உயிரைக் காப்பாற்றிய ராதிகா... பிள்ளையாக வளர்க்கும் சித்திக்..!நெகிழும் கல்யாணப்பரிசு இயக்குநர் பி.செல்வம்

‘மு ந்தானை முடிச்சு’, ‘மரகத வீணை’, ‘கேளடி கண்மணி’... இப்போது ஒளிபரப்பாகி வரும் ‘கல்யாணப்பரிசு’ என சன் டிவியில் தமிழ் மெகா  தொடர்களையும்; ‘மழை’, ‘லட்சுமி’, ‘மாங்கல்யா’ என உதயா டிவியில்  கன்னட சீரியல்களையும் இயக்கி செம ஸ்கோர் குவிக்கிறார் பி.செல்வம்.

‘‘இதுக்கெல்லாம் காரணம் சன் டிவியும் ‘சினி டைம்ஸ்’ சித்திக் சாரும்தான்...’’ என எடுத்ததுமே மனிதர் நெகிழ்கிறார். ‘‘சினிமா டைரக்டர் ஹரி சார் தன்  பேட்டிகள்ல ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்வார்-‘ஒரு கம்பெனில நாம படம் பண்றது பெரிய விஷயமில்ல. ஆனா, அடுத்த படமும் அதே  கம்பெனிக்கு பண்றது பெரிய விஷயம். அது அவார்ட் வாங்கினதுக்கு சமம்...’ இது சின்னத்திரைக்கும் பொருந்தும். இந்த வகைல சித்திக் சார்கிட்ட நான்  அஞ்சு அவார்ட் வாங்கியிருக்கேன்...’’ என்று சொல்லும் பி.செல்வம், நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சமுத்திரக்கனியின் கசின் பிரதர்.

இயக்குநர் சுந்தர் கே.விஜயனின் உதவியாளர். ‘‘சொந்த ஊர் ராஜபாளையம் பக்கம் சேத்தூர் கிராமம். அப்பா பொன்னுசாமி, பொதுப்பணித்துறைல  சப்-கான்ட்ராக்டர். அம்மா, முத்தம்மா இல்லத்தரசி. எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. ஒரிஜினல் பேரு சின்ன பொன்னுசாமி. வீட்ல கடைக்குட்டி.  அதனால எல்லாரும் என்னை செல்லமா ‘செல்வம்’னு கூப்பிடுவாங்க. கடைசில அந்தப் பேரே ஸ்கூல்லயும் பதிவாகி நிலைச்சுடுச்சு. படிப்புல ரொம்ப  சுமார். ஆனா, மத்த திறமைகள் என்கிட்ட இருக்குனு வடிவு டீச்சரும், ஜெயராம் சாரும் புரிய வைச்சாங்க.

ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டினு எந்த போட்டியா இருந்தாலும் கேட்காமயே என் பெயரை சேர்த்துடுவாங்க. என் மேல அவங்க வைச்ச அந்த  நம்பிக்கைக்காகவே சின்சியரா போட்டிக்கு தயாராவேன். ப்ளஸ் 1ல விவேகானந்தா கேந்திரா நடத்தின போட்டிகள்ல நாலு கோல்ட் மெடல்களும், 3  வெள்ளியும் கலெக்டர் கையால வாங்கினேன்...’’ என தன் பயோடேட்டாவை சுருக்கமாக சொல்லும் செல்வம், இதன் பிறகு வேறு ரூட்டை  எடுத்திருக்கிறார். ‘‘ப்ளஸ் 2 முடிச்சதும் ஊர்ல ஒரு பெண்ணை சைட் அடிச்சேன்! அந்தப் பொண்ணு கம்ப்யூட்டர்ல டிப்ளமா படிச்சிட்டிருந்தது.

இதுக்காகவே நானும் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கப் போறேன்னு வீட்ல சொன்னேன். அப்ப பொருளாதார ரீதியா குடும்பமே சிரமத்துல இருந்தது.  ஆனாலும் நான் கேட்டேன்னு அக்கம்பக்கத்துல கடனை வாங்கி எங்கப்பா என்னையும் சேர்த்து விட்டார். கண்ணக் கட்டி காட்ல விட்ட மாதிரி  இருந்தது. கம்ப்யூட்டர் கோர்ஸ் சுத்தமா புரியலை. மண்டைல ஏறலை. எந்தப் பொண்ணுக்காக டிப்ளமா கோர்ஸ்ல சேர்ந்தேனோ, அந்தப் பொண்ணு  நான் சேர்ந்த ஒரு வாரத்துல படிப்பை முடிச்சுட்டு போயிட்டாங்க! என்ன செய்யறதுனு தெரியலை. தொடர்ந்து படிக்க விருப்பமில்ல.

