கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-20



வரம் தரும் வரதன்

பொழுது விடிந்ததும் திருக்கச்சி நம்பிகள் காஞ்சி மாநகரை விட்டு வெளியேற ஆரம்பித்தார்.ஆம். வரதன் ஒரு சிறுவனின் வடிவில் வந்து தன் பாதுகைகளை சிரத்தில் தாங்கியதும், உலகளந்த திருவடியால் வரதன் தன் வீடு வரை பந்தம் ஏந்தி நடந்து வந்து வழிகாட்டியதும் அவரை வெகுவாக பாதித்திருந்தது. எனவேதான் வரதன் என்னும் கருணைக் கடலின் வெள்ளம் தாங்காமல் திருப்பதிக்கு செல்ல முடிவெடுத்தார் அந்த மகான்.

இறுதியாக வரதன் குடி கொண்டிருக்கும் கோயில் கோபுரத்தை வணங்கிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நம்பிகள் நடக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு எதிரே ஓர் ஒளிப் பிழம்பு தோன்றியது. அந்த ஒளிப் பிழம்பிலிருந்து வெங்கடேசப் பெருமாள் தோன்றினார். ‘‘ஏன் நம்பி என் மீது கோபம்? நான் என்ன செய்தேன்? பிரம்மனின் யாகத்தீயிலிருந்து வந்த எனக்கு, வெப்பம் தாங்காது என்று முப்பொழுதும் ஆலவட்ட கைங்கரியம் செய்யும் உனக்கு ஒரு நாள் நான் பந்தம் பிடிக்கக் கூடாதா?’’ கேட்டார் மாதவன்.

‘‘சுவாமி! எனக்கு பயமாகவும் கூச்சமாகவும் இருக்கிறது. எங்கே தங்களது செயலால் எனக்கு ஆணவம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன். அதனால்தான் காஞ்சியை விட்டு  வேங்கடம் செல்கிறேன்...’’ கண்ணீர் வழிய சொன்னார் நம்பிகள்.அடுத்த நொடி, வேங்கடன், வரதராக மாறினார்!வேங்கடநாதன் தோற்றத்தில் இருக்கும் தன்னை தரிசிக்கவே வேங்கடம் செல்ல நம்பிகள் முடிவெடுத்திருக்கிறார் என்று நினைத்துதான் அந்தக் கோலத்தில் நம்பிகள் முன்பு வரதர் தோன்றினார்!

இப்போது நம்பிகளின் உள்ளம் புரிந்ததால் தனது சுயரூபத்தை எடுத்தார்! ‘‘இவ்வளவுதானா..? போகப் போக உனக்கு இந்தக் கூச்சம் போய் விடும் நம்பி. என்னை விட்டு மட்டும் விலகாதே!’’ என்றபடி நம்பியை தன் மார்போடு சேர்த்து அணைத்தார் மாதவன்.‘‘தங்களை விட்டு எங்கும் விலக மாட்டேன் சுவாமி...’’ என விம்மினார் நம்பிகள்! வரதர் கோயிலில் கூட்டம் அலைமோதியபடி இருந்தது.

கதையைச் சொல்லி முடித்துவிட்டு தன்னையும் மறந்து கை குவித்தார் நாகராஜன்.‘‘பார்த்தியா கண்ணா! நம்பிகள் மேல பெருமாளுக்கு அவ்வளவு பிரியம்! கடவுள் நம்மகிட்ட அன்பைத் தவிர வேற எதையும் எதிர்பார்க்கறதில்லை. பக்தி மட்டும் இருந்தா அந்த பகவான் தன்னையே நமக்குக் கொடுப்பார்...’’ பக்தியில் தழுதழுத்தாள் ஆனந்தவல்லி. ‘‘ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்க கண்ணா... நம்ம மட்டும்தான் நம்ம சாமிய இப்படி பக்தியால கட்டுப்படுத்த முடியும். மத்த யாராலயும் இது முடியாது...’’ பெருமையுடன் சொன்னார் நாகராஜன்.

கண்ணன் வாயடைத்துப் போனான். வரதரின் கருணையைக் கேட்டதும் அவன் உள்ளம் மெழுகாக உருக ஆரம்பித்தது. அந்த உருக்கத்தின் ஊடே ஒரு கேள்வியும் உதித்தது. ‘‘தாத்தா! இந்த பக்தி பக்தினு சொல்றீங்களே... அதை கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க. பக்தியோட எந்த நிலைல சுவாமி நமக்கு இப்படி எளியவரா ஆவாரு?’’

