20 ஆயிரம் பென்சில்ஸ்!யெஸ். ஒன்றல்ல, இரண்டல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் பென்சில்களை இதுவரை சேகரித்திருக்கிறார் தில்லியைச் சேர்ந்த துஷார். அமெரிக்காவில்  பொறியியல் படித்து வரும் இந்த 20 வயது இளைஞர், தன் பென்சில் சேகரிப்புக்காக கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்!  

‘‘தில்லிதான் சொந்த ஊர். ப்ளஸ் 2 வரை அங்கதான் படிச்சேன். அப்பா, பைலட். அம்மா, சமூக சேவகி. பல தனியார் நிறுவனங்கள்ல பர்சனாலிட்டி  மேம்பாடு குறித்து பயிற்சியும் அளிக்கறாங்க. மூணு வயசுல இருந்து பென்சில் மேல அப்படியொரு மோகம்! காரணம், ஆஸ்வேல்டு கார்ட்டூன் நிகழ்ச்சி.  அதுல ஹென்றி என்கிற ஆக்டோபஸ் கதாபாத்திரம் விதவிதமான ஸ்பூன்களை சேகரிக்கும். பார்த்த எனக்கு ‘அட’னு ஆச்சர்யம் ஏற்பட்டது. நாமும்  ஏதாவது கலெக்ட் பண்ணணும்னு தோணிச்சு. அப்ப பென்சில்தான் கண்முன்னால வந்து நின்னது!

பேரன்ட்ஸ் வாங்கிக் கொடுக்கறது, பிறந்தநாள் அப்ப கிஃப்ட்டா கிடைப்பதுனு வந்த எல்லா பென்சில்ஸையும் சேகரிக்க ஆரம்பிச்சேன். யார் கிட்டயாவது  புது மாதிரியான பென்சிலைப் பார்த்தா உடனே என்கிட்ட இருக்கிற பென்சிலைக் கொடுத்துட்டு அவங்ககிட்ட இருக்கறதை பண்டமாற்று முறைல  வாங்கிப்பேன். இப்படி ஒரு வருஷத்துல நூத்துக்கும் மேற்பட்ட பென்சில்ஸை கலெக்ட் பண்ணிட்டேன். உடனே அம்மாகிட்ட போய், ‘லிம்கா சாதனைப்  பட்டியல்ல என் பேரும் இடம்பெறும்’னு சொன்னேன். அவங்களுக்கு ஒண்ணும் புரியலை. அப்பதான் என் கலெக்‌ஷனை அவங்ககிட்ட காட்டினேன்!’’

சிரிக்கும் துஷார், சொன்னதுபோலவே லிம்காவில் இடம் பிடிப்பதற்காக தன் கலெக்‌ஷனை தொடர்ந்திருக்கிறார். ‘‘வெளில எங்க போனாலும் பென்சில்  இருக்கானு தேடுவேன். அப்பா பைலட்டா இருந்ததால அவர் கூட ஏர்போர்ட் போறப்ப எல்லாம் பென்சில் வாங்குவேன். சில வித்தியாசமானதை  ஆன்லைன்ல ஆர்டர் செய்வேன். சிலதை கண்காட்சில வாங்கினேன். எந்த நாட்டுக்குப் பயணம் செஞ்சாலும் அந்த நாட்ல தயாராகிற பென்சில்ஸை  தேடித் தேடி வாங்கிடுவேன். அப்பாவும் வெளிநாட்டு டியூட்டி முடிஞ்சு வரும்போதெல்லாம் பென்சிலோடு வருவார்!

யூ நோ ஒன் திங்... ஒவ்வொரு பென்சிலுக்கு பின்னாலயும் ஒரு கதை இருக்கு!’’ ஸ்கைப்பில் கண் சிமிட்டிய துஷார், அதைப்பற்றி விளக்கினார்.  ‘‘லண்டன் போயிருந்தப்ப லார்ட்ஸ் ஸ்டேடியத்துல கிரிக்கெட் பால் மாதிரி இருந்த பென்சிலை வாங்கினேன். உண்மையைச்  சொல்லணும்னா என்  கலெக்‌ஷன்ல பெரும்பாலானது அமெரிக்காவுல வாங்கினதுதான். சாதாரண மரப்பென்சில்ல ஆரம்பிச்சு ரீசைக்கிளிங் செய்யப்பட்ட பேப்பர் பென்சில்,  கையால செய்யப்பட்ட பென்சில், ரப்பர் பென்சில், கலர் பென்சில், சென்டட் பென்சில், பலவிதமான முகங்கள் கொண்ட பொம்மை பென்சில் வரை  உலகத்துல எத்தனை பென்சில் வகைகள் இருக்கோ அதுல 80%க்கும் மேல என்கிட்ட இருக்கு!

