கார்த்திக் எனக்கு அப்பா இல்ல..!குண்டை தூக்கிப் போடுகிறார் கெளதம் கார்த்திக்

மயக்கும் சுருள்முடி. மீசை சுமக்காத உதடுகள். ‘ஜிம்’ உபய ‘கும்’ உடம்பு. மகா வசீகரமாக இருக்கிறார் கௌதம் கார்த்திக். ‘மிஸ்டர் சந்திரமௌலி’  நன்றாகக் கூடி வந்திருப்பதன் நம்பிக்கை அவர் புன்னகையில் பளிச்சிடுகிறது. ‘‘வெரி ஹேப்பி. ‘மிஸ்டர் சந்திரமௌலி’யைப் பற்றி படஉலகில் நல்ல  பேச்சிருக்கு. சந்தோஷம். இத்தனை நாட்களாகக் காத்திருந்தது வீண் போகலை. என்னிடமிருந்த நடிப்பை துடிப்போடு கொண்டு வந்திருப்பதில் இயக்குநர்  ‘திரு’வுக்கு பங்கிருக்கிறது. நண்பர்களிடம் ‘நன்றி’ என்பது தேவை இல்லைதான்.

இருந்தாலும் சொல்றேன். தேங்க்ஸ் டூ திரு...’’ வெள்ளையாகச் சிரிக்கிறார் கௌதம். கான்வென்ட் ஆங்கிலம் இன்னும் கணிசமாக எட்டிப்பார்க்கிறது.  ‘‘‘சினிமா நிரந்தரம். திரை வாழ்க்கை குறுகியது’னு சொல்வாங்க. அதுதான் உண்மை. ஹிட் கொடுத்தால் மட்டுமே இங்கே மார்க்கெட்டில் ஹீரோ.  இப்போ எல்லா ஹீரோக்களுக்கும் இதுதான் நிலைமை. படத்துக்குப் படம் புதுசா ஏதாவது முயற்சி செய்ய வேண்டியிருக்கு. இந்த வேளையில் ‘மிஸ்டர்  சந்திரமௌலி’ எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிற படம்...’’ சிரிக்கிறார் கௌதம்.

உங்களின் தோற்றம் ரொம்ப மாறியிருக்கு...

அது படத்துக்கான விஷயம். பாக்ஸரா வர்றேன். அப்படிச் சொல்லிட்டு அதற்கான முறையை செய்யணும் இல்லையா? திரு சார் கேட்டபடி இந்த  மாற்றம் நிகழ்ந்தது. இப்படி ஒவ்வொரு படத்துக்கும் நான் உழைக்க ரெடியாகிட்டேன். இந்தப் படத்தில் நடிப்புக்கான இடம் தெரிந்தது. இது ஒரு சேலஞ்ச்.  என் லிமிட் என்னன்னு எனக்குத் தெரியணும் இல்லையா..? இதில் இருக்கிற ஒரு விஷயம்கூட என்னைக் கொண்டுபோய் உற்சாகப்படுத்திவிட  முடியும்.

ஆனால், இதில் அதற்கும் மேலே எனக்கு அவ்வளவு வேலைகள் இருந்தது. இனிமேல் கஷ்டப்படாமல் ஈஸியாக வளர முடியாதுன்னு தெரிகிறது.  எல்லோரும் எனக்கும் ரெஜினாவுக்குமான பாடலைப் பார்த்துவிட்டு ரொம்பவும் பாராட்டறாங்க. அதில் எங்க இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக  இருந்தது. அவங்க படத்திற்கு எது வேண்டுமோ அதை கொடுத்துட்டு போயிடுவாங்க. இதில் ரிச்சர்டின் கேமரா பல ஜாலங்களை செய்திருக்கிறது.

லைட் அதிகம் உபயோகிக்காமல் கண்ணாடிகளை வைத்தே அவ்வளவு அருமையான எபெக்ட்டை உருவாக்கியிருக்கார். பாங்காக் கடற்கரையில்  எங்களின் நெருக்கம் எதுவும் எல்லை மீறிப்போய் விடாமல் ரசிக்கத்தக்க அளவில் மாறியதற்கு ரிச்சர்ட், பிருந்தா மாஸ்டர் இரண்டு பேரும் காரணம்.  இதை இப்படி ஒளிப்பதிவு செய்தால்தான் நன்றாக வரும் என்று நினைத்த இயக்குநர் திருவுக்கு நன்றி.

ஆரம்பத்தில் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் சில தவறுகள் செய்தீங்க!

ஆனால், அந்தத் தவறுகள்தான் படிக்கட்டுகள் ஆகியிருக்கு. இப்ப என் லைன்அப் நல்லா இருக்கிறதுக்கு அந்தத் தவறுகள்தான் காரணம். சினிமாவுக்கு வரணும்னு பெரிய திட்டம் எதுவும் போடலை. அப்படி வந்தபிறகு, அதுவும் மணி சார் கையைப் பிடித்துக் கொண்டு வந்து விட்ட பிறகு  இன்னும் நான் ஜாக்கிரதையாக இருந்திருக்கணும். கொஞ்ச காலம் அப்படியில்லாமல் போயிட்டேன்.

