நினைவு கூரப்படும் சமூக மருத்துவர்



‘‘இது மூன்றாந்தர ஆட்சி...’’ என்றார் ஹண்டே. ‘‘இல்லை, இது நான்காந்தர ஆட்சி!’’ என்றார் கலைஞர். பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர்களில் நான்காவது மக்களான சூத்திரர்களுக்கான ஆட்சி என்று விளக்கமளித்தார் கலைஞர்.
முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதுதான் இப்படிச் சொன்னார். அதனால்தான் கலைஞரை, தந்தை பெரியார் கொண்டாடினார். பெருந்தலைவர் காமராசர் ஆட்சியை பச்சைத் தமிழர் ஆட்சி என்று போற்றிய பெரியார், கலைஞரைத்தான், ‘தமிழ்ச் சமுதாயத்தின் கதி’ என்று சொன்னார்.

கலைஞர் நமக்குக் கிடைத்திருக்கின்ற அரிய பொக்கிஷம். கலைஞர் நமக்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பு. திமுகவின் வெற்றி என்பது கலைஞரின் சாதுர்யத் திறமையால் கிடைத்ததாகும். நான் செய்ய எண்ணும் காரியங்களை கலைஞரின் திமுக அரசு செய்வதால் என் வேலை குறைகிறது. கலைஞரின் புரட்சிக் கொள்கைகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. கலைஞர் தலைமையில்லாமல் வேறு யாராகயிருந்தாலும் நாம் ஒழிந்திருப்போம்...

- இவை அனைத்துமே வெவ்வேறு காலகட்டத்தில் (1969 - 1973) தந்தை பெரியார் சொன்னவை. பெரியார் யாரையும் முகஸ்துதி செய்பவர் அல்ல. அவருக்கு அந்தத் தேவையும் இல்லை. ‘தமிழுக்காக ஆட்சியை இழக்கத் தயார்’ என்ற கலைஞரை, ‘இது என்ன முட்டாள்தனம்’ என்று கண்டித்தவர் பெரியார். அவரே, ‘திமுக அரசால், கலைஞரால் என் வேலை குறைகிறது...’ என்றார் என்றால் திராவிடச் சமூகவியல் ஆட்சியை கலைஞரின் மூலமாகப் பெரியார் கண்டடைந்ததால்தான்.

‘‘நான் மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்...’’ என்றவர் கலைஞர். ‘‘எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்...’’
என்றும் சொன்னார். அதனால்தான் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவேதான் அவரது சிந்தனை, செயல், திட்டமிடுதல் இருந்தது. மேலோட்டமாக ஒரு பட்டியல் போட்டால், குடிசைமாற்று வாரியம் அமைத்தவர்; இலவச கண்ணொளித் திட்டம் ஏற்படுத்தியவர்; பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம் அமைத்தவர்; கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தவர்;

இலவச காங்கிரீட் வீடு கட்டித் தந்தவர்; மீனவர்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தந்தவர்; கோயில்களில் அனாதைக் குழந்தைகள் தங்கிப் படிக்க கருணை இல்லம் உருவாக்கியவர்; உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர்; தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியவர்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தவர்; அருந்ததிய மக்களுக்கு தனி இடஒதுக்கீடு தந்தவர்; இலவச கல்வி கொடுத்தவர்; சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை தந்தவர்;

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு தந்தவர்; திருமண உதவித் திட்டம்; விதவைப் பெண்கள் மறுமண உதவித் திட்டம்; கர்ப்பிணிப் பெண்கள் நிதி உதவித் திட்டம்; விதவைப் பெண்கள் தொழில் தொடங்க உதவிகள்; சத்துணவில் முட்டை - கொண்டைக்கடலை - வாழைப்பழம் கொடுத்தவர்; இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தந்தவர்; விவசாயக் கடன்களை ரத்து செய்தவர்; உழவர் சந்தைகளை உருவாக்கியவர்; சமத்துவபுரம் கட்டித் தந்தவர்; மாணவர்களுக்குக் கல்விக் கடன்கள் கொடுத்தவர்; சமச்சீர் கல்வி கொண்டு வந்தவர்;

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழிவகை கண்டவர்; திருநங்கையர்க்கு நலவாரியம்; மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு... என்று அடுக்கலாம்.இந்தப் பட்டியலை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள், மீனவர் என ஒடுக்கப்பட்டோர் மற்றும் விளிம்பு நிலை மக்களைச் சுற்றியே கலைஞர் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்ததை உணரலாம்.