அதாவது 60 நாடுகள்ல தயாரான பென்சில்ஸ்! இதுல இரண்டே இரண்டு பென்சில்தான் எனக்கு ரொம்ப நெருக்கமானது. அதிக விலை கொடுத்து  வாங்கினதும் இந்த இரண்டுக்குத்தான்! ஒரு பென்சில், 22 கேரட் தங்க முலாம் பூசப்பட்டு அதுல ஸ்வரோஸ்கி கற்கள் பதிக்கப்பட்டு இருக்கும்.  இன்னொண்ணு இங்கிலாந்து ராணி எலிசபெத் பயன்படுத்தின ஜோடி பென்சில்! ஆன்லைன்ல தேடறப்பதான் இந்த இரண்டும் கண்ல பட்டது. ஏலத்துல  அதிக விலை கொடுத்து வாங்கினேன். ராணி எலிசபெத் பயன்படுத்தின ஜோடி பென்சிலை 400 பவுண்டுக்கு ஏலத்துல எடுத்தேன்.

என் சேகரிப்புல இருக்கிற காஸ்ட்லியான பென்சில் இதுதான்...’’ என்ற துஷாரிடம் எட்டு அடி முதல் நான்கு செ.மீ. வரை பல உயர பென்சில்கள்  இருக்கின்றன. ‘‘லிம்கா சாதனைப் பட்டியல்ல இடம் பிடிக்கணும் என்கிற கனவு நாலு வயசுல விதையா விழுந்தது. அது 9 வருஷங்கள் கழிச்சு  நிறைவேறிச்சு. அதுக்குப் பிறகு ஆறு வருஷங்கள் அந்த இடத்தை நானே தக்க வைச்சுக்கிட்டேன். இப்ப கின்னஸ்ல. என் சேகரிப்பை தனி அறைல  பாதுகாக்கறேன். இதுக்காகவே கண்ணாடிப் பேழைகளை வீட்ல வாங்கிக் கொடுத்திருக்காங்க.

ஒரு பேழைல 500 பென்சில்ஸை அடுக்க முடியும். வருஷத்துக்கு ஒருமுறை எடுத்து கணக்கிடறேன். ஒவ்வொரு பென்சில் பத்தின குறிப்பையும்  கம்ப்யூட்டர்ல பதிச்சிருக்கேன். உண்மைல பென்சில் என்பது சாதாரண விஷயமில்ல. இதை ஈரப்பதம் இல்லாத இடங்கள்லயும் பயன்படுத்த முடியும்.  அமெரிக்க, ரஷ்ய விண்வெளி வீரர்கள் பென்சிலைத் தான் தங்கள் பயணத்துல பயன்படுத்தறாங்க.

தாமஸ் ஆல்வா எடிசன் தனக்குனு ஸ்பெஷலா பென்சிலைத் தயாரிச்சிருக்கார். இது மத்ததை விட தடிமனா இருக்கும். நாம பயன்படுத்தற பென்சில்ல  பாதிக்கும் மேல சீனாவுலதான் தயாராகுது. இப்ப என் கவனம் படிப்புல இருக்கு. அதுக்காக சேகரிப்பை நிறுத்தலை. அதுவும் தொடர்ந்துகிட்டு இருக்கு.  படிப்பை முடிச்சுட்டு வேலைக்குப் போனதும் என் கலெக்‌ஷன்ஸை வைச்சு ஒரு மியூசியம் தொடங்கப் போறேன்!’’ சொல்லும்போதே துஷாரின்  கண்களில் கனவு விரிகிறது.

ப்ரியா