உடனே சுதாரிச்சு சரியான நிலைக்குத் திரும்பிட்டேன்.  சினிமா முழுக்க முழுக்க என்னால மட்டுமே ஆனதில்லையே... அத்தனை பணம், அத்தனை  உழைப்பு. அதனால் ரொம்பவும் ரிஸ்க் எடுக்கவும் பயம். இவ்வளவு தவறுகள், சோதனைகளுக்குப் பிறகு, இத்தனை தூரம் வந்துவிட்ட பிறகு, ஒரு  நடிகனா எனக்கு ஏக்கம் இருக்கு. சின்சியராக நடிக்கத் தயாராக இருக்கேன். இப்ப இந்தப் படத்துக்காக கடுமையாக உழைச்சிருக்கேன். இதையெல்லாம்  வெறும் பணத்துக்காக மட்டும்னா நினைக்கிறீங்க!

இப்ப நான் கொஞ்ச நாளா தண்ணீர் மாதிரி மாறியிருக்கேன். நீங்க எந்தப் பாத்திரத்துக்கு மாறினாலும் அந்த வடிவத்துக்கு மாறிடுவேன். ஆனால்,  பாத்திரம் செய்கிற இடத்தில் நான் இல்லை. அது கிரியேட்டர் கையில் இருக்கு. அந்த விதமாக வருகிறவர்களுக்கு கை கொடுக்க தயாரா இருக்கேன்.  ஒவ்வொரு படமும் ஒரு பாடமா இருந்து பலதை சொல்லிக் கொடுக்குது. எனக்கான அவகாசத்தைக் கொடுத்தால் இன்னும் நம்பிக்கையூட்டுகிற  ஹீரோவாக மாறுவேன்.

அப்பா உங்களுக்கு அட்வைஸ் கொடுப்பாரா...

இல்லை. அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவருக்கும் எனக்குமான நெருக்கம் யாருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். அப்பாங்கிறது முழு  எதிரிக்கான அடையாளம்னு மாறி நிக்கிற உலகத்தில் அவர் எனக்கு பெஸ்ட்ஃ ப்ரெண்ட். நெருங்கிய நண்பனிடம் பேசுகிற விஷயம் எல்லாத்தையும்  அவர்கிட்டே ஒண்ணு விடாம பேசிட முடியும். அதற்கான ஸ்பேஸ், சுதந்திரம் கொடுத்திருக்கிறார். வீட்டில நாங்க அப்பா பிள்ளை மட்டும்தான்.

நான் கேட்கிற கதையில் அவர் குறுக்கிடுவதில்லை. கதையை முடிவு பண்றதும் நான்தான். தப்பு பண்றதும் நான்தான். கத்துக்கிறதும் நான்தான்.  எப்பவும் வழியைக் காண்பிச்சுக்கிட்டு, அவர் என் கையைப் பிடிச்சுக்கிட்டே திரிவது கிடையாது. ‘இனிமே உன் எதிர்காலத்தை நீதான்  வடிவமைச்சிக்கணும். அதற்கான எல்லாத் தகுதியும் உனக்கு இருக்கிறதாக நம்பணும்...’னு சொல்வார்.

இப்ப நான் சந்திக்கிற சீனியர் நடிகர், நடிகைகள் அப்பாகிட்டே நடிச்ச அனுபவத்தை சொல்லும்போது ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும். அவருடைய உச்ச  நடிப்புக் கட்டத்தில் படிப்பில் கவனமாக இருந்திட்டேன். இப்போ கேட்டால் அவ்வளவு சந்தோஷமா இருக்கு. மத்தவங்க கஷ்டமா நினைச்ச சீனை அவர்  ஊதித் தள்ளி விடுவதை மத்த நடிகர்கள் சொல்லும்போது கேட்க பெருமையா இருக்கும்.

எப்படியான ஹீரோவாக விருப்பம்...

இங்கே பிசினஸுக்கு ஆக்‌ஷன் கதை மினிமம் கேரண்டின்னு நினைக்கிறாங்க. அதனால்தான் எப்படியாவது எல்லோரும் ஆக்‌ஷன் செய்ய  விரும்புறாங்க. அதுக்காக சாஃப்ட் ரோல் பண்ணக் கூடாதுன்னு இல்லை. ஒரு காதலனா, ஆக்‌ஷன் ஹீரோவா, காமெடி ரோலில்... இப்படி எல்லா  மட்டத்திலும் சிறப்பா செய்யணும்னு ஆசை. இன்னிக்கு கோடம்பாக்கத்தில் யாராவது வித்தியாசமான கதையை யோசித்தால் உடனே ‘கௌதம்  கார்த்திக்கை’ பாக்கலாமே என்று நினைக்கிற அளவுக்கு கிரியேட்டர் மனசில் இடம் பெறணும். அந்தக் கனவோடுதான் ஒவ்வொரு நாளும்  உறங்கப்போறேன்.     

நா.கதிர்வேலன்