ஸ்மார்ட் சிட்டி ஆகும் சென்னை- வரமா? சாபமா?



கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி நாட்டில் உள்ள நூறு நகரங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்படும் என்று  அறிவித்தார். முதல் கட்ட அறிவிப்பில் இருபது நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் 17வது நகரமாகப் பட்டியலில் இடம்  பிடித்திருந்தது சென்னை மாநகரம்.

வளர்ந்த நாடுகளில் உள்ள மிகப் பெரிய நகரங்களின் தரத்துக்கு இந்திய நகரங்களை உயர்த்தும் திட்டம்தான் ஸ்மார்ட் சிட்டி கான்செப்ட். இதன்படி,  இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் அடிப்படைக் கட்டுமானங்கள் மிகச் சிறந்த முறையில் மேம்படுத்தப்படும். தரமான சாலைகள்,  உயர்தர மருத்துவ வசதி, சிறப்பான குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம், பசுமையான சுற்றுச் சூழல், கண்காணிப்பு நிறைந்த பாதுகாப்பான பொது  இடங்கள், நகரத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் வசதியான வீடுகள்... இதுதான் ஸ்மார்ட் சிட்டி.

இத்திட்டத்துக்காக மத்திய அரசு மொத்தம் 98 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது. இதன்படி, தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு  நகரத்துக்கும் முதல் கட்டமாக இருநூறு கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு தலா நூறு கோடி ஒதுக்கப்படும். இது மத்திய அரசு  தரும் தொகை மட்டுமே. இதே அளவுள்ள தொகையை மாநில அரசும் ஒதுக்க வேண்டும். போலவே சம்பந்தப்பட்ட நகரமும் தன் நிதி ஆதாரங்களில்  இருந்து - அதாவது குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி போன்ற வரி ஆதாரங்களில் இருந்து - குறிப்பிட்ட தொகையைத் திரட்டி இந்த ஸ்மார்ட்  சிட்டி திட்டத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.

அவசியம் எனில் இந்தத் திட்டத்துக்காக மாநில அரசோ, சம்பந்தப்பட்ட மாநகராட்சியோ அந்நியர்களிடம் கடன் வாங்கலாம். உலக வங்கி (WB), ஆசிய  வளர்ச்சி வங்கி (ADB), ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA), ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி அமைப்பு (UNIDO)... போன்ற  பன்னாட்டு அமைப்புகள் இதற்காகக் கடன் தரத் தயாராக இருக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை முதல் கட்டமாக Chennai Smart City  Limited (CSCL) என்ற நிறுவனம் கம்பெனிகள் சட்டம் 2013ன் படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பங்குகள் வரையறுக்கப்பட்ட ஒரு பொது நிறுவனம். இதன் சேர்மேனாக சென்னை பெருகநகர கமிஷனர் இருப்பார். இவருடன் இதன்  இயக்குநர்களாக ஏழு அரசு அதிகாரிகள் உட்பட சிலர் இருப்பார்கள். சென்னை முழுதும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நிகழும் எல்லா பணிகளுக்கும்  இந்த சி.எஸ்.சி.எல் நிறுவனம்தான் பொறுப்பு. அடிப்படை வசதிகளை உருவாக்குவதும், பராமரிப்பதும், அது தொடர்பான டெண்டர்கள் கொடுப்பதும்,  மேற்பார்வையிடுவதும், நிதி ஆதாரங்களை உருவாக்குவதும், பன்னாட்டு நிறுவனங்களில் கடன் வாங்குவதும் இவர்கள் உரிமை.

ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் உருவாக்கத்துக்காக தனியார் நிறுவனங்களை பார்ட்னர்களாக சேர்த்துக்கொள்ளவும் இந்த நிறுவனத்துக்கு அதிகாரம்  உள்ளது. இதை, PPP (Private - Public - Partnership) என்பார்கள். சென்னையில் இதன்படி சில மாநகராட்சி பூங்காக்களில் பசுமைப் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, wifi இணைப்பு, டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்தும் வசதி, நவீன கழிப்பறை வசதிகள் ஆகியனவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரம் முழுதும் இயங்கும் சாலை விளக்குகளை மேம்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பழைய சோடியம் விளக்குகள், மெர்க்குரி விளக்குகள் ஆகியவற்றை நீக்கிவிட்டு புதிய எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான  காண்ட்ராக்ட் ஒரு தனியார் மின்விளக்கு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட உள்ளது. நீர் விநியோகத்தைப் பொறுத்த வரை சென்னை மாநகராட்சியில் 5275  கி.மீ. நீளத்துக்கு விநியோக அமைப்புகள் உள்ளன. ஐந்து பெரிய நீர்த் தேக்கங்கள், ஐந்து வாட்டர் ட்ரீட்மென்ட் பிளான்ட்கள் உள்ளன. இவற்றை  எல்லாம் போதுமான அளவில் கண்காணிக்க எலெக்ட்ரோ மேக்னடிக் ஃப்ளோ மீட்டர்ஸ் அமைத்து நீர் வரத்து கண்காணிக்கப்படும் என்கிறார்கள்.

