பெண்மை பேசுவதில் நாட்டுக்கே முன்னோடி



தமிழ் சமூகத்தில் பெண்களுக்கான இடம் பெரும்பாலும் குடும்பத்தில்தான். அதைத் தாண்டி இலக்கியங்கள் பெண் பெருமை பேசுவதுண்டு. ‘மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்’ என்றெல்லாம் பாடினார்கள்.
அதெல்லாம் ஏட்டில் மட்டும்தான்.தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டு, ‘ஆண் - பெண் சமத்துவம்’ என்கிற கருத்தாக்கத்தை தன் கொள்கையாகவே முன்வைத்தார். தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனத்தை மிகவும் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார். பெண்களுக்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் இட்டார்.

அவருடைய கனவுகளுக்கு சட்டவடிவம் கொடுக்கக்கூடிய அரும் பாக்கியம், கலைஞர் அவர்களுக்கே கிடைத்தது. கலைஞர் ஆட்சியில் இருந்த காலத்தில் வாழ்ந்த பெண்கள்தான் மங்கையராய்ப் பிறந்ததற்கு மாதவம் செய்தவர்கள். அவருடைய சட்டங்களால் பலன் பெற்ற பயனாளி என்கிற வகையில் என் நன்றி கலைஞர் அவர்களுக்கு என்றுமே உண்டு.

குடும்ப மரபாக வரும் சொத்தில் ஆண் வாரிசுகளைப் போலவே, பெண்களுக்கு சம உரிமை உண்டு என்கிற சட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக அவர் நிறைவேற்றியபோது அவர் சந்திக்காத எதிர்ப்புகளே இல்லை. வாக்கு அரசியலுக்காக இந்த சட்டத்தை அமலாக்குவதில் அவர் சமரசமே செய்துகொள்ளாமல் உறுதியாக இருந்தார்.

வறியவர்களுக்கு ஏது சொத்து? அப்படியிருக்க அதில் ஏது பங்கு? அத்தகைய எளிய குடும்பங்களில் பிறந்தவர்களின் முன்னேற்றத்துக்காக கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகிய துறைகளில், பெண்களின் இருப்பைத் தக்கவைக்கும் திட்டங்களையும், சட்டங்களையும் உருவாக்கினார்.

இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அவர் அமல்படுத்தியதால்தான், நானும் அரசியலுக்கு வந்து அவிநாசி ஒன்றியத்தின் தலைவியாக மக்கள் பணியாற்ற முடிந்தது.

இந்தியாவிலேயே ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவியாக மிகவும் இளம் வயதில் (28 வயது) மக்களால் நான் தேர்ந்தெடுக்கப்பட கலைஞர் அவர்களே முதன்மையான காரணம்.ஆண்கள் கோலோச்சும் அரசியலில் பெண்களின் பங்கும் அபரிமிதமாக இருக்கவேண்டும் என்கிற அவரது தொலைநோக்குப் பார்வையே, வீட்டு சமைய லறைக்குள் முடங்கிக் கிடந்த என்னைப் போன்ற பெண்களை நாட்டின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் மன்றங்களுக்கு அழைத்து வந்தது.

ஏழைப் பெண்களுக்கு மூவலூர் இராமாமிருதம் திருமண உதவித் திட்டம், விதவைகளுக்கான மறுமண உதவித் திட்டம், அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடப்பங்கீடு, பெண்களுக்கு இலவச பட்டப்படிப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் வரை மாதம்தோறும் நிதியுதவி, விறகு அடுப்பில் வெந்து கொண்டிருந்த ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் அடுப்பு என்று கலைஞரின் சிந்தனையில் பெண்களின் நல்வாழ்வுக்காக உதித்த திட்டங்கள் எத்தனை எத்தனையோ.

இதையெல்லாம் செய்து கொடுத்தவர் கலைஞர்தான் என்பது பெண்களில் பெரும்பாலானோருக்கே கூடத் தெரியாது என்பதுதான் கொடுமை.
இன்று சமூகவலைத்தளங்களில் பெண்களின் கண்ணியத்தை கேவலப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பே ‘பெண்களை கண்ணியக் குறைவாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டம்’ ஒன்றை கலைஞர் கொண்டு வந்திருக்கிறார் என்றால், எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆண்ட அவரது அபார ஆளுமைத் திறன் வியப்பூட்டுகிறது. எந்தவிதமான ஊடகங்களிலும் பெண்கள் கண்ணியக்குறைவாக சித்தரிக்கப்பட்டால், இந்த சட்டம் மூலமாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை அவர் ஏற்படுத்தி
யிருக்கிறார்.

பெண்களுக்கு கலைஞர் செய்த அரிய நற்காரியங்களுக்கெல்லாம் மகுடம் வைப்பது 1989ல் அவர் செயல்படுத்திய ‘சுய உதவிக்குழு’ திட்டம்தான்.
பொருளாதாரரீதியாக யாரையும் சாராமல், தானே தன்னையும் தன் குடும்பத்தையும் இன்று ஒவ்வொரு பெண்ணும் காப்பாற்றக்கூடிய நிலைமை தமிழகத்தில் இருக்கிறதென்றால், கலைஞர் அவர்கள் 29 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திய அந்த திட்டம்தான் காரணம்.

ஆட்சியாளராக மட்டுமின்றி, எழுத்தாளராகவும் அவர் பெண்களை மிகவும் கண்ணியமாக சித்தரித்தார். அவரது கதைகளிலும், சினிமாப் படங்களிலும் பெண்களை புத்திசாலிகளாகவும், புரட்சிகரமான எண்ணம் கொண்டவர்களாகவுமே எழுதினார்.பெண்ணுரிமை மற்றும் விடுதலை குறித்துப் பேசுவோர், இனி கலைஞரின் பெயரைத் தவிர்த்து பேசவே முடியாத அளவுக்கு தமிழ்ப் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகத்தான தலைவர் அவர். இந்தியாவுக்கே முன்னோடியாக அவர் கொண்டுவந்த சட்ட / திட்டங்கள் காலமெல்லாம் அவர் புகழ் பாடும்.

(கட்டுரையாளர் முன்னாள் அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி)

முனைவர் ஏ.ஈ.சாந்திபாபு