கவிதை வனம்மினுக்கட்டான் பூச்சி

வசந்தம் என்பதுன்
வருகை மட்டுமே
என்றிருந்த வனத்தின்
பூ மரம் நான்
முகம் பார்த்தசைந்த
தென்னையை
முறித்திடும் காற்றின்
கைகளுனது.

அறைந்து கொன்ற
சிறு பறவையின்
அதிர்ச்சியொத்த
என் கேவலை
கேட்டபடியே
பிரிந்தாய் சீழ்க்கையுடன்.

அன்பின்
வர்ணங்களிறைத்து
முன்பு தீட்டிய உன்
பிம்பமழிக்கும்
வகைமை தெரியவில்லை
எனக்கு.

இருள் மேடை ஔியேற்ற
திரியாக வா கரமாகிறேன்
என்ற உன் சொற்களேந்தி
காத்திருக்கிறேன் இன்னும்.

- கயல்


கிளி அமர்ந்த கிளை

அந்தக் கிளை இன்னும்
ஆடிக் கொண்டிருக்கிறது
உதிர்ந்திருந்த
மருதம் பழங்களின்
கொறித்த துகள்கள்
வந்தமர்ந்து விட்டுச்
சென்ற கிளியை
அடையாளப்படுத்துகின்றன.

- வே .முத்துக்குமார்