சென்னை Pubs! ஒரு ரவுண்ட் அப்



‘பார்’ (Bar) என்றால் நம்மூரில் அனைவருக்கும் தெரியும். ‘பப்’ என்ற வார்த்தை எல்லோருக்கும் பரிச்சயமானது அல்ல. சென்னையில் பப் கல்ச்சர் கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக இருந்து வந்தாலும் சமீப காலங்களில்தான் பிரபலமாகி இருக்கிறது. இப்போதும் பப் என்ற வார்த்தை எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அது எப்படி இருக்கும், அங்கே என்ன நடக்கும் என்றெல்லாம் தெரியாமல், அது ஏதோ சொர்க்கலோகம் போல என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பல தேவதைகள் அரைகுறை ஆடையில் ஆடிக்கொண்டிருப்பார்கள், நாம் போனதும் நமக்காகவே காத்திருந்தது போல, நம்மை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார்கள்... என்ற எண்ணம் பல ஆண்களுக்கு இருக்கிறது!பல நாட்கள் திட்டம் போட்டு, ‘பொண்ணு பார்க்க’ப் போவது போல ‘பப்’ பார்க்க முதன் முதலாக பெரிய ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் போய் உள்ளே நுழைந்ததும் உண்மை நிலவரத்தைப் பார்த்து முகத்தில் ஒரு டன் சாணி கொட்டியது போல ஆகி ஓரமான ஸ்டூலில் அமர்ந்து 300 ரூபாய்க்கு சரக்கடித்து மட்டையாவதற்கு பதில் 3000 ரூபாய் தண்டம் அழுதுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டத்தைப் பார்த்தபடி ‘‘வாழ்க்கை என்றால் என்ன?” என்ற தத்துவ விசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்!இந்த ஏமாற்றத்தை வெளியில் சொல்லவும் அஞ்சுவார்கள்.

லேசுபாசாக ஏதேனும் சொன்னாலும், “பப்புக்கு எல்லாம் அடிக்கடி போகணும் மச்சி... அப்பதான் ஃபிகர் செட்டாகும்...’’ என்று பாடம் அடித்துக் கொண்டிருப்பார் சீனியர் பப் சிட்டிசன்!அவர் வரலாற்றை ஆராய்ந்தால்... கடந்த ஐந்து வருடங்களாக பப்பில் ஃபிகர் தேற்றும் முயற்சியில் ஈடுபட்டு சுமார் ஆறு லட்ச ரூபாய்களை அவர் பப்பில் முதலீடு செய்து  வைத்திருப்பது தெரியும்!

ஆண்களுக்கு இதில் என்ன சிக்கல் என்றால் எந்த ஃபிகரும் இதுவரை பப்பில் செட் ஆகவில்லை என்று சொல்லி விட்டால், தன்னை கேவலமாக நினைப்பார்கள் என்ற அச்சத்தில், “அந்த பப் சூப்பரா இருக்கும்...’’, “இந்த பப்பில் சின்ன பொண்ணுங்களா வருவாங்க...’’, “அந்த பப்பில் எலீட் க்ரௌட் வரும்...’’ என்றெல்லாம் பீலா விட்டுக் கொண்டு திரிவார்கள்!

இன்னும் கொஞ்சம் புளுகு மூட்டையைக் கோர்த்து, ஒரு பெண்ணிடம் பேசி நம்பர் வாங்கியதாகச் சொல்வார்கள். ஒரு பெண்ணை முத்தமிட்டதாகக்
கண் சிமிட்டுவார்கள். ஒரு பெண் மட்டையாகி விட்டதாகவும், தான்தான் தூக்கிக்கொண்டு போய் அறையில் விட்டதாகவும் சொல்வார்கள்!“அப்புறம் என்னடா ஆச்சு?’’ என்றால் மர்மமாகச் சிரித்து வெட்கப்படுவார்கள்!

இதையெல்லாம் பார்க்கும் பப் காணா இளைஞர்களுக்கு கிளுகிளுப்புடன் கூடிய வெறி ஏறும். ‘‘கூட்டிட்டு போ மாப்ள...’’ என கெஞ்ச ஆரம்பிப்பார்கள். ஒரு நாள் அழைத்துக்கொண்டு போவார் சீனியர் பப் சிட்டிசன். அங்கே வாசலில் நிற்கும் பவுன்சர் சல்யூட் அடிப்பார். சீனியர் பெருமையாகப் பார்ப்பார்.

தினமும் இருநூறு, முந்நூறு பவுன்சருக்கு தண்டம் அழுது வாங்கிய சல்யூட் அது என்பது புது வரவுகளுக்குத் தெரியாது!பவுன்சர், பேரர் தனக்கு சல்யூட் அடிப்பதை என்னமோ ஐநா சபையின் அங்கீகாரத்துடன் கூடிய மரியாதையாக நினைக்கும் பலர் இருக்கிறார்கள்!  
ஆண்கள் கதை இப்படி என்றால், பெண்கள் கதை வேறு வகை.

இப்போது மிடில் க்ளாஸ் லெவலில் வாழும் அனைத்துப் பெண்களுக்குமே பப்பை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் பக்கட் லிஸ்ட்டில் இருக்கிறது. இவர்களது நோக்கம், அங்கே மற்றவர்கள் நடனமாடுவதைப் பார்க்க வேண்டும், வேறு ஏதேனும் கசமுசா நடந்தால் அதையும் தரிசிக்க வேண்டும்... என்பதாக இருக்கிறது!

