ஜெர்மனி தேவாலயத்தில் லலிதா சகஸ்ரநாமத்தை பாடியிருக்கேன்..!



சொல்கிறார் அருணா சாய்ராம்

கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் மிகப் பெரிய கௌரவமாகக் கருதும் சென்னை மியூஸிக் அகடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதை இந்த வருட இசைவிழாவில் பெறுகிறார் பாடகி அருணா சாய்ராம். ஏறத்தாழ கடந்த 15 ஆண்டுகளாக ரஜினி படத்தின் முதல் காட்சிபோல் சபாக்களில் கூட்டம் அலைமோதுவதே அவரது அசுர வெற்றியை அடித்துச் சொல்லும். அழுத்தமான இசைக்கு சொந்தக்காரரான அருணாவிடம் பேசுவது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். அதில் அனாவசிய பாசாங்கு துளியும் இல்லை!

ஒரு காலத்தில் பெரிய கூட்டமில்லாமல், அங்கீகாரமில்லாமல் போராட்ட வாழ்க்கை. இன்று அதே தமிழகத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். பெரிய பெரிய விருதுகள். இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

என்ன சொல்றது? பகவான் கருணை. தமிழ் மக்களை நான் நம்பினேன். அவர்கள் என்னையும், என் சங்கீதத்தையும் கைவிடவில்லை. சென்னையில் குடியேறுவதற்கு முன்பு, மும்பையிலிருந்து வந்துட்டு போவேன். கச்சேரிக்கு ஆடியன்ஸ் வருவது மாதிரி இல்லை. எப்படி இவர்களைக் கவரப்போறோம்னு லேசா கவலை வந்தாலும் எந்த நிமிஷத்திலும் நம்பிக்கை இழக்கவில்லை. என் தவறுகளை ஒண்ணு ஒண்ணா திருத்திக்கொண்டேன். கச்சேரியில் ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள் என்று ‘ஸ்டடி’ பண்ணினேன். ஒரேடியாக பெரிய கூட்டம் வரணும் என்று அப்ப ஆசைப்படவில்லை.

பத்துப் பத்து பேரா அதிகப்படுத்தணும்னு திட்டமிட்டேன். அதாவது அங்குலம் அங்குலமா நகரப் பார்த்தேன். காரணம், நான் எப்பவுமே பேராசைப்படுவதில்லை. என் வாழ்க்கை இன்றுவரை சிம்பிளாதான் போகிறது. கூட்டம் மெதுவா என்னை திரும்பிப் பார்ப்பதை உணர்ந்தேன்; சரியா சொன்னால் 2000ம் வருஷத்திலிருந்து! இப்போ ‘அருணா கச்சேரிக்கு நிற்க இடமில்லை, சாய சுவரில்லை’ என்று பத்திரிகைகள் எழுதறதை படிக்கும்போது கண்கள் கலங்குகிறது. பெரிய கூட்டம். பெரிய பரிசுகள். இப்போ மகுடம் வைத்தது போல சங்கீத கலாநிதி. இந்தப் பயணத்தில் எத்தனையோ பேர் எனக்கு பின்னே இருந்து உதவி செய்திருப்பதை மறக்க மாட்டேன்.

பெண்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கே.. எப்படி அந்த மேஜிக்?

சமமாகத்தான் வருகிறார்கள். சில கச்சேரிகளுக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கலாம். ஒரு ரகசியத்தை சொல்லட்டுமா? நான் கச்சேரியில் உட்காரும்போது ‘இதைத்தான் பாடணும், இது வேண்டாம்’ என்று பெரிய திட்டமெல்லாம் போடுவதில்லை. அடிப்படையா லேசா பிளான் பண்ணிட்டு மேடையில் அமர்ந்துவிடுவேன். பல சமயங்களில் மக்கள் ‘மூடு’க் கேற்ப பாடறேன். ரசிகர்களிடமே கேட்பேன், ‘இந்தப் பாட்டை பாடட்டுமா?’ என்று. ‘என்ன கவி பாடினாலும் பாடுங்கள்’ என குரல் வரும்.. அல்லது சீட்டு வரும்.

மகாகவி பாரதி ரசிகர்கள் ‘சின்னஞ்சிறு கிளியே...’ கேட்பார்கள். இப்படி விருப்பம் வரிசையா வரும்போது முடிந்தவரை அதை பாடிவிடுவேன். ஒரு பாடலை பாட முடியாவிட்டால் அதை மைக்கில் சொல்லி ‘அடுத்த கச்சேரியில் நிச்சயம் உண்டு...’ என்பேன். பல பெண்கள் தங்களது அக்காவாக, சித்தியாக, அத்தையாக, என்னை பாவிக்கிறார்கள். நான் என்றுமே ‘கெத்து’ காட்டுவதில்லை. அது எனக்கு தெரியவும் தெரியாது. இந்த அன்பே ரசிகர்களிடம் ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்திவிடுகிறது. நீங்கள் சொன்ன ‘மேஜிக்’ அதுவாக இருக்கலாம்!

