தோட்டச் செடிகளுக்கு எப்படி நீர் பாய்ச்சக் கூடாது..?



ஹோம் அக்ரி-13

செடிகளுக்கு எப்படி நீர் தரக் கூடாது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில் நீர் பாய்ச்சக்கூடாது. அப்படிச் செய்தால் நீர்  எளிதில் ஆவியாகும். மேலும் நீரும் சூடாக இருக்கும். அதனால் காலை 9 மணிக்குள் அல்லது மாலையில் நீர் பாய்ச்சலாம்.

மாடித் தொட்டியிலிருந்து பாய்ச்சுவதாக இருந்தால் நீர் சூடாக இருக்கிறதா என பரிசோதித்துவிட்டு பாய்ச்சுவது நல்லது. அதேபோல் தேவைக்கு  அதிகமாக நீர் கொடுக்கக் கூடாது. செடியின் வேர் இருக்கும் பகுதிகள் ஈரமாக இருக்கத் தேவையான அளவே நீர் வேண்டும். தேங்கியிருக்கும் படி  பாய்ச்சக்கூடாது. பெரும்பாலான செடிகளுக்கு தினமும் நீர் தேவைப்படாது. மண்ணில் ஈரம் போதுமான அளவு இருந்தால் ஓரிரு நாள் கழித்துப்  பாய்ச்சலாம். பொதுவாகவே ‘காய்ச்சலும் பாய்ச்சலும்’ என்ற முறையில் நீரிடுவது எல்லா பயிருக்குமே நல்லது.

பொதுவாகவே அழுத்தமான சூழ்நிலையில் செடிகள் உற்பத்தி செய்ய தங்களை ஆவணப்படுத்திக் கொள்கின்றன. நீரும் உரமும் தொடர்ந்து கொடுக்கும்  போது அவை அதிகமான இலைகளையும் கிளைகளையுமே பெருக்க விழைகின்றன. இது செடியின் உற்பத்தித் திறனை பாதிக்கும். அதனால் பூக்கும்  தருணம் வருவதற்கு சற்று முன் நீர் பாய்ச்சாமலோ, குறைந்த அளவே நீர் பாய்ச்சுவதோ நல்லது. சொட்டு நீர் / தெளிப்பு நீர் நேரமும் அளவும்: சொட்டு  நீர், தெளிப்பு நீர் அமைக்கும் போது செடிகளின் தேவைக்கேற்ப அவை அமையுமாறு அமைப்பது அவசியம்.

தேவைப்படும் நீரின் அளவு செடிகளின் வகை / அளவு / பருவம் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறும். அதனால் ஒரே மாதிரியான சொட்டு நீர் / தெளிப்பு நீர்  கருவியைப் பொருத்துவது கூடாது. ஒரே சொட்டு நீர் குழாயில் வெவ்வேறு அளவு / விதத்தினாலான drippers, sprinklers ஆகியவற்றைப்  பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான ஊட்டங்களையும் / பூச்சி விரட்டிகளையும் நீர் பாய்ச்சும் போதும் / தெளிக்கும்போதும் தருவது நல்லது. பூவாளி  அல்லது நேரடியாக குவளை அல்லது வாளி மூலம் நீரிடும் போது, தேவையான பொருளை தேவையான அளவு கலந்து தெளிக்கலாம்.

சொட்டு நீர் மூலமோ, தெளிப்பு நீர் மூலமோ செய்ய வேண்டி இருந்தால் இதற்காக தனி நீர் தொட்டியும், ஒரு சில கருவிகளும் தேவைப்படும். நீரின்  தரமும் மிக முக்கியமான ஓர் அம்சம். வீட்டுச் சூழலில் நாம் கிடைக்கும் நீரைத்தான் உபயோகிக்க முடியும் என்றாலும், நீரின் தரத்துக்கு ஏற்ப ஒருசில  முன்னேற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது. ஆழ்குழாய் நீர் பாய்ச்சும்போது பெரும்பாலான இடங்களில் இன்று உப்பு நீர்தான் கிடைக்கிறது. இந்த நீர்  செடிகளுக்கு உகந்ததல்ல. இதற்காக நாம் நல்ல குடிநீர் வாங்கி உபயோகப்படுத்த முடியாது.

நீரில் இருக்கும் உப்பின் அளவைப் பொறுத்து கீழ்க் கண்ட முறைகளில் இதன் பாதிப்பைக் குறைக்கலாம். அதிகமான இயற்கை உரம் பயன்படுத்துதல்:  அங்ககப் பொருள் நிறைந்த மக்கிய எருவை உபயோகப்படுத்தும் போது உப்பு நீரினால் ஏற்படும் காரத்தன்மை மட்டுப்படுத்தப்படுகிறது. அதிக உப்புள்ள  (கால்சியம் மக்னீசியம் நிறைந்த கடின நீர் - Hard water) நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும்போது, இயல்பாக இடும் அளவைவிட சற்று அதிகமாக  உபயோகிக்கும் போது, கடின நீரின் பாதிப்புகள் குறையும்.

ஹுமிக் ஆசிட் பயன்படுத்துதல்: இயற்கை எரு கிடைக்காதவர்களும், மாடியில் தோட்டம் வைத்திருப்பவர்களும் கடைகளில் கிடைக்கும் Humic  Acid-ஐ உபயோகப்படுத்தலாம். ஒரு சில மூட்டைகளில் கிடைக்கும் அங்ககப் பொருட்களின் பலனை ஓரிரண்டு லிட்டர் Humic Acid மூலமாகப்  பெறலாம். இது துகள்களாகவும், சிறு கட்டிகள் வடிவிலும், திரவமாகவும் கிடைக்கும். இதை மண் இறுகுவதுபோலத் தெரியும் போதெல்லாம் சிறு  அளவிலும் அல்லது மாதத்துக்கு ஓரிரு முறையும் பயன்படுத்தலாம்.