ஒரு சிலருக்கு, இராஜ குடும்பத்தைச் சேர்ந்த இராஜகுமாரன் தன்னிடம் வந்து தன்னைப் பற்றியும், தன் அழகைப் பற்றியும் பேசிப் புகழ்வான் என்ற அடிமன ஆசையும் இருக்கிறது!உண்மையில் ‘பப்’ என்றால் என்ன? சென்னையில் ‘பப்’ எப்படி இருக்கிறது ?பப் என்றால் சாதா சாராயம் இல்லாமல் நிபுணர்களால் கலக்கப்பட்ட உயர் ரக சாராயம் வழங்கப்பட வேண்டும். அந்த சாராயத்தை அமர்ந்து குடிக்க நல்ல வசதியான இருக்கைகளும் ரம்யமான சூழலும் இருக்க வேண்டும். நல்ல தரமான இசை ஒலிக்க வேண்டும். ஜாஸ், ராக், மெட்டல், பாப் அல்லது ஹிப் ஹாப் என ஏதேனும் ஒரு வகையான இசை இசைத்தல் நலம்.

ஒரு தீம் தேர்ந்தெடுத்தும் இசையை ஒலிக்கச் செய்யலாம். இதில் டீஜே அல்லது லைவ் பேண்ட் மாறி மாறி ஏற்பாடு செய்வார்கள். ஆடுவதற்கு ‘டேன்ஸ் ஃப்ளோர்’ கட்டாயம் இருக்க வேண்டும். உலக அளவில் பல பப்களில் ‘சைட் டிஷ்’ எனப்படும் எந்த அயிட்டமும் கொடுக்க மாட்டார்கள். வெறும் மது மட்டும்தான். நம்மூரில் தடாலடியாக அந்த முடிவை எடுக்க முடியாது என்பதால், ‘க்யுக் பைட்ஸ்’ எனப்படும் சிறிய அளவிலான உணவுகளைக் கொடுக்கலாம்.

ஆனால், இங்கே நடப்பது என்ன ?

சென்னையின் மையத்தில் மேம்பாலத்துக்கு அருகே இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியின் பப், ஏசி போட்ட 8ம் நம்பர் சாராயக்கடை! அவ்வளவுதான்.
அந்த இடத்தை எப்படி வர்ணிப்பது?

சென்னை சென்ட்ரலில் வெளியூர்களுக்கு செல்வதற்கு டிக்கெட் வாங்கும் இடத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி இருக்கும்!நிற்க இடம் இருக்காது. நடனம் ஆடினால் வழுக்கி விழவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் யாராவது வாழைக்காய் பஜ்ஜி ஆர்டர் செய்து கீழே தவற விட்டிருப்பார்கள்! அதன் மீதேறி வழுக்கி விழுவீர்கள்.

அதிகாலை ஐந்து மணி வரை இப்போது ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். காலை மூன்று மணிக்கு சென்று பார்த்தீர்கள் என்றால், வெளியே இளைஞர் கும்பல் நின்றுகொண்டு ‘அண்ணா... அண்ணா... ப்ளீஸ்ணா... உள்ள விடுங்கண்ணா...’ என்று பவுன்சர்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பார்கள்.ஏன் கெஞ்சுகிறார்கள் என்று கேட்கிறீர்களா?

பப்பில் ஜோடியாகத்தான் நுழைய வேண்டும் என்ற விதிமுறையை வகுத்திருக்கிறார்கள். ஜோடி இல்லாத இளைஞர்கள்தான் வெளியே நின்று கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். பப்புக்குள் நுழைய நுழைவுக்கட்டணம் உண்டு. இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை இருக்கும். இதிலேயே ‘கவர் சார்ஜஸ்’ என்று ஓரளவு ஒதுக்கி இருப்பார்கள். உதாரணத்துக்கு மூவாயிரம் ரூபாய் நுழைவுக் கட்டணத்தில், இரண்டாயிரம் ரூபாய் கவர் சார்ஜஸ் என்று இருக்கலாம். அந்த இரண்டாயிரம் ரூபாய்க்கு மதுவோ உணவோ வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் இதன் அர்த்தம்.

இரண்டாயிரம் ரூபாய்க்கு 200 ரூபாய்க்கான மதுவைத்தான் உள்ளே கொடுப்பார்கள்! இங்கே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ஏதுமில்லை. ஆள் தெரிந்தால் இலவசமாகவே உள்ளே போய் விடலாம். பவுன்சர் மூடுக்கு ஏற்றாற்போல 2000, 3000, 4000 என வாய்க்கு வந்த கட்டணத்தை வாங்கிக் கொள்வார்.

ஜோடி இல்லையெனில் அனுமதிக்க மாட்டார். சமயத்தில் அனுமதிக்கவும் செய்வார். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல ஏக போக அதிகாரத்தில் என்னென்னவோ செய்து கொண்டிருப்பார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்படிச் செய்தால் நாம் பொறுத்துக்கொண்டு போகிறோம். நியமனம் செய்யப்பட்ட ஒரு பவுன்சர் எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் போல ஏகபோக அதிகாரத்தில் அவர் இஷ்டத்துக்கு கோமாளி போல நடந்து கொள்கிறார்? அதையும் நம் சென்னை மக்கள் எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள்? புரியவில்லை.

இவ்வளவு பணம் கொடுத்து கெஞ்சிக் கூத்தாடி உள்ளே நுழைந்தால் ஸ்மோக்கிங் ஏரியாவில் கொசு புடுங்கி எடுக்கும்! பப்பின் உள்ளே என்ன நடக்கிறது? என்ன மாதிரியான இசை ஒலிக்கிறது? எப்படி நடனமாடுகிறார்கள்? எப்படி நடந்து கொள்கிறார்கள்? பெண்களுக்கு பாதுகாப்பானதா? உள்ளே போனால் ஜோடி இல்லாதவருக்கு ஜோடி கிடைக்கிறதா..?

அடுத்த வாரம் பார்க்கலாம்!                   

அராத்து