‘‘நீ கேட்ட கேள்விக்கு வரதரோட இன்னொரு திருவிளையாடல்தான் பதில் கண்ணா...’’ என்றபடி நாகராஜன் கதைக்குள் அவனை அழைத்துச் சென்றார்.  வரதர் கோயில் இன்று போல் அன்றும் அருளை வாரி வழங்கியபடி இருந்தது.  வரதருக்கு இரவு அர்த்த ஜாம பூஜை நடந்துகொண்
டிருந்தது. நிவேதனத்திற்காக சூடான பால் கொண்டுவரப்பட்டது. அதில் ஆவி பறந்துகொண்டிருந்தது.

அடுப்பிலிருந்து இறக்கியவுடன் கொண்டு வந்துவிட்டார்கள் போலும். அதில் ஏலக்காயும் குங்குமப் பூவும் மணத்தது. சுடச்சுட அந்தப் பாலை வரதருக்கு நிவேதனம் செய்ய ஆரம்பித்தார் பட்டர். அப்போது ‘‘நில்லுங்கள்...’’ என்று ஒரு குரல் ஒலித்தது. அனைவரும் அந்த சப்தம் வந்த திசை நோக்கித் திரும்பினார்கள். அங்கு நடாதூர் அம்மாள் என்ற அடியவர் நின்றுகொண்டிருந்தார். ராமானுஜர் தனது கொள்கைகளைப் பரப்ப எழுபத்திரண்டு சிஷ்யர்களை நியமித்திருந்தார். அந்த சீட பரம்பரையில் வந்தவர்தான் இந்த மகான்.

‘‘என்ன சுவாமி, வரதருக்கு நிவேதனம் நடக்கும் போது இப்படி தடுக்கலாமா?’’ என்று சுற்றி நின்றவர்கள் கேட்டார்கள். நடாதூர் அம்மாள் என்ற அந்த மகானுக்குள் கோபம் பொங்கியது. ‘‘இவ்வளவு சூடாக வரதன் பால் அருந்தினால் அவருக்கு வாய் வெந்துவிடாது..? என்ன பூஜை செய்கிறீர்கள் நீங்களெல்லாம்..?’’ ‘ஒரு சிலைக்கு எப்படி நாக்கு வேகும்?’ என்ற அலட்சியம்தான் இந்த அபசாரத்துக்கு காரணம் என்பதைப் புரிந்துகொண்டதாலேயே அந்த மகான் கோபப்பட்டார். அந்தக் கோபமே அழுகையாக வெடித்தது.

அடுத்த கணம், அழத் தொடங்கினார். கூட்டத்தில் இருந்தவர்கள் பதற்றத்துடன் அவர் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார்கள்.
‘‘நீங்கள் என் வரதனை சிலை என்று நினைத்து இது போல் எத்தனை அபசாரம் செய்தீர்களோ..? அவனுக்கு எப்படி எல்லாம் வலித்ததோ..? அதையெல்லாம் நினைத்துதான் அழுகிறேன்...’’ என்று தழுதழுத்தார் நடாதூர் அம்மாள்.

அப்போது, ‘‘உனது பக்தியைக் கண்டு மெச்சினோம்! எனது தாயில்லாத குறையை நீக்க வந்த அரும் பக்தன் நீ்! இனி நான் உன்னை ‘அம்மா...’ என்றே அழைப்பேன்...’’ என்று அசரீரியாக பேசினார் வரதர். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார்கள். தன்னலம் பாராத பக்தியால் தெய்வத்துக்கே தாயாகி விட்ட நடாதூர் அம்மாள் என்னும் ஆண்மகனை அனைவரும் விழுந்து வணங்கினார்கள்...

‘‘கண்ணா! ஆன்மீகத்தைப் பொறுத்தவரைக்கும் நம்ம புத்தி நமக்கு கெடுதல்தான் செய்யும்! வரதரை அறிவைக் கொண்டு வெறும் சிலையா பார்த்தவங்களுக்கு பகவான் இறங்கி வரலை. ஆனா, அவரை தன்னைப் போல பாவித்து எங்க அவருக்கு வலிக்குமோனு நினைச்ச அம்மாளோட அன்பு பெருமாளை இறங்கி வரச் செய்தது!

