எல்லோரது கனவுகளையும் நனவாக்கிய அரசியல் தலைவர்



கலைஞர் என்ற அரசியல் தலைவருக்குள் இரு கூறுகள் உண்டு. ஒன்று அவர் பெரியாரின் மாணவர். அடுத்து அண்ணாவின் அணுக்கத் தம்பி. எந்த நேரத்தில் மாணவராகச் செயல்பட வேண்டும், எந்த நேரத்தில் தம்பியாகச் செயல்பட வேண்டும் என்பதை நுணுக்கமாக அறிந்து திறம்பட செயல்பட்டவர்.
இதைத் தாண்டி தன் சொந்த முத்திரையைப் பதிக்கவும் அவர் தவறவில்லை. பெரியாருடன்தான் கலைஞரின் துவக்கப் பயணம் அமைந்தது. புதுச்சேரி திராவிடர் கழக மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் கலைஞர் தாக்கப்பட்டதும், பெரியார் அவரைத் தன்னோடு ஈரோட்டுக்கு அழைத்துச்  சென்றார்.

‘குடியரசு’ பத்திரிகையில் பணி வழங்கினார். ஒன்றரை வருடங்கள் பெரியாரிடம் பயிற்சி. அதற்குப் பிறகே அண்ணாவுடன் நெருக்கமானார். ஆனால், இருவருக்கும் இறுதி வரை கொள்கை வாரிசாகத் திகழ்ந்தார்.

கலைஞர், கொள்கையில் எவ்வளவு உறுதியானவர் என்பதற்கு ஒரே செய்தி போதும். ஆத்திகர்கள் நிறைந்த நாட்டில், எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், தான் ஓர் நாத்திகன் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டார். அப்படிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்துகொண்டே ஐந்து முறை தமிழக முதல்வரானார்.

கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. அதே சமயம், முதல்வர் என்ற முறையில் கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடப்பதையும் உறுதிப்படுத்தினார். கொள்கையில் பெரியாரின் மாணவன்.

முதல்வராக அண்ணாவின் தம்பி. சமூக சீர்திருத்தம் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தும் போது பெரியார் வழி. மொழி, பண்பாடு சார்ந்த திட்டங்களை அமல்படுத்தும்போது அண்ணா வழி. பெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல் பெரியாருடையது. 1929ம் ஆண்டே பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு அதற்காகத் தொடர்ந்து இயங்கினார் பெரியார்.

அந்தக் கோரிக்கையை, 1989ம் ஆண்டு, தான் முதல்வரானபோது, சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார் கலைஞர். அண்ணா முதல்வரானதும் செய்த வரலாற்றுச் சாதனை, மெட்ராஸ் பிரசிடன்சியை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தது. இது பண்பாட்டுத் தளத்தில் மேற்கொண்ட நடவடிக்கை.

பின்னர் கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில், மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என சட்டரீதியாக மாற்றினார். இது அண்ணா மேற்கொண்ட பணியின் தொடர்ச்சி.பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரின் சீர்திருத்த நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்கியவர்தான். புரோகித முறைப்படி நடக்கிற திருமணங்கள்தான் சட்டபூர்வமானது,

தமிழ் முறைப்படி நடக்கிற சீர்திருத்தத் திருமணங்கள் செல்லாது என்ற நிலை இருந்தது. 1967ம் ஆண்டு முதல்வரானதும் அண்ணா சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற நிலையைக் கொண்டு வந்தார். ஆனால், கலைஞர் பெரியாரின் அதிரடி, புரட்சி சீர்திருத்தங்களை சட்டபூர்வமாக்கினார்.

சமயத்தில் அதனால் வாக்கு அரசியலில் சரிவு ஏற்படும் சூழல் இருந்தாலும் அஞ்சவில்லை. உதாரணமாக, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது ஆண்களிடத்திலே சற்று எதிர்ப்பை ஏற்படுத்தும் திட்டம்தான். இருந்தாலும் நடைமுறைப்படுத்தினார். அதேபோல்தான் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ ஆகக் கூடிய சட்டம். இது குறிப்பிட்ட இனத்தாரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை.

அது மாத்திரமல்ல, காலம்காலமாக இந்த வழக்கத்தில் ஊறிப்போன ஆத்திகப் பெருமக்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கை. ஆனால், கலைஞர் தயங்கவில்லை.