கலைஞர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும்... கறுப்புத் தோல்களுக்குள் உள்ள சிவப்பு ரத்தங்கள் கண்ணீரும் கம்பலையுமாகக் கொதித்ததும்... சில வெள்ளைத் தோல்களுக்குள் இருக்கும் கறுப்பு ரத்தம் நக்கல் சிரிப்பும் நையாண்டியுமாக கிண்டலடித்ததும்தான் அவர் யாருடைய தலைவர், யாருக்கான தலைவர் என்பதைக் காட்டும்.

தான், எங்கிருந்து வந்தோம் என்பதை மறக்கவில்லை கலைஞர். அந்த ஒடுக்கப்பட்ட சமூகம் அப்படியே ஒடுக்கப்பட்டே கிடக்கக் கூடாது என்றும் நினைத்தார். பெரியாரின் கொள்கைகளை, அண்ணாவின் இலட்சியங்களை முடிந்தவரை சட்டமாக்கப் போராடுகிறேன் என்று சொல்லிக் கொண்ட கலைஞர்,

‘திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை நிறைவேற்ற நான் ஒரு கருவி’ என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார். அப்படியே நடந்து கொண்டார்.
வருணத்தை நிலைநாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியிலே மானம் காக்க மறத்தமிழா போராடு! - இது, கலைஞர் 76 ஆண்டுகளுக்கு முன்னால் ‘முரசொலி’யைத் தொடங்கிய காலத்தில் எழுதிய வரிகள்.

வருணத்தை நிலைநாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும், மரணத்தின் உச்சியிலே மானம் காக்கப் போராடியவர் கலைஞர். பகவத்கீதை கொடுக்க வந்த இராம.கோபாலனிடம் ‘கீதையின் மறுபக்கம்’ கொடுத்ததில்தான் கலைஞர் வாழ்கிறார்.

கலைஞரின் பழைய பேச்சுக்களை, எழுத்துக்களை இன்று மறுபிரசுரம் செய்ய முடியாது. அதாவது அதை மறுபிரசுரம் செய்யும் ‘துணிச்சல்’ யாருக்கும் வராது. அந்தளவு சமூகக் கொடுமைக்கு எதிராக சாட்டையடி வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருப்பார்.

கட்சியில் சேர்ந்து கொள்கையை வீரியமுடன் எழுதும், பேசும் பலரும் அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு வந்ததும் மறந்து போவார்கள். ஆனால், கலைஞர் மறக்காதவர். வெறும் கொடுமையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தவர் அல்ல. கடமையைச் செய்தவர். கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருந்தவர் அல்ல.

எதிர்காலத்துக்கான திட்டங்களைப் போட்டவர். 75 ஆண்டுகளுக்கு முன் கலைஞரைப் பார்த்து, ‘திருவாரூரின் புலி இளைஞர் காண்’ என்றார் புரட்சிக்கவி பாரதிதாசன். இறக்கும் வரை புலி இளைஞராகவே இருந்தார். மரணப் படுக்கையிலும் தனக்கான இடத்துக்காகப் போராடினார். உணர்ச்சி குறையும்போது உடலை வைத்துப் போராடு என்பார்கள்.

உடலை வைத்துப் போராடினார்.‘‘தமிழகத்தின் பாதி சரித்திரத்தை நான் எழுதினேன்; மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்’’ என்றார் பேரறிஞர் அண்ணா. எந்தவொரு ஆட்சியும் ஒன்று கொள்கை வழிப்பட்டதாக இருக்கும் அல்லது நலத்திட்ட வழிப்பட்டதாக இருக்கும்.

கொள்கை வழிப்பட்டதாக அண்ணலின் ஆட்சி இருந்தது என்றால், இரண்டுமாக இருந்து ஆட்சி நடத்தி தமிழகத்தின் மீதி சரித்திரத்தைக் கலைஞர் எழுதினார்.புதுச்சேரியில் அடித்துத் தூக்கி வீசப்பட்ட கலைஞரைத்  தூக்கி நிறுத்தி காயங்களுக்கு மருந்திட்டவர் பெரியார்.

அதனால்தான் இறுதி வரை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் காயங்களுக்கு மருந்திடுபவராக இருந்தார் கலைஞர். காயம் ஆறினாலும் தழும்பு இருக்கும். தழும்பு இருக்கும்வரை மருந்திட்டவர் நினைவுகூரப்படுவார். கலைஞர் நினைவுகூரப்படும் சமூக மருத்துவர்! (கட்டுரையாளர், ‘கலைஞர்’ தொலைக்காட்சி செய்திப் பிரிவின் தலைவர்)

- ப.திருமாவேலன்