ரத்த மகுடம்!!



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கே.என்.சிவராமன் -11


‘‘கரிகாலா! பல்லவ குலத்தை அழிக்கத்தான் சிவகாமி வந்திருக்கிறாள்! உன்னையும் அதற்குப் பயன்படுத்தத்தான் திட்டமிடுகிறாள்! புலவர் தண்டியையும் என்  அண்ணனும் பல்லவ மன்னருமான பரமேஸ்வர வர்மரையும் போல் நீயும் இவளிடம் ஏமாந்து விடாதே! எச்சரிக்கையாக இரு. எங்கள் குலத்தை காக்கும் பொறுப்பு  உனக்கிருக்கிறது!’’சொன்ன ஹிரண்ய வர்மர், நிமிர்ந்து குரல் கொடுத்தார். ‘‘சிவகாமி!’’‘‘தந்தையே!’’‘‘உச்சியில் கைக்கு அடக்கமாக ஒரு கல் இருக்கிறதா?’’‘‘ம்...’’‘‘அதை எடுத்துக் கொண்டு ஐந்தடி நகரு... இன்னும் கொஞ்சம்... ஆம். அங்குதான்! வட்டமாகக் குழி ஒன்று தெரிகிறதா?’’‘‘ம்...’’‘‘அதனுள் அந்தக் கல்லை நுழைத்து வலப்பக்கமாக ஐந்து முறை திருகு!’’ஹிரண்ய வர்மர்கட்டளையிட்டபடியே சிவகாமி செய்தாள்.அடுத்த கணம், அவள் நின்றிருந்த இடத்துக்கு நேர் கீழே, கரிகாலனுக்கு சற்றுத் தள்ளி பூமி பிளந்ததுஎவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் நின்றிருந்த கரிகாலன், தன் முன்னால் நிகழும் சகலத்தையும் ஒரு பார்வையாளனைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னுடன் பேசும்போது ஹிரண்ய வர்மரின் குரலில் வெளிப்பட்ட கோபமும் ஆத்திரமும் சிவகாமியுடன் உரையாடும்போது மறைந்து குழைவுடன் வெளிப்படுவதைக் குறித்துக்கொண்டான்.

தெளிவாகப் புரிந்தது. சிவகாமியை மையமாக வைத்து, அவள் செய்திருக்கும் சபதத்தை முன்வைத்து, பல்லவர்களைச் சுற்றி வலை பின்னப்படுகிறது. இயக்கும்  சூத்திரதாரி யாரென்று தெரியவில்லை. சிவகாமியின் பூர்வீகத்தையும் அவள் செய்திருக்கும் சபதத்தையும் அறிந்துகொண்டால் மட்டுமே வலையை விரித்து  பல்லவர்களை அழிக்க முற்படுபவர்கள் யாரென்று அறியமுடியும். ஒருவேளை கதம்ப இளவரசரும், ஹிரண்ய வர்மரும் சொல்வது போல் சிவகாமியே கூட அந்த சூத்திரதாரியாக இருக்கலாம்.கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் நம்பாமல் தீர விசாரித்தே முடிவுக்கு வரவேண்டும். அதன்பிறகே பல்லவர்களை அழிக்க முற்படும் அந்த மர்ம நபரை வீழ்த்த வேண்டும். அது தன் மனதைக் கொள்ளையடித்திருக்கும் சிவகாமியாகவே இருந்தாலும் சரி...கரிகாலன் இந்த முடிவுக்கு வரவும் பாறை மீதிருந்து சிவகாமி இறங்கி வரவும் சரியாக இருந்தது.