இதை தேவைக்கு அதிகமாக உபயோகித்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. தொட்டி மண்ணை அடிக்கடி மாற்றுதல்: உப்பு நீரால் ஏற்படும் பெரிய பாதிப்பு  மண் இறுகுதல் மற்றும் நுண்ணுயிர்கள் வாழமுடியாத சூழலை ஏற்படுத்துதல். இந்த நிலை நீரிலிருக்கும் உப்பின் அளவைப் பொறுத்து 2 - 3  மாதங்களிலோ, 10 - 12 மாதங்களிலோ ஏற்படலாம். இந்தச் சூழல் ஏற்படுமுன், தொட்டி மண்ணை மாற்றுவது ஒரு தீர்வாகும். மண்ணை மாற்றும்போது  தேவையான அளவு புது மண், குப்பைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

உப்பு நீர் தாங்கும் செடிகளை வளர்த்தல்: சில தாவரங்கள் உப்பு நீரில் நன்றாக வளரும். சில உப்புத்தன்மையைத் தாங்கி வளரும். வேறு சில செடிகள்  உப்பு நீரில் வளர முடியாதவையாக இருக்கும். நம்மிடம் இருக்கும் உப்பு நீரின் கடினத்தன்மையைப் பொறுத்து நாம் என்ன பயிரிட வேண்டும் என்பதை  முடிவு செய்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் விட நல்ல தீர்வு, நம் ஆழ்குழாய் நீரின் காரத்தன்மையை மாற்றுவதுதான். இதை எப்படிச்  செய்யலாம்?

கேள்வி பதில்கள்

வீட்டில் திராட்சை வளர்க்க முடியுமா? எப்படி வளர்க்க வேண்டும்?
- தேவராஜ், தருமபுரி.

மிகவும் அதிகபட்ச பூச்சிக் கொல்லிகளின் அளவோடு வரும் பழங்களில் திராட்சையும் ஒன்று. திராட்சைப் பயிர் பலவிதமான நோய்களாலும்,  பூச்சிகளாலும் தாக்கப்படுவதால், பழத்தை பறிக்கும் வரை, சிலர் பறித்த பின்னும் கூட பூச்சிமருந்து உபயோகப்படுத்துகிறார்கள். இந்த ஒரு  காரணத்துக்காகவே வீட்டில் திராட்சை வளர்க்க வேண்டும். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் வீட்டில் வளர்க்கத் தகுந்த பயிர்தான்.

தோட்டமாக வளர்க்க வேண்டுமென்றால் சாதகமான தட்பவெப்ப சூழல் வேண்டும். திண்டுக்கல், தேனி, ஓசூர் போன்ற பகுதிகளில் திராட்சை பணப்  பயிராக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்க அருகிலுள்ள நர்சரியிலிருந்து கன்றுகளை வாங்கி குழியில் நல்ல கரம்பை மண், குப்பை நிரப்பி நடலாம்.  அல்லது நல்ல முற்றிய திராட்சை குச்சியைக் கொண்டு வந்து, அதை வேர்பிடிக்க வைத்து நடலாம். பந்தலின் மேல் படரும் வரை கிளை விடாமல்  ஒற்றைக் குச்சியாகவே வளர்க்க வேண்டும்.

பின்னர் நுனிகளை நறுக்கி கிளைகளைப் படரவிடலாம். 15 மாதங்களிலிருந்து பலன் தர ஆரம்பிக்கும். 10 - 15 வருடங்கள் வரை பலன் தரும்.  வீட்டுக்கு ஒரு கொடியே போதுமென்றாலும், 4 - 5 கொடிகளை நடுவது நல்லது. ஏனெனில் ஒருசில கொடிகள் காய்க்காமலும் போகும். அது வளர்ந்த  பிறகுதான் தெரியும். தெரிந்தபின் நீக்கிவிட்டு பலன் தரும் கொடியை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

கத்திரியை வீட்டுத் தோட்டத்தில், தொட்டியில் வளர்ப்பது நல்லதா அல்லது மண்ணில் வளர்ப்பது நல்லதா?
- சி.ரவி, செய்யாறு.

இரண்டிலுமே வளர்க்கலாம். பெரிய செடியாக வளரும் ரகமாக இருந்தால் மண்ணில் வளர்ப்பது நல்லது. இது பல மாதங்கள் பலன் கொடுக்கும். பல  பாரம்பரிய ரகங்கள் இது போன்றவை. வீரிய ரகங்களை தொட்டியிலும், தரையிலும் வளர்க்கலாம். இரண்டிலுமே நல்ல மண் வளத்தை பராமரிப்பது  அவசியம்.

நெல் நாற்றுகளை டிரேயில் வளர்க்கலாம் என்கிறார்களே? அது எப்படி?
- டி.என்.இளங்கோவன், ஆடுதுறை.

ஆமாம். நாற்றங்கால் தயாரிப்பதில் தாமதமாகும் சூழலிலும், வேறு சில காரணங்களாலும் இதற்காகவே வடிவமைக்கப்பட்ட தட்டுகளில் நாற்றுகளை  வளர்க்கலாம். இது எளிதாகவும் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல வசதியாகவும் இருக்கிறது. இந்த தட்டுகள், மாவட்ட வேளாண்  அலுவலகங்களிலும், தனியார் கடைகளிலும் கிடைக்கும். இந்தத் தட்டுகளை ‘நுண்பசுந்தழைகளை’ வளர்க்கவும் பயன்படுத்தலாம்.

(வளரும்)
மன்னர் மன்னன்