எப்படி எஸ்கேப் ஆகறதுனு யோசிச்சப்ப பேப்பர்ல ‘சினிமாவில் நடிக்க புதுமுகங்கள் தேவை’ விளம்பரத்தைப் பார்த்தேன். உடனே அதுல இருந்த  முகவரிக்கு என் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கி கடிதம் எழுதினேன். ‘உங்களை மாதிரி ஆட்களைத்தான் தேடிட்டு இருக்கோம்! உடனே  புறப்பட்டு வாங்க’னு பதில் கடிதம் வந்தது! சந்தோஷத்தோட அதை வீட்ல காட்டினேன். பெத்தவங்களுக்கு சந்தோஷம். ‘கம்ப்யூட்டர் படிப்பு வேணாம்...  நீ மெட்ராஸுக்கு போ’னு அவங்க வாயாலயே சொல்ல வச்சேன்!

அம்மா தன் மூக்குத்தியை வித்து அந்தப் பணத்தை ‘நீ நல்லா வருவ கண்ணு’னு கொடுத்தாங்க...’’ சொல்லும்போதே செல்வத்தின் குரல் உடைகிறது.  மவுனமாக தன்னை சமாளித்துக் கொண்டவர் தொடர்ந்தார். ‘‘சென்னைல என் அண்ணன் சமுத்திரக்கனியும், மாமா நாராயணனும் இருந்தாங்க. கனி  அண்ணன் அப்ப ‘உன்னைச் சரணடைந்தேன்’ படத்தை டைரக்ட் பண்ணிட்டிருந்தார். நாராயணன் மாமா, சுந்தர் கே.விஜயன் சார்கிட்ட ஒர்க்  பண்ணிட்டிருந்தார். ரெண்டு பேர்கிட்டேயும் ‘அந்த அப்பாயின்ட்மென்ட்’ ஆர்டரை காட்டினேன்! ‘வந்துட்டல்ல... நீயும் போராட ஆரம்பி’னு சொல்லிட்டு  கனி அண்ணன் படப்பிடிப்புக்கு கிளம்பிட்டார்.

சுந்தர் கே.விஜயன் சார் ஷூட்டுக்கு போறப்ப மாமா நாராயணன் என்னையும் கூட்டிப் போவார். சீரியல் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துப் பார்த்து அந்த  வேலை எனக்குப் பிடிச்சுப் போச்சு. கனி அண்ணன்கிட்ட சொன்னேன். அவரோட ஸ்ட்ராங் ரெக்கமண்டேஷன்ல சுந்தர் கே.விஜயண் சார் என்னை  சேர்த்துக்கிட்டார். அப்ப அவர் சீரியல் உலகத்துல உச்சத்துல இருந்தார். அவர்கிட்ட எனக்கு என்ன வேலை தெரியுமா..?’’ கேள்வியுடன் நம்மைப் பார்த்த  செல்வம், பதிலை எதிர்பார்க்காமல் தானே தொடர்ந்தார். ‘‘அவரோட கைக்கடிகாரம், பர்ஸ்... இதையெல்லாம் பத்திரமா வைச்சுக்கற வேலை!  ஆரம்பத்துல ஃபீல் பண்ணினேன்.

ஆனா, எப்பவும் டைரக்டர் கூட நிற்கிற வேலை. உதவியாளர்களுக்குக் கூட கிடைக்காத பதவியா போகப் போகத் தெரிஞ்சுது. டைரக்டர் கூட சேர்ந்து  மானிட்டர் பார்க்கிற வாய்ப்பு! மாசம் 300 ரூபா சம்பளத்துல அவர்கிட்ட சேர்ந்தவன் படிப்படியா உயர்ந்தேன். 7 வருஷங்கள் அவர்கிட்ட ஒர்க்  பண்ணினேன். ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’னு சார் டைரக்ட் செஞ்ச எல்லா சீரியல்கள்லயும் இருந்தேன். அசோசியேட் ஆகற அளவுக்கு  உயர்ந்தேன். இந்த நேரத்துலதான் மறக்க முடியாத அந்த சம்பவம் நடந்தது. அது ‘செல்வி’ ஷூட் நடந்த நேரம். அதுக்கு நான் அசோசியேட்.

