இங்கெல்லாம் தள்ளுபடி கொடுக்கலாம் !



எஸ்.ராமன்

மந்திரச் சொல் என்றால் தள்ளுபடிதான்! இச்சொல்லில் மயங்கித்தான் தேவையற்ற பொருட்களையும் வாங்கிக் குவிக்க கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதுகிறார்கள்.  ரைட்... துணிக்கடை தவிர வேறு எங்கெல்லாம் தள்ளுபடி கொடுக்கலாம்?

கடன் தள்ளுபடி

வங்கியில் பெரும் தொகையைக் கடனாகப் பெற்ற கடனாளிகள் நாட்டை விட்டு ஓடுவதே தொடர்கதையாகிறது. இதைத் தவிர்க்க கடன் வாங்கியவர்களுக்கு  வங்கிகள் தள்ளுபடி வழங்கக் கூடாது!மாறாக, வாடிக்கையாளர்களிடமிருந்து கடனாக வாங்கிய டெபாஸிட்டுகளைத் திருப்பித் தரும்போது, ‘நலிந்த வங்கிகளின்  புனர் வாழ்வு’க்காக குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தள்ளுபடியாகக் கழித்துக்கொள்ள வேண்டும்!இதற்கு ஒப்புக்கொள்ளாத வாடிக்கையாளர்களை ‘சமூக விரோதிகள்’  என முத்திரை குத்தி அரசாங்கத்திடம் தெரிவிக்கலாம்!

முழுத் தள்ளுபடி

விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தனக்கு வரும் தவறான தகவல்களை சகட்டுமேனிக்கு வாட்ஸ் அப் - முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்  ஃபார்வர்ட் செய்பவர்களைக் கட்டுப்படுத்த ஒரே வழி 100% தள்ளுபடிதான்!அதாவது, பரப்பப்படும் தகவல்களைப் படிக்காமல் புறக்கணிப்பது மட்டும்தான் இதற்கு  ஒரே தீர்வு. இப்படிச் செய்தால் மட்டும் ஃபார்வர்ட் மெசேஜ் வராமல் இருக்குமா... எனக் கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான். கண்டிப்பாக வரும். ஃபார்வர்ட்  கலாசாரத்தைத் தடுக்கவே முடியாது! சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவார்கள் என்பதால் இதைக் கட்டுப்படுத்த நாம் மூளையைக் கசக்குவதே வேஸ்ட்!  எதையும் நம்பாமல் இருப்பதே சாலச் சிறந்தது!

மொய் தள்ளுபடி

கல்யாணம், காதுகுத்தல் போன்ற சுபநிகழ்ச்சிகளில் சில உஷார் பேர்வழிகள் சா.மு.வில் மொய் எழுதாமல், சா.பி. வரை வாய்தா வாங்குவார்கள். அதாவது  சாப்பிடுவதற்கு முன் - சாப்பிட்ட பின்!இவர்கள்தான் ‘பந்தியில் பாயசம் வரவில்லை... சாம்பார் ரசமாகிவிட்டது... அப்பளம் தெற்கு மூலையில் வேகவில்லை...’  என்றெல்லாம் வாஸ்து சார்ந்து வில்லங்கங்களை உதிர்த்து, மொய் வைக்காமல் இருக்க காரணங்களைத் தேடுவார்கள்!இதைத் தவிர்க்க சா.மு.வுக்கு முன் மொய்  எழுதுபவர்களுக்கு 10% தள்ளுபடி... இத்தொகையும் கேஷ் பேக் ஆக வழங்கப்படும் என அறிவித்தால் சாப்பாட்டுக்கு முன்பே ஒழுங்காக மொய் செலுத்தி  விடுவார்கள்!

ஏச்சுப் பேச்சு தள்ளுபடி

ரோஸ்ட் செய்ய சேப்பங்கிழங்கு வாங்கி வரச் சொன்னால்... சரியாக நினைவு வைத்திருந்து கருணைக் கிழங்கை வாங்கி வரும் கணவனை எப்படியெல்லாம்  மனைவி ரோஸ்ட் செய்வாள் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்; புரியும்! அம்மா, சகோதரிகளில் ஆரம்பித்து மொத்தமாக தன் பரம்பரையை மனைவி  எண்ணெய்யில் வறுத்து எடுப்பதை பார்த்துப் பார்த்து... கேட்டுக் கேட்டு கணவன்மார்கள் தீய்ந்து போகிறார்கள்.இதிலிருந்து தப்ப ஒரே வழி சரியாகப் பொருட்களை  வாங்கி வருவதுதான். அதையும் மீறி தவறு நிகழ்ந்துவிட்டால், ‘இன்று அமாவாசை. வானில் உன் முகம் மறையும் நாள்! மீண்டும் உன் முகத்தை வானில்  பார்க்கும் வரை விரதம் இருக்கிறேன். ஸோ, அதுவரை என் அம்மாவுடன் உன் ஏச்சுக்களை நிறுத்தி, மற்றவர்களைத் தள்ளுபடி செய்துவிடு!’ என வேண்டுகோள்  வைக்கலாம். ஒருபோதும் இது நிறைவேறாது... என்றாலும் முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை!

சீர்வரிசை தள்ளுபடி

‘எங்க எல்லாருக்கும் பெண்ணைப்பிடிச்சிருக்கு...’ என்று சொல்லிவிட்டு சீர்வரிசைகளைப் பட்டியலிடும் மாப்பிள்ளை வீட்டாரிடம், ‘பொண்ணுக்கு சமைக்கத்  தெரியும். அக்கம்பக்கத்துல இருந்து யார் வீட்டுக்கு வந்தாலும், மாமியார் பார்க்க மறந்த சீர்வரிசையைக் கூட என் பொண்ணு காட்டி பெருமையா பேசுவா.  வீட்டுக்குள்ள மாமியாரை அடிச்சு உதைச்சாலும் வெளில மாப்பிள்ளையோட அம்மாவுக்கு, தான் அடிமை மாதிரி காண்பிச்சுக்குவா!’ என்றெல்லாம் சொல்லி சீர்  வரிசையில் தள்ளுபடி பெறலாம்! இதற்காகவே பெண்ணை நடிப்புப் பயிற்சிக்கும் அனுப்பலாம்!l