பகவான் -38



பறக்கும் பகவான்!

ஏதென்ஸ் நகரிலிருந்து விண்ணுக்கு பறந்த பகவானின் ஜெட் விமானத்துக்கு எங்கே தரையிறங்குவது என்று ஆணை பிறப்பிக்கப்படவில்லை.பகவான் விண்ணிலேயே பறந்து கொண்டிருந்த நிலையில், கலையின் தாயகமான பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸ் பரபரப்படைந்தது. அவருடைய அடுத்த இலக்கு பாரிஸ்தான் என்று அதற்குள்ளாகவே ஊடகங்கள் எழுதத் தொடங்கியிருந்தன.

அதற்கு ஏற்ப பிரான்ஸில் இருந்த பக்தர்கள், அந்நாட்டு அரசாங்கத்தோடு அவசர கால பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஒருசில நாட்களுக்கு தங்கிக்கொள்ளலாம். நிரந்தரமாக ‘கொட்டாய்’ போட அனுமதிக்க முடியாது என்று பிரான்ஸ் அரசாங்கமும் கண்டிப்பு காட்டியது. அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள எந்த ஐரோப்பிய நாடுமே தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம்.

பகவானின் அடுத்த இலக்கு சுவிட்சர்லாந்து. 1986, மார்ச் 6ம் தேதி ஓஷோவும் அவரது குழுவினரும் சுவிட்சர்லாந்தில் தடம் பதித்தனர். ஆரம்பத்தில் ஒரு வாரகாலத்துக்கு தங்கிக்கொள்ளலாம். அதற்குள் நிரந்தர இடம் கிடைப்பதற்கு பேசிக்கொள்ளலாம் என்றனர். சுவிட்சர்லாந்து நாட்டையே இயற்கை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதால், இங்கேயே தங்கிக்கொள்ள ஓஷோவும் விரும்பினார்.

ஆனால் -கடல் கடந்த நாடு ஒன்றிலிருந்து சுவிட்சர்லாந்தின் வெளியுறத்துறை அமைச்சருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர் உடனே பதறிப்போய் ‘எல்லோரும் உடனே வெளியேறுங்கள்’ என்று அலறியதாகவும் தகவல்.

இதிலென்ன ரகசியம்?

கடல் கடந்த அந்த நாடு அமெரிக்காதான்!ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உலகின் நம்பர் ஒன் வல்லரசு, ஒரு சாதாரண சாமியாரைக் கண்டு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடுநடுங்கி இருக்கிறது. ஒரு தீவிரவாதியைக் கையாளுவதைப் போல,அன்பைப் போதித்தவரை உலகின் எல்லையை விட்டு துரத்த முயற்சித்திருக்கிறார்கள். ‘புதிய மனிதன்’, ‘புதிய உலகம்’ என்கிற ஓஷோவின் இலட்சியங்களை தங்களது உலகளாவிய அதிகாரத்துக்கு எதிரான சிந்தனைகளாகக் கருதியிருக்கிறார்கள்.

“ஜெர்மனியைக் கேளுங்கள்...” என்றார் ஓஷோ.அவருக்கு ஜெர்மனி மீது கொஞ்சம் மரியாதை இருந்தது. என்ன இருந்தாலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அவர்கள் செயல்படுவார்கள் என்று கருதினார்.

ஆனால் - அமெரிக்காவின் மற்ற அடிவருடி நாடுகளைவிட மோசமாக நடந்துகொண்டது ஜெர்மனி.ஓஷோ தங்கள் நாட்டுக்குள் நுழைந்தால் அது உள்நாட்டுப்பாதுகாப்பையே கேள்விக்குரியதாக்கிவிடும் என்று விசித்திரமான, அபாண்டமான ஒரு காரணத்தைச் சொன்னார்கள்.

