சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது...



நல்ல படங்களை மக்கள் என்றைக்கும் ஒதுக்கியதில்லை. அவர்களுக்கு நல்ல படத்தை ரசிக்கத் தெரியவில்லை என்று சொல்வது நமது  முட்டாள்தனம். அவங்க ஒரு படத்தை ரசிக்கிறதுக்கும், ரசிக்காததுக்கும் நியாயமான காரணங்கள் இருக்கும்.

நாம்தான் அவங்களை ஏ,பி,சி.னு பிரிச்சு வைச்சிருக்கோம். என்னைப் பொறுத்தவரை சென்னையில் கை தட்டின சீனுக்குத்தான் கோவையிலும்  தட்றாங்க. அதனால் ரசனை பொதுவானது. ஒரு டைரக்டர் மக்களை விட்டு என்னிக்கும் விலகி விடக்கூடாது. நான் அப்படித்தான் இருக்கேன்.  அப்படித்தான் ‘ராஜாவுக்கு செக்’ படமும் இருக்கும். ஃபேமிலி எமோஷனல் த்ரில்லராக படம் உருவாகி வந்திருக்கு. ‘மழை’க்குப் பிறகு மறுபடியும் தமிழ்ப்  படம் செய்வதும் சந்தோஷம்...’’ தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் ராஜ்குமார்.

தலைப்பே வித்தியாசமா இருக்கு...

அந்த வித்தியாசம் படத்திலும் இருக்கு. சேரன் இதில் சிபிசிஐடி ஆபீஸராக வருகிறார். அவருக்கு போலீஸ் சீருடை கூட இல்லை. அவரிடம் பெரிய  அடிப்படையான சக்தி இருக்கும். அதைக் கொண்டு சிக்கல்களைத் தீர்க்கும் நேரம் வரும்போது அந்த பவர் இருக்காது. அவரால் அந்தப் பவரையும் பயன்படுத்த முடியாத நிலைமை வந்துவிடும்.

சதுரங்கத்தைக் கவனித்தால் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும். ராஜாவை மட்டுமே வெட்ட முடியாது. ‘செக்’  வைத்த ஆளை அடிக்கலாம் அல்லது பின்னாடி போகலாம். அவர் அந்த நிலைமையை சமாளித்தாரா, பின் வாங்கினாரா, வெற்றி பெற்றாரா என்பதே  படத்தின் கரு. தனக்குக் கிடைக்கிற சிறிய வாய்ப்பில் சேரன் பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டார் என்பது அடுத்த கட்ட பயணம்.

சேரன் கொஞ்ச காலமாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்...

அவருடைய நடிப்பு வாழ்க்கையில் இது முக்கியமான பதிவு. இப்படி நான் சொன்னதை நிச்சயம் படம் பார்க்கிறவர்கள் உணரக்கூடும். அதற்கான  அத்தனை உழைப்பையும் இதில் காட்டியிருக்கிறார். அவர் மிகச்சிறந்த இயக்குநர், சமூக அக்கறையோடு படம் தருகிறவர்... இவைகளை நாமறிவோம்.  இதில் ஒரு நடிகராக பல பரிமாணத்தில் வெளிப்படுத்தி, படத்தின் ஆத்மாவுக்கு உதவியிருக்கிறார். சில நேரங்களில் ஓர் இடத்தில் உட்கார்ந்து  கொண்டே கதையை நகர்த்துகிறார்.

கதையின் வடிவம் மனசுக்குள் வந்தபோதே இந்த கதாபாத்திரத்துக்கு சேரன்தான் சரியாக இருப்பார் என நினைத்திருந்தேன். என் எண்ணத்துக்கு எந்தப்  பழுதும் நேரவில்லை. ‘யுத்தம் செய்’ அவர் நடித்து மிகவும் அருமையாக வந்த படம். ஏனோ அது அதிகம் கவனம் பெறாமல் போய்விட்டது. ஆனால்,  சீருடை இல்லாமல், போலீஸ் மிடுக்கோடு அவர் காய் நகர்த்துகிற ஒவ்வொரு கணமும் சுவாரஸ்யமானது.