பெரிய தொகைக்காக கிறிஸ்துவ மதப் பாடல்களாக கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை ‘உல்டா’ செய்து சிடிகளாக போடுவதாக இசைக் கலைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறதே?

இப்படி பலர் பாடியிருப்பதாக ஒரு குற்றசாட்டு எழுந்தது. நிச்சயமா அதில் நான் இல்லை. சிங்கிள் சிடி கூட அப்படி நான் ரிலீஸ் செய்ததில்லை. ஆனால், தவறுதலாக என்மீதும் குற்றச்சாட்டு வந்தது. அப்போதே மறுத்தேன். அதற்காக கூவிக் கூவி சொல்ல முடியாது. இதற்கு நேர்மாறாக, ஜெர்மனியில் ஒரு தேவாலயத்தில் ‘லலிதா சகஸ்ரநாம’த்தைப் பாடியிருக்கேன். அதுவும் அவர்கள் கர்ப்பக்கிரஹம் போன்ற இடத்தின் கீழே உள்ள இடத்தில். அந்த ஊர் கலைஞர்கள் பக்கவாத்தியம் வாசித்தனர். தவிர, இப்படி மற்ற மதப் பாடல்களைப் பாடுவதெல்லாம் அவரவர் மனப்பான்மை. அவரவர் சுதந்திரம். நான் என்ன சொல்ல முடியும்?

‘கர்நாடக இசை ஒரு குறிப்பிட்ட சாராரிடமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அது பரவலாக்கப் படவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?

எனக்குக் கூடத்தான் ஆரம்பத்தில் ரசிகர்கள் பெரிதாக வரவில்லை. அப்புறம் வந்தார்களே... நல்ல மியூஸிக்கை நாம் தந்தால் தேடிட்டு வருவார்கள். யாரும் தடுக்க முடியாது. அதாவது நம் இசையே ஈர்க்கப்பட வேண்டும். இன்றைக்கு வாழ்க்கை ரொம்பவும் சிக்கலாகப் போய்விட்டது. புதுப் புது பிரச்னைகள். அவற்றிலிருந்து மீண்டு வருவது கஷ்டமாகிவிட்டது. இசையே அதற்கு ஒரே மருந்து!

பழைய குற்றச்சாட்டுதான்! தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களான நீங்கள் எல்லாம் சமஸ்கிருதத்தையும், தெலுங்கையும் பிரதானமாகப் பாடிவிட்டு தமிழை துக்கடாவாகப் பாடுவது நியாயமா?

எப்படி இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கலாம்? அப்படி பாடுகிறவர்களிடம் கேளுங்கள்! தாய்மொழி தமிழை அனுபவிச்சு பாடறவள் நான். துக்கடாவாக இல்லை! மெயின் கீர்த்தனையையே பெரும்பாலும் தமிழில்தான் பாடறேன். ‘தாயே யசோதா...’, ‘எந்நேரமும் உன் சன்னதியில்...’, ‘பிறவா வரம் தாரும்...’, ‘ஏன் பள்ளி கொண்டீரய்யா...’ இப்படி எத்தனை கற்கண்டு தமிழ்ப் பாடல்களை தொடர்ந்து பாடறேன்! திவ்யப் பிரபந்த பாசுரங்களை விடாமல் பாடறேன். எம்.எஸ். அம்மா பிரபலப்படுத்திய ‘குறையொன்றுமில்லை....’ பாடறதுக்கு முன்னாடி என்ன செய்வேன் தெரியுமா?

குலசேகர ஆழ்வாரின் பாசுரமான ‘மீனாய் பிறந்தாலும்...’ பாடி அப்புறம் ‘நின் கோவிலின் வாசல் படியாய் கிடந்து நின் பவளவாய் காண்பேனே...’ பாடி அப்புறம் இந்த இரண்டு பாசுரங்களையும் இணைப்பது போல ‘மீனாய் கிடந்தாலும், படியாய் கிடந்தாலும் குறையொன்றுமில்லை...’ என்று நிறுத்துவேன். கைதட்டல் அதிரும். எழுச்சியே வரும்! அப்புறம் நம்ம வடலூர் வள்ளலாரை அவ்வளவு பாடியிருக்கேன். ‘பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்...’ கேட்கவே ஒரு கூட்டம் உண்டு. தமிழோடு வாழ்பவளைப் பார்த்து இப்படிக் கேட்டுவிட்டீர்களே!

‘உங்கள் பாட்டில் பெண்களுக்கேயுரிய மென்மை இல்லை. ஆம்பிளைத்தனமாக பாடுகிறீர்கள்...’ என்று குற்றம் சாட்டப்படுகிறதே?