‘விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம், அனுமதி கொடுங்கள்...’ என்று கேட்டதற்குக்கூட, ஓஷோ ஒரு நிமிடம் இங்கிருந்தாலும் எங்கள் நாடு நாசமாகி விடும் என்று அலறினார்கள்.லண்டனில் வசித்து வந்த இந்தியர்கள் இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டு பதறினார்கள்.“இங்கே வாருங்கள். இங்கிலாந்து ராணி உங்களை மரியாதையோடு நடத்துவார்...” என்று செய்தி அனுப்பினார்கள்.ஓஷோவின் பரிவாரம் லண்டனுக்குக் கிளம்பியது.

பகவானும், அவருடன் வரும் பக்தர்களும் தங்குவதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் அங்கிருந்தவர்கள் செய்து வைத்தனர்.விமான நிலைய வாசலில் பெரும் வரவேற்பு தரவும் திரண்டனர்.ஆனால் -ஓஷோவைத் துரத்திக் கொண்டே இருந்த அதிகாரம் அங்கும் அவரை அவமானப்படுத்தியது.

முதலில் ஓஷோவின் மருத்துவரான அமெரிக்கரை விமான நிலைய அதிகாரிகள் மிகவும் மோசமாக நடத்தினார்கள். ஒரு கொலைகாரனைக் குறுக்கு விசாரணை செய்வது மாதிரி கேள்வி மேல் கேள்வி கேட்டனர். அவருக்கு உதவுவதற்காக ஆஸ்திரேலியாவில் வக்கீலாக இருந்த பக்தர் ஒருவர் அதிகாரிகளுடன் பேசினார்.

“எங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிட்டு எங்களையே கேள்வி கேட்கிறாயா? உள்ளே தள்ளிவிடுவோம்...” என்று அந்த வக்கீலை அதிகாரிகள் நேரடியாகவே மிரட்டினார்கள்.அமெரிக்க மருத்துவரோடு, இன்னொரு அமெரிக்கரையும் கைது செய்வதாக போதுமான காரணங்கள் இன்றி அறிவித்தனர்.

விமான நிலையத்திலேயே தங்களை இந்தளவு அவமரியாதை செய்பவர்கள், அங்கே தங்கியிருக்கும் காலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை பகவான் உணர்ந்தார்.

“நாங்கள் வேறெங்காவது செல்கிறோம். உங்கள் நாட்டுக்குள்ளேயே வரவில்லை. நீண்ட பயணத்தின் காரணமாக களைப்பாக இருக்கிறோம். இங்கிருக்கும் விருந்தினர் அறையில் மட்டும் சில மணி நேரம் தங்கி இளைப்பாற அனுமதியுங்கள்...” என்று கேட்டனர்.ஓஷோவையும், அந்த இரண்டு அமெரிக்கர்களையும் சிறைச்சாலை மாதிரியிருந்த ஓர் அறையில் அடைத்தனர். அங்கு உறங்குவதற்கான எந்த வசதியுமில்லை.
தரையில் துண்டு விரித்து பகவான் கண்களை மூடினார்.

இரவு முழுக்க அவரையே பார்த்துக் கொண்டு விழித்திருந்தனர் அந்த அமெரிக்க பக்தர்கள்.இதற்கிடையே இங்கிலாந்து அரசாங்கம், அங்கிருந்த இந்தியத் தூதரைத் தொடர்பு கொண்டது.“ஓஷோ உங்கள் நாட்டவர்தானே? அவரை நீங்கள் திருப்பி அழைத்துக் கொள்ளுங்கள்...” என்று யோசனை சொன்னது.அந்த நள்ளிரவில் தில்லியைத்தொடர்பு கொண்டார் தூதர்.

“ஓஷோவை மட்டும் இந்தியாவுக்கு அனுப்புங்கள். அவருடன் இருக்கும் மற்ற வெளிநாட்டு பக்தர்களின் பிரச்னையை இங்கிலாந்து பார்த்துக்கொள்ளட்டும்...” என்று விட்டேத்தியான பதில் வந்தது.பகவானைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே எல்லா நாடுகளின் நோக்கமாக இருந்ததை ஓஷோவும், அவருடைய குழுவினரும் புரிந்துகொண்டார்கள்.

