ஒரிஜினல் கலம்காரி இதுதான்!



சொல்கிறார் அனைத்து மாநில ஓவியங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி பட்டம் பெற்றவரும்; ‘காஷ்மோரா’, ‘பாகுபலி’, ‘புலி’, ‘பாம்பன்’ உட்பட பல படங்களில் தனது தனித்துவமான ஓவியங்களால் ஆச்சர்யப்படுத்தி வருபவருமான ஏகாம்பரம்.
இந்தியாவுக்கு இருக்கும் சிறப்பு வேறு எந்த நாட்டுக்கும் இல்லை. பலவகையான மொழிகள், பண்பாடு, கலாசாரம், கட்டடக் கலை... என மாநிலத்துக்கு மாநிலம் தனித்துவம் உண்டு.
அதில் ஓவியமும் ஒன்று! ஆம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சிறப்பான ஓவியம் உண்டு.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, மாநிலத்துக்கு மாநிலம் தனித்துவத்துடன் விளங்கும் ஓவியங்களை எல்லாம் உடைகளில் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்?

இதில்தான் ஆராய்ச்சிகள் செய்து பிஎச்.டி பெற்றிருக்கிறார் மதுரவாயலைச் சேர்ந்த ஏகாம்பரம். ‘காஷ்மோரா’, ‘பாகுபலி’, ‘புலி’, ‘பாம்பன்’ உட்பட பல படங்களில் தனித்துவமான ஓவியங்களால் ஆச்சர்யப்படுத்தி வரும் ஏகாம்பரம், பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தனிடம் வேலை செய்தவர்.

‘‘சொந்த ஊர் திருத்தணி பக்கத்துல கிராமம். பிறப்பு வளர்ப்பு எல்லாமே நெசவும், நெசவு சார்ந்த சுற்றுப்புறமும்தான். அதனாலேயே கைத்தறி ஆடை வடிவமைப்பு மேல அவ்வளவு ஈர்ப்பு. அதையே படிப்பா எடுத்து ஆராய்ச்சி செஞ்சேன்.இந்தியா முழுக்க பயணப்பட்டேன். சாதாரண கோயில்கள்ல இருந்து குடைவரைக் கோயில்கள் வரை நுணுக்கமா ஆராய்ந்தேன். சிற்பங்களை எல்லாம் பார்த்து உள்வாங்கினேன். எல்லா டிசைன்களையும் நுணுக்கமா ஃபேப்ரிக்ல கொண்டு வர்றதுதான் குறிக்கோள்.

இன்னமும் என் தேடல் முடியலை. ஏன்னா, இந்தியா ஒரு சமுத்திரம். எல்லா கலைகளும் மண், பிரதேசம் சார்ந்து மாறுபடும்...’’ என்று வியக்கும் ஏகாம்பரத்துக்குள், இவற்றை எல்லாம் வெறும் சர்டிஃபிகேட்டுக்காக பலரும் மேலோட்டமாக கற்கிறார்களே என்ற ஆதங்கம் இருக்கிறது.

‘‘அப்படி நாம இருக்கக் கூடாதுனு பிடிவாதமா இருக்கேன். ஃபேஷன் டிசைனிங்னா வெறும் கடைகள்ல மீட்டர் கணக்குல துணி வாங்கி அதை வெட்டி தைப்பதில்ல. எதுல டிசைன் செய்றோமோ அந்த துணியோட தரத்தைக்கூட நாம முடிவு செய்யணும். அதே மாதிரி உணர்வுக்கும் துணி உடுத்தற விதத்துக்கும் தொடர்பிருக்கு.

கடைகளுக்குப் போய் கண்ல படற புடவை அல்லது சுரிதார் அல்லது பேண்ட் சட்டைகளை எடுத்து பில் போடக் கூடாது. அதுல இருக்கிற டிசைன் நமக்கு என்ன ஃபீல் கொடுக்குது... மத்தவங்க பார்வைக்கு அது எப்படித் தெரியும்... இதையெல்லாம் கவனத்துல கொண்டுதான் வாங்கணும்...’’ என்ற ஏகாம்பரம், தன் ஃபேப்ரிக் ஆராய்ச்சிகள் குறித்து விளக்கினார்.

‘‘வட மாநில கட்டடங்கள், சிற்பங்களை பெரும்பாலும் ராஜபுத்திரர்கள் - மொகலாயர்கள் காலம்னு இரண்டு வகையா பிரிக்கலாம். அங்க இந்துத்துவ கட்டடங்கள்ல அரேபிய கட்டடக் கலை கலந்திருக்கும். அதுவே தென்னிந்தியாவுல சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள்னு பல ஸ்டைல்களை பார்க்கலாம். இதையெல்லாம் துணிகள்ல கொண்டு வரத்தான் முயற்சி செய்றேன்.

அதோட பழங்குடியின மக்களுடைய ஓவிய முறைகளைக் கூட ஃபேப்ரிக் டிசைன்ல வரையறேன். இதன் சிறப்பே அதுதான். கைகளால ஒரு புடவை முழுக்க கிளிகள் வரையறோம்னா, 10 கிளிகள் அதுல இடம் பெறும்னா, பத்தும் பத்து விதமா இருக்கும்! பத்து விதமான உணர்வுகளை வெளிப்
படுத்தும்!

இதுதான் உண்மையான கலம்காரி பேட்டர்ன். கையால நெசவு செஞ்சு, அதுல கைகளால வரையும் ஓவியம் வழியா டிசைனை கொண்டு வர்றதுதான் பழங்கால கலம்காரி. இதை டிஜிட்டல் பிரிண்டிங்ல எதிர்பார்க்க முடியாது...’’ என்று சொல்லும் ஏகாம்பரம், ‘‘விவசாயத்தைப்பத்தி குறைந்தபட்சம் பேசவாவது செய்றாங்க. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா நசிந்து வருகிற நெசவுத் தொழிலைப் பத்தியோ நெசவாளர்கள் பத்தியோ பேசறதும் இல்ல,
கண்டுக்கறதும் இல்ல.

நெசவாளர்களையும் இதுல இணைச்சு நெசவுத் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதுதான் குறிக்கோள்...’’ என்கிறார். ‘‘கைகளால வரையப்பட்ட மெட்டீரியல்ஸை எல்லோராலும் வாங்க முடியாது. தரமா இருந்தாலும் விலை அதிகம். இதை மாத்தி நடுத்தர மக்களும் வாங்கக் கூடிய விலைல எப்படி கொண்டு வரலாம்னு முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்...’’ தீர்க்கமாகச் சொல்கிறார் ஏகாம்பரம்.   
    
ஷாலினி நியூட்டன்

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்