‘‘வாருங்கள்... கர்ப்பக்கிரகத்தினுள் நுழையலாம்!’’அழைத்த ஹிரண்ய வர்மர், தன் முன்னால் கீழ்நோக்கி விரிந்த படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து இறங்க முற்பட்ட கரிகாலனின் தோளை உரசியபடி சிவகாமி இறங்கத் தொடங்கினாள்.தன் தோளை வரவேற்க வேண்டிய, தைரியம் சொல்லி அரவணைக்க வேண்டிய கரிகாலனின் தோள், உணர்ச்சி ஏதுமின்றி அருகிலிருக்கும் பாறை போல் சலனமற்று இருந்ததை கணத்தில் சிவகாமி உணர்ந்தாள். பாறை  மீது, தான் ஏறியிருந்த சமயத்தில், தன் சிறிய தந்தை ஏதேனும் கூறியிருக்க வேண்டும்... அதுவும் தன்னைப் பற்றி. அதனால்தான் கரிகாலன்  கடினப்பட்டிருக்கிறான். அவள் கண்களில் அதுவரை பூத்திருந்த இனம்புரியாத உணர்வு மெல்ல மெல்ல வடிந்தது. அவனைப் போலவே அவளும் உள்ளுக்குள் இறுகினாள். ஓரடி தள்ளி நகர்ந்தாள்.சிவகாமிக்குள் நிகழ்ந்த மாற்றத்தை கரிகாலனும் உணர்ந்தான். இப்போது அமைதி காப்பதே நல்லது என்பதை அவன் புத்தி உணர்த்தியது. அதற்குக் கட்டுப்பட்டு அவளை முன்னால் நடக்கும்படி சைகை செய்தான்.மறுப்பு சொல்லாமல் ஹிரண்ய வர்மரைத் தொடர்ந்து படிக்கட்டில் இறங்கினாள் சிவகாமி. முப்பது படிக்கட்டுகள் வரை ஒருவர் பின் ஒருவராக அமைதியாக இறங்கினார்கள்.

சமதளத்தை அவர்கள் அடைந்ததும் சற்று நிதானித்தார்கள். மேலிருந்து வந்த வெளிச்சம் தவிர வேறு ஒளி அங்கில்லை. இதற்குள் ஹிரண்ய வர்மர் முன்னோக்கி நகர்ந்து அங்கிருந்த கல்தூணை அடைந்தார். அதனுள்ளிருந்த பொறியைத் திருகினார்.அடுத்த கணம் அவர்கள் இறங்கி வந்த பாதை மூடிக்கொண்டது. இருள் சூழ்ந்தது. இருளின் ஒளி பழக்கப்படும் வரை மூவரும் அசையாமல் நின்றார்கள். மெல்ல மெல்ல வானில் நட்சத்திரங்கள் மின்னுவது போல் அவர்கள் கண் முன்னால் ஒளிக்கற்றைகள் பூக்கத் தொடங்கின. அவை அனைத்தும் வாளிலிருந்து வெளிப்பட்ட ஒளிகள் என்பதும், வாட்களை ஒளிர வைத்தது ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் என்பதும் கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் புரிய சில கணங்களாகின.‘‘தந்தையே..!’’ தன்னையும் மறந்து சிவகாமி கூவினாள். ‘‘எத்தனை வாட்கள்... ஆயிரக்கணக்கில் இருக்கும்போல் தோன்றுகிறதே...’’‘‘ஏன் லட்சங்கள் என்று சொல்லத் தயங்குகிறாய்?’’ சிரித்தபடி ஹிரண்ய வர்மர் கேட்டார்.

‘‘எப்படி இது சாத்தியமாயிற்று தந்தையே?’’பிரமிப்புடன் கேட்டபடியே வாட்களின் பக்கம் சென்ற சிவகாமியை சடாரென்று கரிகாலன் இழுத்தான். ‘‘அருகில் செல்லாதே! இவை அனைத்தும் கொடிய நாகங்களின் விஷத்தில் ஊறியவை. சின்ன கீறல் கூட உயிரை மாய்த்துவிடும்...’’‘‘உண்மையாகவா..?’’ சிவகாமியின் குரலில் திகைப்பு வழிந்தது.‘‘சத்தியமாக. தமிழகத்தில் மட்டுமல்ல... சாளுக்கியர்கள் உட்பட இப்பரப்பில் இருக்கும் எந்த தேசத்திலும் இப்படிப்பட்ட வாட்கள் தயாராவதில்லை. ஹிரண்ய வர்மர் ஆட்சி செய்யும் பகுதியில்தான் சர்வ சாதாரணமாக இந்த ஆயுதங்களை உருவாக்க முடியும்...’’சொன்ன கரிகாலனையும், அதை ஆமோதித்தபடி பெருமையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஹிரண்ய வர்மரையும் மாறி மாறி சிவகாமி பார்த்தாள். அடக்கி வைக்கப்பட்டிருந்த வினா, அவளையும் அறியாமல் வெளிப்பட்டது. ‘‘தந்தையின் நாடு எங்கிருக்கிறது..?’’‘‘கடல் கடந்து!’’ கரிகாலன் பதிலளித்தான்.

