எதற்காகவும் அழாதீர்கள்



1.அவதூறுகளுக்கு
ஆளான ஒரு தலைவன்
அமைதியாகப்
படுத்திருக்கிறான்
சிலர் அந்த அமைதியை
மரணமென்றும்
இறப்பென்றும் சாவென்றும்
வெவ்வேறு வார்த்தைகளில்
சொல்கிறார்கள்
அவன் தலைமாட்டில் பூக்களும்
புன்னகைகளும்
சோபையிழந்து கிடக்கின்றன
லட்சத்திற்கும் மேலானவர்கள்
அவன் கால்களைத் தொட்டு
தங்களால் இயன்ற கண்ணீரை
காணிக்கையாகக்
கொட்டுகிறார்கள்
அவன் சிரித்துக்கொண்டே
படுத்திருக்கிறான்
அவனுக்குத் தெரியும்
மொத்தக் கண்ணீரையும்
முழுவதுமாகச் சிந்திவிட்ட
தம் மக்கள்
இதற்குப்பின்
எதற்காகவும் யாருக்காகவும்
இம்மாதிரி
அழப் போவதில்லையென்று.

2.அந்தத் தலைவன்
கொள்கைக்காகவும்
கோரிக்கைக்காகவும்
போராடிப் போராடி
ஓய்ந்திருக்கிறான்
போராட்டத்தின்
ருசியைக் கண்ட
அவன் நாக்கிற்கு
பதார்த்தங்களின் சுவைமீது
பற்றுகள் இருந்ததில்லை
எழுச்சிக்காக முழக்கமிட்ட
அவனது குரல்
கரகரப்பிலிருந்து
வெளிப்படுத்திய கனிவில்
கவலைக் குமிழ்கள்
உடைந்துபோயின
காலத்தைச் சுழற்றிய
அவனுடைய சாட்டை
ஆட்சியையும்
அதிகாரத்தையும் அச்சுறுத்தின
முன்னேறி முன்னேறி
இலக்கையும்
முன்னேற வேண்டிய
இடத்தையும்
கனகச்சிதமாகப்
புரிந்துகொண்ட அவன்
பகைவர்களுக்கு அச்சமேற்படுத்த
பல்வேறு உத்திகளைக்
கையாண்டிருக்கிறான்
அவ்வளவு ஏன் ?
துரோகப் பட்டத்தைக்கூடச்
சுமந்திருக்கிறான்
ஆனாலும் அவன்
இறுதிவரையிலும்
அறிந்திருக்க
வாய்ப்பேயில்லை
தன்னால் கூட்டப்பட்ட
கூட்டத்தைவிட
தனக்காகக் கூடிய கூட்டமே
அதிகமென்பதை

3.மண்ணுக்காகப் போராடிய
அந்தத் தலைவன்
அதே மண்ணுக்குள்
புதைக்கப்படுகிறான்
இனமும் மொழியுமாயிருந்த அவனது
இரண்டு கண்களின் வழியே
உலகமே அழத் தொடங்கியது
எதற்காகவும்
அழாதீர்கள் என்றவனால்
தாங்கிக்கொள்ள முடியுமா?
ஏழைகளும் எளியவர்களும்
இரக்கமில்லாமல்
தன்னை வதைத்தவர்களும்
ஒன்றுகூடி ஒப்பாரி வைப்பதை
விவாதங்களுக்கு இடமளித்த அவன்
இறுதித் தீர்ப்பிலும் தன் பக்கமே
திருப்பியிருக்கிறான்
சரித்திரத்தை.

4.பலம் பொருந்திய
அந்தத் தலைவன்
தனது இறுதி
யாத்திரைக்கு
வராதவர்களைப்
பற்றியும் யோசிக்கிறான்
தன்னுடைய
தோல்விகளிலேயே
பெரிய தோல்வியாக
அது அவனுக்குப்படுகிறது
எல்லோருக்கும்
சேர்த்தே அல்லது
எல்லோரையும்
சேர்த்தே பார்த்த அவனால்
இந்தப் புறக்கணிப்பிற்குப்
பின்னாலுள்ள
அரசியலைப் புரிந்துகொள்ள
முடியவில்லை
வராதவர்களை
வசப்படுத்தவேனும்
மீண்டும் அவன் ஒருமுறையோ
பலமுறையோ வருவானென்று
நம்பப்படுகிறது.

5.வகுக்கப்பட்ட
கோட்டுக்கு வெளியேயும்
ஆடிய ஆட்டக்காரனே
அந்தத் தலைவன்
ஒரு கட்டத்தில் இல்லை
ஒவ்வொரு கட்டத்திலும்
அவனுடைய
கால்கள் தொட்ட
இடம்வரை
காய்களும்
கோடுகளும் நகர்ந்தன
விளையாட்டின்
வரையறைகள்
விசித்திரமான
மாறுதல்களுக்கு உட்பட்டன
எதிரிகள் பறித்த
குழிகளையெல்லாம்
தாண்டிய அவன்
அவ்வப்போது
அதே குழிகளை
சுவடாகவும் வழியாகவும்
ஆக்கிக் காட்டினான்
அவன் கோபத்தில்
உதிர்த்த சொற்கள்
நக்கலுக்கும் கேலிக்கும்
உள்ளாயின
எத்தனையோபேர்
எத்தனையோமுறை
சமரசத்தால் அவனை
வீழ்த்தும் வியூகத்தில்
மூக்கும் நாக்கும்
அறுபட்டார்கள்
புகழுரைகளால்
அவன் சரிவதைப்பார்க்க
இக்கட்டுகளையும்
நெருக்கடிகளையும்
மாறி மாறி வழங்கினார்கள்
எல்லா ஆட்டத்திலேயும்
உயர்ந்துகொண்டே
இருந்த அவன்
போனால் போகிறதென்று
தற்போது
விட்டுக்கொடுத்திருக்கிறான்
மைதானத்தை
விட்டுக்கொடுத்தலை
வெற்றிடமென்று
வரலாறு சொல்வதில்லை.
 
யுகபாரதி