மேலும், வீடுகளில் துல்லியமன நீர் பயன்பாட்டை கண்டறிய ஏ.எம்.ஆர். மீட்டர் எனப்படும் ஆட்டோமேட்டிக் மீட்டர் ரீடிங் பொருத்தபட உள்ளது.  இந்த  மீட்டர் பொருத்தும் வேலை ஏலம் விடப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தரப்படும் என்கிறார்கள். நீர் விநியோகத்தைப் போலவே 3643 கி.மீ.  நீளத்துக்கு கழிவுநீர் கால்வாயும் உள்ளது. இவற்றையும் முழுமையாக எலெக்ட்ரானிக் கருவிகள் பொருத்தி கண்காணிக்கப் போகிறார்களாம். இதேபோல  சாலைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது, நடைபாதைவாசிகளுக்கு போதுமான இடத்தை ஒதுக்கித் தருவது என பல திட்டங்களை  சி.எஸ்.சி.எல்.லின் இணையதளம் தெரிவிக்கிறது.

சமூக ஆர்வலர்கள் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது அரசு நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு  தாரை வார்க்கும் போக்கு என்பது அவர்கள் வாதம். இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்களால் நகரின் உண்மையான பிரச்னைகளுக்கு ஆக்க பூர்வமான  தீர்வுகள் இல்லை. வெளிநாடுகளில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள தென் கொரியாவின் நியு சாங்க்டோ, அரபு எமிரேட்சின் மஸ்தார், போர்ச்சுக்கலின்  ப்ளான் ஐ.டி.ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி ஆன பிறகும் எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எங்கு சென்றாலும் காண்காணிப்பு கேமராக்கள், தனிமையே இல்லாத மேற்பார்வை... இதுதான் வளர்ச்சியா என்பது அவர்கள் கேள்வி. அமெரிக்காவின்  ஆதம் கிரீன் ஃபீல்டு என்ற நகர் நிர்மாண நிபுணர் இந்த ஸ்மார்ட் சிட்டி கான்செப்ட் பன்னாட்டு நிறுவனங்களின் மூளையில் உருவான ஒரு கொள்ளைத்  திட்டம் என்கிறார். ஐ.பி.எம். என்ற பகாசுர நிறுவனம், ஸ்மார்ட்டர் பிளான்ட் என்ற ஒரு திட்டத்தை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு டெக்  நிறுவனங்கள் இதை வேறு வேறு வடிவங்களில் முன்வைக்க, முதலீட்டாளர்கள் இதை கவர்ச்சிகரமான திட்டமாக உலகம் முழுதும்  எடுத்துச்செல்கிறார்கள்.

‘ப்ராஸ்ட் அண்ட் சலிவன்’ என்கிற சர்வதேச வணிக ஆலோசனை நிறுவனம் 2020ல் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களினால் 1.56 டிரில்லியன் டாலர்கள் (ஒரு  கோடியே ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய்) சந்தை உருவாகும் என மதிப்பிட்டுள்ளது. இதை நிறுவனமயத்தின் குறுக்குவழி Institutional  Bye-pass என்று வர்ணிக்கிறார்கள் சில விமர்சகர்கள். அரசின் நேரடிக் கட்டுப்பாடு இல்லாமல் உள்ளாட்சி நிர்வாகத்தின் லகான்கள் தனியார்களிடம்  செல்வது ஆபத்தானது. நீர் மேலாண்மை, மின்சார மேலாண்மை செய்ய வரும் நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் அவற்றின் கட்டணத்தை நிர்ணயிக்கும்  இடத்துக்குப் போகும். பிறகு அவை வைப்பதுதான் சட்டம் என்று ஆகும். இந்த நிலை நாம் நினைப்பதைவிட சிக்கலானது என்பது சமூக ஆர்வலர்களின்  வாதம்.

இளங்கோ கிருஷ்ணன்