க்யூஆர் வழியே பசுமைத் தகவல்கள்!



திருவனந்தபுரத்திலுள்ள இன்டாக் அமைப்பு கனகாகுன்னு அரண்மனையிலுள்ள தாவரங்களைப் பற்றிய தகவல்களை அறிய டிஜிட்டல் வழியைக்  கண்டறிந்துள்ளது. முதுகலை மாணவரான அகிலேஷ், பேலஸ் கார்டனிலுள்ள தாவரங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து அங்கு வரும்  சுற்றுலாப் பயணிகள் அறியும் விதமாக தொகுத்துள்ளார். நியோரீடர் ஆப் வழியாக QR codeஐ ஸ்கேன் செய்தால் 21 ஏக்கரிலுள்ள 126 தாவரங்களைப்  பற்றிய துல்லியமான தகவல்களை அறிய முடியும். இத்தகவல்களைத் தொகுப்பதில் மாணவர் அகிலேஷுக்கு வழிகாட்டியாக பேராசிரியர் கங்காபிரசாத்
உதவியுள்ளார்.

குழந்தைகளை மீட்கும் ஆப்!

வறுமை, குழந்தைத் தொழிலாளர், விபசாரம் ஆகியவற்றுக்காக குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க  வணிகத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு ‘ரீயூனைட்’ எனும் appஐ தில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளார். தோராயமாக இந்தியாவில் தினசரி 180  குழந்தைகள் காணாமல் போவதாக ‘ஹஃப்பிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தகவல் தெரிவிக்கிறது.

பச்பன் பச்சோ அந்தோலன் அமைப்புடன் கேப்ஜெமினி கைகோர்த்து குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் இந்த ஆப்பை உருவாக்கியுள்ளனர். தொலைந்த  குழந்தைகளின் புகைப்படங்களை ஆப்பில் ஏற்றி அமேசான் வெப் சர்வீஸ் மூலம் தேட முடியும். இப்புகைப்படங்களை போனின் நினைவகத்தில்  சேமிக்க முடியாது. ஆப்பிலிருந்து வெளியேறும்போது புகைப்படங்கள் தானாகவே அழிந்துவிடுமாம். தில்லி போலீஸ் இந்த ஆப் மூலம் மட்டும் 3  ஆயிரம் குழந்தைகளை மீட்டுள்ளனர்!

பெண்களைக் காக்க மறந்த இந்தியா!

பேச்சளவிலும் விளம்பரங்களிலும் ‘பேட்டி பச்சாவோ’ என இந்திய அரசு கூறினாலும் வல்லுறவு, பாலியல் தாக்குதல், கடத்தல் சம்பவங்களில் இந்தியா  முதலிடத்திலுள்ளதாக அண்மையில் வெளியான தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் செய்த ஆய்வு கூறுகிறது. அண்மையில் வெளியான 2016 தேசிய  குற்றப்பதிவு ஆணைய (NCRB) அறிக்கையில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருக்கிறது. சைபர்  குற்றங்களின் அளவு 6.3% உயர்ந்துள்ளது.

இதில் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் ஏற்படும் வன்முறைச் சம்பவங்களின் விகிதம் 32.6%. பாலியல் வல்லுறவில் டாப் இடங்களில்  மத்தியப் பிரதேசமும் (4,882), உத்தரப்பிரதேசமும் (4,816), மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் (4,189) உள்ளன. இந்தியாவில் குற்ற சராசரியின்  அளவு 55.2% என்றால் தலைநகரான தில்லியில் மட்டும் பெண்கள் மீது அதிகரித்துள்ள குற்றங்களின் விகிதம் 160.4% உயர்ந்து கிறுகிறுப்பு தருகிறது.  2007 - 2016 காலகட்டத்தில் மட்டும் பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை 83% உயர்ந்துள்ளது. அதாவது ஒரு மணிநேரத்துக்கு நான்கு  வல்லுறவுகள். வரலாற்றுக் களங்கம் இதுதானோ?

தொகுப்பு: ரோனி