அசுரவதம்-விமர்சனம்‘ஒரு வாரத்துக்குள் கொல்லப்படுவாய்’ என ஆவேசமும், ஆத்திரமும், கோபமும் கொண்ட வார்த்தைகளில் ஓர் அலைபேசி அழைப்பும், அதைத்  தொடர்ந்து குற்றவாளி வேட்டையாடப்படுவதுமே ‘அசுரவதம்’. வசுமித்ரவுக்கு தொடரும் போன் கால்கள். எடுக்கும் போதே தொடர்பு அறுந்து விடுகிறது.  கடைசியில் அந்த குரலும் கேட்கிறது. ேகட்ட பிறகு வசுமித்ரவுக்கு தென்படுபவர்கள் எல்லாம் எதிரிகளாகவே தோன்றுகிறார்கள்.

விரட்டப்பட, தேடப்பட, சந்தேகப்பட என நிறைகிற முதல் பாதி நிமிடங்கள் பரபரப்பானவை. ‘இன்னார் ஹீரோ, இன்னார் வில்லன்’ என சொல்ல  முடியாமல், ஒவ்வொருவரின் மீதும் கதையின் கனத்தை ஏற்றியதும், ‘டேய், யாருடா நீ’ என்ற வசுமித்ராவின் ஒற்றை அலறல் கொண்டு வரும்  பயமும், இறுதியில் சசிகுமார் எடுக்கும் திருப்பமான திகைப்பான முடிவுமே ‘அசுரவதத்’தின் க்ளைமேக்ஸ்! ஒரு ஆக்‌ஷன் த்ரில்லரில் சமூகத்தின்  பாழ்பட்ட நோயைப் படம் பிடித்து காட்டியிருக்கும் அக்கறைக்காகவே இயக்குநர் மருதுபாண்டியனுக்குப் பாராட்டு.

அன்பும், நெகிழ்வும், உழைப்பும் பாசமுமாகத் திரிகிற மக்களுக்கு நேர்கிற கொடுமையை ஈரத்தோடு காட்டியிருக்கிற தன்மைக்கு அன்பு. வார்த்தைகளை  எண்ணிப் பேசும் இயல்பில் அறிமுகமாகும் சசிகுமார், கண் தொடங்கி கணுக்கால் வரை மிரட்டியிருக்கிறார். முதல் பாதி வரை நான்கைந்து  வார்த்தைகளே பேசி வந்து போகும் கம்பீரமும், காரண காரியம் தெரியாமல் ஈர்த்துக்கொள்ளும் கதையமைப்பும் சசிக்கு மட்டுமில்லை நமக்கும்  கொஞ்சம் புதுசு. பழி வாங்குதல் சசிகுமாரின் திரைவார்ப்பில் புதிதல்ல.

அதற்காக எடுத்துக்கொண்ட களம், அதன் உண்மை, யாருக்கும் அப்படியொரு அவலம் நேர்ந்துவிடுமோ என்ற நடுங்கும் உண்மைக்கு அருகே கதையைக்  கொண்டு வந்ததுதான் அழகு. நடிகராகி இருக்கும் எழுத்தாளர் வசுமித்ரவுக்கு இந்தப் படம் தனித்துவ அடையாளம். அதட்டலும், மிரட்டலும், கண்ணில்  கொட்டுகிற பயமுமாக அசல் வார்ப்பு. ஒவ்வொருவரையும் சசியின் வடிவில் கண்டு பயப்படுவதும், பின் தெளிவதுமாக அபாரம்.

வசுவின் நண்பன் ராஜசிம்மன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் ரவி எல்லாரும் நடிப்பில் இயல்பு. கவுரவ வேடத்துக்கு சற்று மேலே வந்தாலும் நந்திதாவின்  பாத்திரப் படைப்பு பொருந்துகிறது. ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஷீலா ராஜ்குமார், அவைகா, நமோ நாராயணன் என எதிர்படுகிற மனிதர்களிடம் எல்லாம்  எதார்த்தமும் நெகிழ்வும் தலைகாட்டுகிறது. இன்னொரு கதாநாயகனாக எஸ்.ஆர்.கதிரின் கேமரா! ‘இருக்கிறேன்...’ என்றெல்லாம் மிரட்டலாக காட்டிக்  கொண்டிராமல் இயல்பாக கை கொடுக்கிறார் கதிர்.

வசுமித்ர, சசிகுமாரின் இடத்திலேயே தொடர்ந்து நிற்பதில் கொஞ்சம் அலுப்பு. புதியவர் கோவிந்த் வஸந்தா பாடல்களில் காட்டும் மென்மை ஈர்க்கிறது.  ஆனால், மௌனம் விளையாடும் இடங்களை கூட படபடப்பு இசையில் நிரப்புவது ஏனோ? சில இடங்களில் பயணித்த தடத்திலேயே மீண்டும் மீண்டும்  பயணிக்கும் உணர்வு. இருந்தும் எளிய மக்களின் மீதான அக்கறையில் எச்சரிக்கும் பக்குவத்தால் கவனம் பெறுகிறது ‘அசுரவதம்’.  


குங்குமம் விமர்சனக்குழு