முடி வெட்டும் செலவு மிச்சம்



“வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும்! ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!” ஒரு நாளிதழின் தலைப்புச் செய்தியாக இது வந்தது என்றால் நம்ப முடிகிறதா?எமர்ஜென்ஸி காலத்தில் பத்திரிகைகளில் எந்தெந்த செய்திகள் இடம்பெற வேண்டும் என்பதை மத்திய அரசாங்கமே தீர்மானித்தது.
பத்திரிகைகள் தாங்கள் வெளியிட இருக்கும் செய்திகளை லே-அவுட் செய்து, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் அனுமதி பெற்றபின்னரே அச்சிட வேண்டும் என்கிற நிலை அப்போது இருந்தது.

கலைஞரின் தலைமையிலான திமுக, எமர்ஜென்ஸியை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தது. இதனால் தமிழகத்தில் திமுகவின் ஆட்சியும் கலைக்கப்பட்டிருந்தது. திமுகவின் குரலான ‘முரசொலி’, ஊடகத் தணிக்கையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நேரம் அது. எமர்ஜென்ஸிக்கு எதிராக எந்தச் செய்தியை அவர்கள் பிரசுரிக்க முனைந்தாலும், அவை தணிக்கை செய்யப்பட்டன.

எனவேதான், வெண்டைக்காய் சாப்பிட்டு மூளையை வளர்த்துக்கொள்ளும் செய்தியை கிண்டலாக கலைஞர், ‘முரசொலி’யின் தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தார்!அந்தச் செய்தியிலிருக்கும் ‘உள்குத்து’ அறியாத அதிகாரிகள், அதற்கு அனுமதி கொடுத்து கலைஞரின் நகைச்சுவைக்கு சுவை சேர்த்தார்கள்.

“ரஷ்ய விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு தில்லியில் வெண்டைக்காய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது!” என்றெல்லாம் கலைஞர், அந்தச் செய்தியில் மானாவாரியாக மத்திய அரசை வாரியிருந்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் கலைஞரின் தலைக்கு விலை வைத்தார் வட இந்திய சாமியார் ஒருவர். ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்த நிலையில் தன் வழக்கமான நகைச்சுவையால் அமைதியை ஏற்படுத்தினார் கலைஞர். “என் தலையை நானே சீவி நாளாச்சி, அவங்க சீவிவிட்டாங்கன்னா நல்லதுதான்!”

பொதுவாக தலைமைப் பண்பு பற்றி பேசுபவர்கள் அதில் நகைச்சுவையைத் தவறவிட்டு விடுவார்கள். உலகின் தலைசிறந்த தலைவர்கள் பலருக்கும் கூர்மையான அங்கத உணர்வு உண்டு. இந்திய அரசியலில் கோலோச்சிய தலைவர்களில் வெகு சிலருக்கே இந்த நகைச்
சுவையுணர்வு உண்டு. தமிழகத்தில் கலைஞர், நகைச்சுவைக்கு பேர் போனவர்.

அவருடைய நகைச்சுவையான பதிலடிக்கு வாய்விட்டுச் சிரிக்காத எதிர்க்கட்சித் தலைவர்களே இல்லை எனலாம். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அரசுக்கு எதிராக கனலைக் கக்கிக் கொண்டிருக்கும்போதே, இடையிடையே தனக்கே உரிய சிலேடைப் பேச்சால் ஒட்டுமொத்த அவையையே பலமுறை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

2014 பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம். சேலத்தில் பொதுக்கூட்டம். பெரும் கூட்டம் கூடியிருந்தது. இரவு எட்டே முக்கால் மணியளவில் கலைஞர் பேச ஆரம்பித்தார். நீண்ட காலம் கழித்து அன்று பழைய கலைஞராக மாறி, நேரத்தைக் கணக்கில் கொள்ளாமல் (10 மணி வரை பேசத்தான் தேர்தல் கமிஷன் அனுமதி) இடிமுழக்கமாக பேசிக்கொண்டே இருந்தார்.

திடீரென துரைமுருகன் அவருக்கு அருகில் வந்து ஒற்றைவிரலைக் காட்டிவிட்டுச் சென்றார். உடனே, “தம்பி துரைமுருகன், ‘தொலைத்துவிடுவேன்’ என்று விரல் காட்டி என்னை அச்சுறுத்துவதாக யாரும் நினைத்து அவர் மீது பாய்ந்துவிட வேண்டாம்.

பத்து மணி ஆக இன்னும் ஒரு நிமிடம்தான் இருக்கிறது என்று தம்பி நினைவுறுத்துவதால் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்!” என்று கலைஞர் சொன்னதும் மொத்தக் கூட்டமும்
வெடித்துச் சிரித்தது.

ஒரு தேர்தலில் முடிவுகள்  வெளியாகிக் கொண்டிருந்தன. திமுக அத்தேர்தலில் கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. கலைஞர் கலங்கிவிட்டிருப்பாரோ என்கிற பரிதவிப்பில் சில கட்சி முன்னணியினர், கலைஞரைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றிருந்தார்கள்.
“எதுக்குய்யா, மூஞ்சை தூக்கி வெச்சிட்டிருக்கீங்க.

காஃபி சாப்பிடறீங்களா?” என்று கேட்டுவிட்டு, தன் உதவியாளரை அழைத்தார். வந்திருந்த தலைகளை எண்ணி, “ஆறு காஃபி கொண்டு வாங்க...” என்று சொல்லிவிட்டு, சின்ன இடைவெளிக்குப் பிறகு “ஆனா, ஆறாத காஃபியா இருக்கணும்!” என்று சொல்ல, தோல்வி முடிவுகளில் சுணங்கிப் போயிருந்தவர்கள் கவலையை மறந்து புன்னகைத்தார்கள்.

சட்டமன்றத்தில் பயங்கர கூச்சல் குழப்பம். சபாநாயகராக இருந்த க.ராசாராம் வெறுத்துப் போய், “உங்களையெல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்...” என்றார். சட்டென்று எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர், “ஆண்டவன்தான் காப்பாத்தப் போகிறேன். நானும் இந்த நாட்டை ஆண்டவன்தான்!” என்று சொல்ல, முதல்வராக இருந்த எம்ஜிஆர் தன் துண்டை வாயில் பொத்தி சிரித்தார்.

ஒருமுறை, “தலையில் முடி கொட்டிவிட்டதைப் பற்றி எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.
அதற்கு கலைஞரின் பதில்:“முடி வெட்டும் செலவு மிச்ச மென்று மனம் மகிழ்ந்திருக்கிறேன்!”                     

யுவகிருஷ்ணா