காகித பேட்டரிகள் இனி சாத்தியம்!



காகிதம் மற்றும் பாலிமர் ஆகியவற்றைக் கலந்து எளிதில் மட்கும் வகையில் பேட்டரிகளை தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த பிங்காம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
‘‘எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகரித்து வரும் சூழலில் காகித பேட்டரிகள் இப்பிரச்னையைத் தீர்க்கும்...’’ என்கிறார் பிங்காம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சியோகியுன் சோய். Pyromellitic dianhydride-p-phenylene diamine என்னும் மூலப்பொருள் காகித பேட்டரியை சாத்தியப்படுத்துவதோடு இதனை எளிதில் மட்கவும் வைக்கிறது. குறைந்த எடை, மலிவு விலை, நீரில் கரையும் தன்மை என, பிற நுண்ணுயிரிகளைக் கொண்ட பேட்டரியைவிட இது பாதுகாப்பானது!               

கேரளாவில் பெண்கள் படை!

கேரளாவில் பெண்களை மட்டுமே கொண்ட போலீஸ் பட்டாலியன் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க பெண் மேற்பார்வையாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட முதல் பேட்ச் பெண் சிங்கங்களின் படை இது. என்எஸ்ஜி படையினரைப் போல வனம், ஆயுதம், தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகளை அளித்து 44 பெண்களைத் தயாராக்கி உள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட பெண் வீரர்களிலிருந்து மேற்சொன்ன எண்ணிக்கையில் பயிற்சியளித்து சிறப்பாகச் செயல்பட்ட பெண்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  

படைத்தலைவர் நிஷாந்தினி தலைமையேற்க புதிய பெண்கள் பட்டாலியனுக்கு பேரிடர் மேலாண்மை, களரி, யோகா, கராத்தே, நீச்சல்பயிற்சி, கணினிப்பயிற்சி ஆகியவற்றில் தேவையான பயிற்சிகள் கடந்த ஒன்பது மாதங்களாக அளிக்கப் பட்டன. அண்மையில் முதல்வர் பினராயி விஜயன், போலீஸ்துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா ஆகியோரின் முன்னிலையில் பெண்களின் படை அணிவகுப்பு நடைபெற்றது.              

ஆபரேஷனுக்கு அரசு உதவி!

திருநங்கைகளின் செக்ஸ் மாற்று ஆபரேஷனுக்கு கேரள அரசு ரூ.2 லட்சம் உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.‘‘அரசிடம் அறுவைசிகிச்சைக்கு உதவிகோரி விண்ணப்பித்துள்ள திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும். பெண் அல்லது ஆண் என விருப்பத்துடன் வாழ்வதற்கு பணம் தடையாக இருக்காது!’’ என அதிகாரபூர்வமாக கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது ஃபேஸ்புக் கணக்கில் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டில் திருநங்கைகள் தொடர்பான சட்டத்தை உருவாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக கேரள அரசு முன்னமே பல்வேறுஉதவிகளை வழங்கிவருகிறது. கேரளாவின் உயர்கல்வி ஆணையம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இரண்டு சீட்டுகளை வழங்கியுள்ளது. கொச்சி மெட்ரோ ரயிலில் திருநங்கைகளுக்கு பணிவாய்ப்புகளும், சுயதொழில் வாய்ப்புகளும் அரசால் வழங்கப்பட்டுள்ளன.        

தொகுப்பு: ரோனி