னை துறைமுகத்தில் 0.33 மில்லிமீட்டர் (1916 - 2005), மகாராஷ்டிரா துறைமுகத்தில் 0.74 மில்லிமீட்டர் (1878 - 2005) என்ற அளவில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது...’ என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட விவரங்களைப் பார்க்கும்போது, மேற்குவங்கத்தில்தான் கடல் மட்டம் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது தெரியவருகிறது. சென்னை கடற்கரை மட்டம் குறைந்தளவே உயர்ந்திருந்தாலும் கூட, மற்ற பகுதிகளில் ஏற்படும் உயர்வு இங்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

செ.அமிர்தலிங்கம்