இலங்கைல கடல் பக்கம் ஷூட்டிங். திடீர்னு யாரும் எதிர்பார்க்காத நேரத்துல சுனாமி வந்து தாக்குச்சு. ராதிகா மேம், எங்க எல்லார் உயிரையும்  காப்பாத்தினாங்க. என் வாழ்க்கைல மறக்கவே முடியாத நிகழ்வு இது. இந்த நேரத்துல திடீர்னு ஒருநாள் சுபா வெங்கட் மேமும், ராஜ்பிரபு சாரும்  என்னை கூப்பிட்டு ‘செல்வி’யோட கன்னட ரீமேக்கான ‘லட்சுமி’யை இயக்கச் சொன்னாங்க! என்னால நம்பவே முடியலை. கன்னடம் தெரியாது.  அதுக்காக வந்த வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பலை.

உடனடியா கன்னடம் கத்துக்கிட்டேன். டைரக்டரா உயர்ந்தேன்!’’ என்று சொல்லும் செல்வம், இதன் பிறகே சித்திக்கின் செல்லப் பிள்ளையாகி  இருக்கிறார். ‘‘கன்னட ‘லட்சுமி’ ஹிட் ஆனதும், ‘சினி டைம்ஸ்’ சித்திக் சார் கூப்பிட்டு ‘மெட்டிஒலி’ ரீமேக் கான ‘மாங்கல்யா’வை இயக்கச் சொன்னார்.  ஆயிரம் எபிசோடுகள் போன தொடர் அது. ‘மாங்கல்யா’ ஷூட் பெங்களூருக்கு பக்கத்துல நடந்தப்ப கன்னடர்- தமிழர் பிரச்னை கொழுந்துவிட்டு  எரிஞ்சுது. ‘தமிழ்நாட்டுக்காரங்க இங்க படப்பிடிப்பு நடத்தக்கூடாது’னு ஸ்பாட்டுக்கே வந்து கலாட்டா பண்ணினாங்க.

அதை எப்படியோ சமாளிச்சோம்!’’ என்று சிரிக்கும் செல்வத்துக்கு இக்காலகட்டத்தில்தான் ராஜேஸ்வரியுடன் திருமணமாகி இருக்கிறது. ‘‘சித்திக் சார்  எதிர்பார்த்த சக்சஸை ‘மாங்கல்யா’ல கொடுத்ததால கன்னடத்துலயே நேரடியா ‘மழை’ சீரியல் இயக்க அடுத்த சான்ஸை கொடுத்தார். இதையும் சக்சஸ்  பண்ணிக் காட்டினதும் தமிழுக்கு அவரே கூட்டிட்டு வந்தார். ‘முந்தானை முடிச்சு’, ‘கேளடி கண்மணி’, ‘மரகத வீணை’னு தொடர்ச்சியா அவர் தயாரிப்புல  இயக்கினேன். தன் மகன் மாதிரியே என்னைப் பார்த்துக்கறார்.

சொந்த வீடு வாங்க பொருளாதார ரீதியா அவ்வளவு உதவினார்...’’ நெகிழ்ந்த செல்வம், இப்போது ‘கல்யாணப் பரிசு’ சீரியலை இயக்கி வருகிறார்.  ‘‘சமுத்திரக்கனி அண்ணன் தயாரிப்புல ‘கேளடி கண்மணி’க்குப் பிறகு ஒரு தொடர் இயக்க ரெடியானோம். அப்ப ‘விஷன்டைம்’ல இருந்து ‘கல்யாணப்  பரிசு’ டைரக்ட் பண்ணச் சொல்லி ஆஃபர் தேடி வந்தது. கனி அண்ணன்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். ‘நாம எப்ப வேணா தயாரிக்கலாம். பெரிய  கம்பெனில இருந்து வர்ற வாய்ப்பை மிஸ் பண்ணாத’னு அட்வைஸ் பண்ணி, போகச் சொன்னார். இப்ப ‘கல்யாணப்பரிசு’ நல்லா போயிட்டிருக்கு.

பெண்களை தைரியசாலிகளா சீரியல்ல காட்டத்தான் விரும்பறேன். அப்படித்தான் தயாரிப்பாளர்கள் உதவியோட கொண்டும் போறேன். அழுகாச்சி  சீன்ஸ் என் சீரியல்ல இருக்காது. பிரச்னைகளை மனோபலத்துடன் எதிர்கொள்கிற பெண்களைத்தான் எப்பவும் சீரியல்ல ஹைலைட் செய்வேன்...’’ என்று  சொல்லும் செல்வம், திருமணத்துக்குப் பிறகு தன் மனைவியை பி.எல். படிக்க வைக்கிறார். இவர்களது அன்புக்கு அடையாளமாக ஸ்ரீநாத், சுஷாந்த் தேவ்  என இரு மகன்கள் பட்டாம்பூச்சிகளாக வீட்டை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.


மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்