‘‘கடல் கடந்தா... பல்லவர்கள் அங்குள்ள நிலப்பரப்பையுமா ஆள்கிறார்கள்..?’’‘‘சின்ன திருத்தம் மகளே!’’ அதுவரை அமைதியாக இருந்த ஹிரண்ய வர்மர் வாய் திறந்தார்.‘‘என்ன தந்தையே..?’’‘‘பல்லவர்கள் என்பதற்கு பதில் தமிழர்கள் என்று சொல்!’’‘‘விளங்கவில்லை தந்தையே..?’’‘‘உன் பிழையல்ல சிவகாமி... வரலாற்றை அறிந்துகொள்ள முயற்சி செய்யாத தமிழர்களின் குற்றம் அது. அதனால்தான் ஆய கலைகளிலும் வல்லவரான புலவர் தண்டியின் ரகசிய மாணவியாக நீ இருந்தபோதும் இந்த உண்மையை அறியாமல் இருக்கிறாய்...’’‘‘புலவரை குற்றம்சாட்டுகிறீர்களா தந்தையே..?’’‘‘இல்லை! உன் அறியாமையைச் சுட்டிக்காட்டுகிறேன்!’’‘‘சற்று விளக்க முடியுமா?’’‘‘புலவர் தண்டி ஒரு சக்தி உபாசகர் என்பதை நீ அறிவாய் அல்லவா..?’’‘‘ஆம்!’’

‘‘சாக்தர்களுக்கு லலிதா சகஸ்ரநாமம்தான் பிரதானம்...’’‘‘ம்...’’‘‘அந்த லலிதா சகஸ்ரநாமத்தை அகத்தியருக்கு உபதேசித்தவர் ஹயக்ரீவர்!’’‘‘புலவர் சொல்லியிருக்கிறார் தந்தையே...’’‘‘அவர் சொல்லாமல் விட்டதில்தான் உனது அறியாமையை நான் சுட்டிக் காட்டியதற்கான விஷயம் அடங்கியிருக்கிறது சிவகாமி...’’‘‘...’’‘‘எடுத்ததுமே அகத்தியருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை ஹயக்ரீவர் உபதேசிக்கவில்லை. லலிதா பரமேஸ்வரியின் அருமை பெருமைகளை கும்ப முனிக்கு அவர் விளக்கி வந்தபோது... போகிறபோக்கில், ‘அம்பாளின் ஆயிரம் நாமங்கள்’ என்றார். உடனே ஹயக்ரீவரை இடைமறித்த அகத்தியர், ‘ஆயிரம் நாமங்களா..? அதென்ன...’ என்று கேட்டார். இதன் பிறகே, தன் முன் மாணவராக கைகட்டி அமர்ந்திருந்த அகத்தியருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை ஹயக்ரீவர் உபதேசித்தார். இப்போது சூட்சுமம் புரிகிறதா சிவகாமி...’’