இவ்வளவு பெரிய உலகில் ஒரே ஒரு நாடுகூட அறத்தோடு நடந்துகொள்ளத் தயாராக இல்லையே என்று வேதனைப்பட்டனர்.தூங்கிக் கொண்டிருந்த ஓஷோவை அவசர அவசரமாக அதிகாரிகள் எழுப்பினார்கள்.“நாளை மதியம் வரை நீங்கள் இங்கே இருக்கலாம். அதற்கு மேலும் இருந்தால் உங்களை வலுக்கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்புவோம்...” என்று எச்சரித்தனர்.

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னை நம்பி தன்னுடனே எல்லா கஷ்டங்களையும் தாங்கி நிற்கும் சிஷ்யர்களுக்கு துணையாக, தான் இருக்க வேண்டும் என்று பகவான் நினைத்தார்.இதற்கிடையே தற்காலிக ஏற்பாடாக கரீபியன் தீவுகளில் பகவானின் குழுவினர் தங்கிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இங்கிலாந்து விடுத்த கெடுவுக்குள் ஜெட் விமானம் கிளம்பியது. எரிபொருள் நிரப்பிக் கொடுப்பதற்குக்கூட அவர்களுக்கு மனமில்லை. வழியில் அயர்லாந்து நாட்டின் அழகிய நகரமான ஷனானில் எரிபொருளுக்காக விமானம் தரையிறங்கியது. அந்நகரில் தங்குவதற்கு மூன்றுவார காலத்துக்கு பகவான் விசா பெற்றிருந்தார்.

புதியதாக உருவாகியிருந்த அந்த நகரில் ஒரு சுமாரான ஹோட்டலில் பகவானும், அவரது பக்தர்களும் தங்கினர்.இவர்கள் ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததுதான் தாமதம். அந்த ஹோட்டலையே போலீஸார் ஆயுதங்களோடு சுற்றி வளைத்தனர்.

“எந்த நாடும் உங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்றால் நீங்கள் எப்படிப்பட்ட குற்றவாளிகளாக இருக்க வேண்டும். உடனே எங்கள் நாட்டிலிருந்து கிளம்புங்கள்...” என்றனர்.
இதுவரை சந்தித்த அவமானங்களை எல்லாம் ஏற்றுக்கொண்ட ஓஷோ, இம்முறை பதிலடி கொடுக்க விரும்பினார்.

அதிகாரத்தில் இருக்கும் சிலரின் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக சட்டமும், அற நெறிமுறைகளும் செல்லாக்காசாகிக் கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்று கர்ஜித்தார்.முறையாக விசா பெற்று தங்கியிருக்கும் தங்களை போலீஸார் சட்டத்துக்குப் புறம்பாக வெளியேறச் சொல்கிறார்கள் என்று அங்கிருந்த நீதிமன்றத்தில் முறையிட்டார்.உடனே அயர்லாந்து அரசாங்கம் விழித்துக் கொண்டது.

பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.முடிந்தவரை ஓஷோவை சிக்கலின்றி தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற பக்குவமாக நடந்து கொண்டது.இதற்கிடையே கரீபியன் தீவுகளில் பகவானை செட்டில் செய்வதற்காக ஓஷோவின் பக்தர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தது.

இது தெரியாமல் அயர்லாந்து அரசு அதிகாரிகளோடு பகவான் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது.ஓர் ஆன்மீகவாதி ஆசிரமம் அமைத்துத் தங்குவதற்கு உலகமே எதிர்ப்பு தெரிவித்தது ஓஷோ விவகாரத்தில் மட்டும்தான்!ஒரே ஒரு நாடு மட்டும் பகவானை வரவேற்க விரும்புவதாக தாமாக முன்வந்து அறிவித்தது!

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்