‘பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் நடவடிக்கை’ என்று அறிவித்து, இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இவற்றை எல்லாம் தன் கடமையாகத்தான் கலைஞர் நினைத்தார். காரணம், பெரியார் வாக்கு அரசியலுக்கு வரவில்லை. அதனால் அவரது கொள்கைகளை சட்டபூர்வமாக நிறைவேற்ற வேண்டிய கடமை அவரது மாணவரான கலைஞருக்கு இருந்தது.

அதேபோல, அண்ணா அவர்களுக்கு முதல்வராகத் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பை இயற்கை வழங்கவில்லை. நோய்வாய்ப்பட்டு, முதல்வரான இரண்டே ஆண்டுகளில் மறைந்துவிட்டார்.

அதனால், அவர் துவங்கி வைத்த பணிகளையும் தொடரவேண்டிய கடமை கலைஞருக்கு இருந்தது.‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டபோது, அறிஞர் அண்ணா, ‘மாநில சுயாட்சி’யை மிக அழுத்தமாக வலியுறுத்தினார். கலைஞர் முதல்வரான பிறகு, மத்திய - மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தர ‘ராஜ மன்னார்’ குழுவை அமைத்தார்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பினார். இது அண்ணாவின் தொடர்ச்சி. இப்படி பெரியார் வகுத்துக் கொடுத்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தியும், அண்ணா துவக்கி வைத்த பணிகளைத் தொடர்ந்தும் செயல்பட்டவர், தானே கொள்கைகளை வகுத்து அவற்றையும் நடைமுறைப்படுத்தினார்.

சிறு வயதில் சாதீய அடக்கு முறைகளை எதிர்க்கின்ற முகமாகத்தான் இசைக்கல்வி கற்க மறுப்பு தெரிவித்தார். இசை பயின்றால் சமூகத்தில் சமமாக நடத்த மாட்டார்கள் என்ற காரணத்தால் தவிர்த்தார். சாதி பேதம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை நடைமுறைப்படுத்தப் போராடினார்.

அதன் ஒரு பகுதியாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும்  ‘சமத்துவபுரங்களை’ கலைஞர் நிர்மாணித்தார். முதன்முதலில் தன்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த குளித்தலை தொகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடுமையை நேரில் கண்டார்.  சட்டமன்றத்தில் முதன் முதலாகப் பேசுகின்ற வாய்ப்பில் ‘நங்கவரம் பிரச்னை’ குறித்து குரல் எழுப்பினார். அத்தோடு களத்திலும் இறங்கிப் போராடினார். அத்துடன் இதை கலைஞர் விட்டுவிடவில்லை. குளித்தலையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து அவர் குரல் எழுப்பியது 1957ம் ஆண்டு.

பதினான்கு ஆண்டுகள் கழித்து, வேறொரு தொகுதியில் இருந்து வெற்றி பெற்று, முதல்வர் அதிகாரத்துக்கு வந்தபிறகும் ‘நங்கவரம் பிரச்னை’யை மறக்கவில்லை. அதை மனதில் கொண்டு, ‘நிலச் சீர்திருத்த சட்டத்தை’க் கொண்டு வந்தார். மிகுதியான நிலம் இருக்கிற நிலச்சுவான்தார்களிடம் இருந்து அதிகப்படியான நிலங்களைக் கைப்பற்றி, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்குவதுதான் அந்த நிலச் சீர்திருத்த சட்டம்.

இவை எல்லாம் அவரே திட்டமிட்டு, துவங்கி, முடித்த பணிகள். இதேபோல ஒரு நீண்டபட்டியலைத் தொகுக்கலாம். இப்படி பெரியாரின் மாணவனாக இருந்து அவரது தத்துவங்களைச் சட்டமாக்கினார். பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக இருந்து, அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார்.

இன்னொரு புறம், ஓர் அரசியல் கட்சித் தலைவராக, மக்கள் பிரதிநிதியாக, ஓர் தத்துவவாதியாக, ஓர் போராளியாக இருந்து, தான் வகுத்த கொள்கைகளையும், தான் போராடிய திட்டங்களையும் முதல்வராக நடைமுறைப்படுத்தினார். தனது முத்திரையை மாத்திரமே பதிக்க வேண்டும் என்பதே வழக்கமான அரசியல் தலைவர்களின் திட்டமாக இருக்கும்.

ஆனால், அந்த எண்ணம் இல்லாமல் தன் வழிகாட்டிகளின் முத்திரைகளையும் சேர்த்து பதித்துள்ளார் கலைஞர். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், எல்லோரது கனவுகளையும் நனவாக்கிய தனித்துவமான அரசியல் தலைவர் கலைஞர்! (கட்டுரையாளர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)