‘‘இல்லை தந்தையே!’’‘‘மறைபொருளாக இருக்கும் ரகசியத்தை எடுத்ததுமே எந்த குருவும் தன் மாணவர்களுக்குக் கற்றுத்தரமாட்டார். மாணவர்களுக்குள் தேடல் இருக்க வேண்டும். கற்றுத் தரும்போது உற்றுக் கவனித்து வினாக்களைத் தொடுக்க வேண்டும். அப்போதுதான் பாத்திரமறிந்து குரு கல்வி என்னும் பிச்சையை இடுவார். அப்படி ஹயக்ரீவரிடம் இடைமறித்து அகத்தியர் கேள்வி கேட்டதால்தான் லலிதா சகஸ்ரநாமம் உலகுக்கே கிடைத்தது...’’‘‘அதுபோல் புலவரிடம் நான் கேட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா..?’’‘‘ஆம் சிவகாமி. சங்ககால சோழர்களுக்குள் நடந்த வாரிசுரிமைப் போட்டி குறித்த பாடங்கள் வரும்போது புலவரை இடைமறித்து நீ வினா தொடுத்திருக்க வேண்டும்!’’ ‘‘தவறுதான் தந்தையே. இப்போது கேட்கிறேன். கடல் கடந்த நாடுகளிலும் தமிழர்கள் ஆட்சி செய்கிறார்களா..?’’‘‘ஆம்! அதற்கு அத்தாட்சியாக நானே உன் முன்னால் நிற்கிறேன்!’’ நெஞ்சை உயர்த்தி கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தமிழக சரித்திரத்துக்குள் அடங்கிய தன் வரலாற்றை விளக்கத் தொடங்கினார்.

‘‘கேள் மகளே! நீயும்தான் கரிகாலா... தமிழர்களின் மகோன்னதமான சரித்திரத்தை இருவரும் கேளுங்கள்...’’ உணர்ச்சிப் பிழம்புடன் ஹிரண்ய வர்மர் சொல்லத்  தொடங்கினார். செவிக்குக் கிடைத்த உணவை எவ்வித குறுக்கிடலும் செய்யாமல் கரிகாலனும் சிவகாமியும் பருகத் தொடங்கினார்கள்.‘‘மிக மிகப் பழமையான நிலப்பரப்புகளில் தொண்டை மண்டலமும் ஒன்று. சோழர்களும், பல்லவர்களும், ஆதொண்டச் சக்கரவர்த்தியும் ஆட்சி செய்வதற்கு முன்பே தொண்டை மண்டலம் இருந்திருக்கிறது. அப்போது அதன் பெயர், ‘குறும்பர் நிலம்’. குறும்பர் இன மக்கள் தங்கள் நிலத்தை இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரித்து ஆட்சி செய்து வந்தனர். காவிரிப்பூம்பட்டினத்து சோழ வணிகர்களுடன் கடல் வாணிகம் நடத்தி வந்தனர்.

சோழப் பரம்பரையின் ஒப்பும் உயர்வும் அற்ற கரிகாலச் சோழன், குறும்பர் நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் இப்பகுதியை தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டு  கடல்வழி வந்த நாகர் மகனான இளந்திரையன் ஆண்டதால் இப்பகுதி ‘தொண்டை மண்டலம்’ எனப் பெயர் பெற்றது.இதையெல்லாம் இலக்கியங்களில் நீங்கள் இருவரும் படித்திருப்பீர்கள். போலவே, சோழ தேசத்தில் வாரிசுரிமைப் போர் நடந்ததையும், அதில் வென்று கரிகாலன் மன்னரானார் என்பதையும். இந்தப் போட்டியில் கரிகாலனைக் கொல்ல சதிகள் அரங்கேறியிருக்கின்றன. கரிகாலன் தன் தாயோடு தங்கியிருந்தபோது அந்த இடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அப்போது தன் மாமன் இரும்பிடத்தலையாரால் அவர் காப்பாற்றப்பட்டார். என்றாலும் நெருப்பில் அவர் கால் கருகிவிட்டது. அதனாலேயே அவருக்கு கரிகாலன் என்ற பெயர் நிலைத்தது... என்பதையெல்லாம் அறிந்திருப்பீர்கள்.