ஒருமுறை கிருஷ்ண பரமாத்மா விதுரர் வீட்டுக்கு போனார். அப்ப கிருஷ்ணர் அமர விதுரர் ஒரு பாய் கொடுத்தார். அதுவும் உடனே இல்ல... அந்தப் பாயை திருப்பித் திருப்பிப் பார்த்து பரிசோதிச்ச பிறகு கொடுத்தார்.கிருஷ்ணருக்கு ஒரே ஆச்சர்யம். ‘ஏன் விதுரா இப்படிச் செய்யற’னு கேட்டார்.
அதுக்கு விதுரர் ‘சுவாமி! உங்களை சின்ன வயசுல இருந்து பல அசுரர்கள் பலவிதமான வேஷங்கள்ல வந்து துன்புறுத்தப் பார்த்திருக்காங்க. அதேமாதிரி இப்ப பாய்ல யாராவது மறைஞ்சிருக்காங்களானு பார்த்தேன்’னு சொன்னார்!

இந்த கட்டத்தை வர்ணிக்கறப்ப விதுரரை புத்திமான்னு (சிறந்த அறிவாளி) வியாசர் சொல்றார். ஏன்னா அவர் தன் புத்தியை கிருஷ்ணர் மேல கொண்ட அன்பு என்ற போர்வையால மூடிட்டார்!அதனாலதான் பீஷ்மருக்குக் கூட கிடைக்காத பாக்கியத்தை எல்லாம் விதுரர் அடைஞ்சார்! பாண்டவர்களுக்கு தூது போன பகவான், விதுரர் வீட்டுலதான் தங்கினாரே தவிர பீஷ்மர் வீட்டுல இல்ல!

நடாதூர் அம்மாளை மாதிரியும் விதுரர் மாதிரியும் சுவாமி மேல கண்மூடித்தனமா அன்பு வைக்கறதுதான் பக்தியோட உன்னதமான பரிபக்குவ நிலை! அந்த நிலையை அடைஞ்சா பகவானுக்கு வலி எல்லாம் கிடையாதுனு புத்தி சொன்னாலும் உள்ளுணர்வு அவருக்காக ஏங்கும்! புரிஞ்சுதா?’’ கதையையும் அதற்குள் இருந்த தத்துவத்தையும் விளக்கினார் நாகராஜன்.  

‘‘ரொம்ப அழகா பக்தில நமக்கு புத்திதான் எதிரினு புரிய வைச்சுட்டீங்க தாத்தா...’’ வியப்புடன் சொன்னான் கண்ணன். ‘‘இந்த வரதரோட மகத்துவம் கொஞ்ச நஞ்சம் இல்ல கண்ணா. ராமானுஜரை அவரோட குரு கொல்லவே முடிவு செஞ்சாரு! அந்த சதித் திட்டத்துல இருந்து, ராமானுஜரை வேடுவன் உருவத்துல வந்து காப்பாத்தினவர் இந்த வரதர்தான். ஆக, இவரை வணங்கினா உயிருக்கு வர்ற துன்பம் நீங்கும். பிரம்மாவுக்கு அவரோட பதவியை திருப்பித்தந்தவர் வரதர். அதனால அவரோட அருள் இருந்தா இழந்த பதவி திரும்பக் கிடைக்கும்.

வேதாந்த தேசிகர் என்ற மகானுக்காக இந்தக் கோயில்ல இருக்கிற பெருந்தேவி தாயார் தங்க மழையையே பொழிஞ்சா! அதனால அவளோட ஆசி இருந்தா செல்வம் செழிக்கும். கூரத்தாழ்வாருக்கு அவரோட கண்பார்வையை மீட்டுத் தந்தவரும் இதே வரதர்தான். அதனால கண் சம்பந்தமான நோய்களுக்கு வரதர் ஒரு மாமருந்து!இப்படி வரதர் பெருமையைச் சொல்லிக்கிட்டே போகலாம் கண்ணா... அதுக்கு எல்லையே கிடையாது...’’ மடை திறந்த வெள்ளம் போல் வரதர் பற்றி, தான் அறிந்ததை எல்லாம் சொல்லி முடித்தாள் ஆனந்தவல்லி.

அப்போது ‘‘கோவிந்தா! வரதா!’’ என சத்தமாகச் சொன்னார் நாகராஜன்.வரதரின் பெருமையைப் பேசியபடியே தாங்கள் மூவரும் அத்திவரதரின் முன்னிலைக்கு வந்துவிட்டோம் என்பதை கண்ணன் அப்போதுதான் உணர்ந்தான்.  மூவரும் கண்குளிர வரதனை சேவித்தார்கள். அத்தி வரதரைக் கண்ட நாகராஜனின் கண்களில் அருவியைப் போல நீர் வழிந்தது. அதைக் கண்ட கண்ணனுக்கு அவர்தான் கலியுகத்து நடாதூர் அம்மாளோ என்று தோன்றியது!

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்