என்னைப் பொறுத்தவரை இதை ‘பாராட்டாக’ எடுத்துக் கொள்கிறேன். ‘ஆண்கள் அதட்டி பாடணும், பெண்கள் பதவுசா பாடணும்’ என்கிறவர்களைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது. அது என்ன எழுதப்படாத சட்டமா? ஒரு பல்லவியிலோ, ஸ்வரத்திலோ ஏகப்பட்ட கணக்கு வழக்குகளை வைத்து மிரட்ட எங்களால் முடியாதா? அடிச்சுப் பாடறதுதான் என் வழி. என் பாணி.

நான் மும்பையில் இருந்தபோது பாவாடை சட்டை போட்ட காலத்திலிருந்து முரட்டு சங்கீதத்தை கேட்டுக் கேட்டு வளர்ந்தவள். குறிப்பா டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் போன்ற நாதஸ்வர மேதைகளின் ராக ஆலாபனையைக் கேட்டு வளர்ந்தவள்! அந்த சங்கதிகளை வாய்ப்பாட்டில் கொண்டு வருவது மகா கஷ்டம். தினமும் முயற்சி பண்ணுவேன்.

நான் பாடுவது அந்த நாதஸ்வர பாணி. மதுரை சோமு அண்ணா அப்படித்தான் வாய்ப்பாட்டில் கொண்டு வந்தார். அவரது பைரவியையும், தோடியையும் மும்பை ஷண்முகானந்தா ஹாலில் கேட்டு ‘இப்படியும் பாட முடியுமா...’ என்று திகைச்சுப் போயிருக்கிறேன். அதனால்தான் அவரது ஹிட்களை மறக்காமல் பாடறேன். ஆக, நான் இப்படித்தான் பாடமுடியும். ரசிகர்களும் இதையேதான் எதிர்பார்க்கிறார்கள்!

உங்கள் கச்சேரிகளின் கடைசியில் மராத்தி மொழியில் அமைந்த ‘அபங்’ நிச்சயம் உள்ளது. எப்படி வந்தது இந்த ‘அபங்’ காதல்?

அபங் என்பது பஜனை பாடல்கள் அல்லது நாமசங்கீர்த்தனம்தான். மகாராஷ்டிராவில் பாமர மக்களுக்கான பாட்டு. பந்தர்பூரிலுள்ள பாண்டுரங்கனை தரிசிக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாடிக்கொண்டே நடந்து செல்வார்கள் பக்தர்கள். குறிப்பா ஆலந்தி, தேஹிரு, பைட்கண் ஆகிய ஊர்கள் முக்கியமானவை. அங்கே ஒன்று சேர்ந்துதான் பந்தர்பூர் கிளம்புவார்கள். அவர்கள் யாத்திரையின் போது பாட்டோடு டான்ஸும் இருக்கும். மராத்தியில் அமைந்த அந்த பக்திப் பரவச பாட்டுகள்தான் அபங். கேட்கவே ஆனந்தமா இருக்கும். சின்ன வயதிலிருந்தே அதைக் கேட்டு வளர்ந்ததால் ஒரு ஈர்ப்பு. நம்மூரில் அந்த அபங்கை ஏன் அறிமுகப் படுத்தக்கூடாது என்ற ஆசையால் செய்தேன். எனக்கு எப்பவுமே ரிஸ்க் எடுக்கப் பிடிக்கும். பெரிய வரவேற்பு... இன்று வரை தொடர்கிறது!

அண்மையில் ஜெருசலேம் சென்றிருந்தீர்களே! என்ன பாடினீர்கள்?

நம்ம கர்நாடக சங்கீதம்தான்! இஸ்ரேல் அரசு ஏற்பாடு செய்திருந்த சர்வதேச இசைவிழா அது. பல நாட்டுக் கலைஞர்கள் வந்திருந்தார்கள். இந்தியாவிலிருந்து நான் போனேன். நம் சங்கீதத்தை உள்ளூர் மக்கள் அவ்வளவு ரசித்தார்கள். மதுரை மீனாட்சி மேல் ஒரு கீர்த்தனை பாடினேன். அப்புறம் ‘வேலை பணிவதே என் வேலை’ என்று முருகன் மேல ஒரு பல்லவி பாடினேன். அதாவது தமிழை இஸ்ரேலிலும் விடவில்லை. கடைசியா, அந்நாட்டின் ‘ஹீப்ரு’ மொழியில் அவர்களது பாரம்பரிய பாடல் ஒன்றைப் பாடினேன். இயற்கையைப் பற்றிய பாடல் அது. நம்ம கர்நாடிக் பின்னணியோடு பாடினது அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போக, விடாமல் கை தட்டியபோது நிஜமாகவே உடம்பு சிலிர்த்தது.

- வி.சந்திரசேகரன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்