ஆனால், மறைபொருளாக இதனுள் அடங்கிய செய்தியை கவனிக்கத் தவறியிருப்பீர்கள்.  அதில் பிரதானமானது சோழ தேசத்தில் வாரிசுரிமைப் போர் நடந்தது  என்பது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட சோழர்கள் சங்க காலத்தில் ஆட்சி உரிமை கோரியிருக்கிறார்கள் என்பது. இதில் மன்னராகப் பொறுப்பேற்றவர்களின் பெயர்  மட்டுமே வரலாற்றில் பதிந்திருக்கிறது. எனில், மற்றவர்கள் என்ன ஆனார்கள்..? எங்கு சென்றார்கள்..?இந்தக் கேள்வியை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இப்போது நாம் தவறவிட்ட அடுத்த செய்திக்கு நகர்வோம். அதுதான் தொண்டைமான் இளந்திரையன் கதை! புகார் நகரத்தை நெடுமுடிக்கிள்ளி ஆட்சி செய்து வந்தபோது, ஒருநாள் உலா சென்றான். அப்போது நாக நாட்டைச் சேர்ந்த அரசன் வளைவணனின் மகளானபீலிவளையைக் கண்டான். காதல் கொண்டான். இருவரும் காந்தர்வ மணம் செய்து கொண்டார்கள். ஒரு திங்கள் சதி பதியாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.அவர்களது அன்புக்கு அடையாளமாக பீலிவளை கருவுற்றாள். திடீரென்று ஒருநாள் நெடுமுடிக்கிள்ளியிடம் எதுவும் சொல்லாமல் அவள் மறைந்துவிட்டாள்.காதலியைப் பிரிந்து நெடுமுடிக்கிள்ளி தவித்தான். யாருக்கும் எந்த விபரமும் தெரியவில்லை. தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு புகாரில் அவன் வாழ ஆரம்பித்தான்.

இந்நிலையில் நாகர் நாட்டிலிருந்த தன் தந்தையின் அரண்மனைக்குச் சென்றுவிட்ட பீலிவளை உரிய காலத்தில் அழகான ஆண் மகனை ஈன்றாள். ஒருநாள் மணிபல்லவத் தீவில் இருந்த புத்த பீடிகைக்கு வழிபட குழந்தையுடன் சென்ற பீலிவளை, அங்கு புகார் நகரத்தைச் சேர்ந்த பெரு வணிகரான கம்பளச் செட்டியைச் சந்தித்தாள். தன் அருமை மகனைப் பட்டுத் துணியில் வைத்து, ஆதொண்டைக் கொடியால் சுற்றி, ஒரு மணிப்பேழையில் வைத்து, ‘உங்கள் மன்னரிடம் இவனை ஒப்படையுங்கள்’ என்று கொடுத்தாள்.குழந்தையுடன் புகாருக்கு கம்பளச் செட்டி புறப்பட்டார். நள்ளிரவில் அலைகள் மோதி அவரது கலம் கவிழ்ந்தது. பயணம் செய்தவர்கள் அனைவரும் பரதவர்களால் காப்பாற்றப்பட்டனர். ஆனால், குழந்தை என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.

செய்தி அறிந்த நெடுமுடிக்கிள்ளி, துயருற்றான். தன் மகனை நினைத்து ஏங்கினான். இதற்கிடையில் மணிப்பேழையில் ஆதொண்டைக் கொடியால் சுற்றப்பட்டிருந்த  குழந்தை கடலில் மிதந்து ஓர் இடத்தில் கரையை அடைந்தது. பின்னர், தான் அடைந்த இடத்தை அக்குழந்தை வளர்ந்து ஆளானதும் ஆட்சி செய்தது. அதுதான்  ‘தொண்டை மண்டலம்!’ அந்தக் குழந்தைதான் இளந்திரையன்.‘மணிமேகலை’யில் இந்தக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். இதில் பீலிவளையின் நாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே நாக நாடு... அதுதான் மறைபொருள் செய்தி! அதனுள்தான் தமிழகத்தின் மகத்தான சரித்திரம் புதையுண்டிருக்கிறது. ஆம். நாகலோகம் அல்லது நாகநாடு என்பது புராணக் கதை அல்ல; கற்பனையல்ல! அது ரத்தமும் சதையுமான மனிதர்கள் வசிக்கும் ஓர் நாடு!’’கம்பீரமாக அறிவித்த ஹிரண்ய வர்மர், தொடர்ந்தார். அவர் சொல்லச் சொல்ல கரிகாலனின் கண்களும் சிவகாமியின் விழிகளும் விரிந்தன.

(தொடரும்)   
ஓவியம்: ஸ்யாம்