அவர் கேரியரில் ‘ராஜாவுக்கு செக்’ படத்துக்கு மேலதிக இடம் உண்டு. ஒரு நடிகராக மாறி விட்ட பிறகு நடிகர் முதலில் தன்னை டைரக்டரிடம்  ஒப்படைக்கணும். அதற்கான மனம் படைத்தவர் சேரன். அவருடன் வேலை செய்தது ஆனந்தம். அவர் மெளனமாக நடிப்பை மெருகேற்றுகிற விதம்  அருமை. படத்தைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போகும்போது ஆடியன்ஸ் மனசில் ஒரு திருப்தியோட திரும்பணும். அதைக் கொடுக்க முடிஞ்சா படம்  ஹிட்! அதுக்குப் போராடறது இருக்கே, அதுதான் சவால். அப்படி இதில் வெல்ல முடியுமென காத்திருக்கிறேன்

மூன்று பெண்கள் நடிக்கிறார்களே...

எல்லோரும் படத்துக்கு ரொம்பவும் உதவுகிற இடத்தில் இருக்காங்க. அவருக்கு ஜோடி மாதிரியாக சரயு மோகன், அவரது பெண் போல நந்தன வர்மா,  இங்கே ஏற்கனவே அறிமுகமாகி இருக்கிற சிருஷ்டி டாங்கே என எல்லோருக்கும் சிறப்பான பங்கு இருக்கு. முக்கியமான வில்லனாக இர்பான்  நடிக்கிறார். சிறந்த கவனிப்புக்குள்ளான ‘சுண்டாட்டம்’ படத்தில் அவர்தான் ஹீரோ. இளையவரான அவர், கதையைக் கேட்டதும் அதைப் புரிந்து  கொண்டு நடித்தார்.

இந்த முடிவு அவருக்கு ஒரு நல்ல இடத்தைத் தரும் என்பது எனது தீராத நம்பிக்கை. இவர்கள் எல்லோருடைய பங்களிப்பும் என் இசைவுக்குத் தக்கபடி  வந்ததே முதல் சந்தோஷமாக மனசில் நிற்கிறது. அப்புறம் தீர்ப்பு வழங்குவது எல்லாம் மேன்மை தங்கிய மக்கள்தான். அவர்களுக்கு எப்பவும் நான்  தலை வணங்குவேன். சிறந்தது எதையும் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றுவதால் எனக்கு தமிழ் உலகம் சிநேகமாகிறது.

இசை..?

வினோஜ் ஜெமான்யா. தெலுங்கில் இப்ப ரொம்பவும் பிஸியாக இருக்கிறார். புது இசை அவர்கிட்டே இருந்து வருது. அவை எதுவும் எங்கேயோ கேட்ட  மாதிரி இருக்கிறதில்லை. பத்து படங்களுக்கு மேல் அங்கே கால் பரப்பிவிட்டு, தமிழுக்கு வருகிறார். எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவரை  இங்கே கூட்டி வருகிறேன். படத்தில் மறைமுகமாக ஒரு செய்தியை உணர்த்தியிருக்கிறேன். எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் எதுவும்  நடக்கலாம்.

அப்படிப்பட்ட இடத்தில் நின்று சமாளிக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இதையும் காட்சிப்படுத்தலில் மட்டுமே முயற்சி  செய்திருக்கிறேன். என் அனுபவம், பக்குவம் அடுத்த கட்டத்துக்கு போயிருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படி ஓர் இடத்தில் இருந்து கொண்டு இந்தப்  படத்தை இயக்கியிருக்கிறேன். எமோஷனலான மேக்கிங்கா வேற ஏரியாவில் பயணப்பட்டு இருக்கேன். நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக  இருக்கும்.

நா.கதிர்வேலன்