ஆசனாஸ்அன்றாட வாழ்வில் என்னென்ன யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? மல்லாந்து  படுத்து யோசித்ததில் இருந்து...

குடும்பாசனம்

பாலை வழிய விடாமல் காய்ச்சும் வழக்கம் கணவர்களுக்கு இல்லை. இதனால் தன் ஈரேழு பரம்பரையையும் வம்புக்கு இழுக்கும் மனைவி முன்னால்  கைகட்டி வாய் பொத்தி நிற்க வேண்டிய அவல நிலை. இதிலிருந்து தப்பிக்கத் தேவை கொஞ்சம் பஞ்சு. எப்போதும் இதை பாக்கெட்டில் அல்லது  உள்ளாடையின் ஜோபியில் வைத்துக் கொள்ளுங்கள். மனைவியின் கண் சிவக்க ஆரம்பித்ததும் நைசாக பஞ்சை எடுத்து காதில் திணியுங்கள். இதைத் தவிர வேறு எந்த ஆசனமும் இதிலிருந்து உங்களைத் தப்பிக்க வைக்காது!

ரயிலாசனம்

தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை போன்ற சமயங்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் ரயிலில் பயணம் செய்யவேண்டியிருக்கிறது. இதை சமாளிக்க உடலில் பாதி அளவு மட்டும் தாங்கிப் பிடிக்கும் - யெஸ், பாதி உடல் வெளியிலும், பாதி உள்ளேயுமாக சர்க்கஸில் சிங்கம்  உட்காருமே... அப்படித்தான் - கைப்பிடி இல்லாத இருக்கையை வீட்டில் அடையாளம் காணவும்.

அந்த இருக்கையில் காலையும் கையையும் குவித்து உட்கார்ந்து, இடைவெளியில் முகம் புதைத்து உறங்கவும். ஆரம்பத்தில் கீழே விழுந்து முதுகில்  அடிபட்டு அலற நேரிடும். பரவாயில்லை. பயிற்சியை விடாமல் மேற்கொள்ளவும். அப்போதுதான் பழகி, இடியே விழுந்தாலும் தூக்கத்திலிருந்து  எழுந்திருக்காத நிலை ஏற்படும். பிறகென்ன... முன்பதிவு இல்லாத ரயில் பயணத்துக்கு ரெடி!

கடனாசனம்

தக்க சமயத்தில் நமக்கு உதவி அதைத் திருப்பிக் கேட்கும் ‘கெட்ட’ உள்ளங்கள் இங்கு அதிகம்! இவர்களிடம் இருந்து தப்பிக்க தினமும் கண்ணாடி முன்  நின்று முகத்தைத் திருப்ப பயிற்சி எடுங்கள். 360 டிகிரி வரை திருப்ப முடிந்தால் நல்லது. இது சரியாக வந்ததும் தைரியமாக சாலையில் நடக்கத்  தொடங்குங்கள். தொலைவில் கடன் கொடுத்தவரைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு தலைதெறிக்க ஓடுங்கள்!  

தியேட்டராசனம்

ஆன்லைனில் பார்த்துப் பார்த்து சீட்டை தேர்ந்தெடுத்தாலும் நமக்கு முன்னால் வாட்டசாட்டமான இரு ஆசாமிகள் அமர்ந்தால் போச்சு. படமே பார்க்க  முடியாது. இதைச் சமாளிக்க வீட்டு டிவி முன் ஒரு பீரோவை வையுங்கள். கழுத்தை இடது / வலது என இரு பக்கமும் எத்தனை டிகிரி நகர்த்தி  பார்க்க முடியுமோ அத்தனை டிகிரி நகர்த்தி டிவியை பார்த்துப் பார்த்து பயிற்சி எடுங்கள். பிறகென்ன... பத்தாள் உயர கிங்காங்கே உங்கள் முன்னால்  அமர்ந்தாலும் தெளிவாகப் படம் பார்ப்பீர்கள்!

ஆன்லைனில் பார்த்துப் பார்த்து சீட்டை தேர்ந்தெடுத்தாலும் நமக்கு முன்னால் வாட்டசாட்டமான இரு ஆசாமிகள் அமர்ந்தால் போச்சு. படமே பார்க்க  முடியாது. இதைச் சமாளிக்க வீட்டு டிவி முன் ஒரு பீரோவை வையுங்கள். கழுத்தை இடது / வலது என இரு பக்கமும் எத்தனை டிகிரி நகர்த்தி  பார்க்க முடியுமோ அத்தனை டிகிரி நகர்த்தி டிவியை பார்த்துப் பார்த்து பயிற்சி எடுங்கள். பிறகென்ன... பத்தாள் உயர கிங்காங்கே உங்கள் முன்னால்  அமர்ந்தாலும் தெளிவாகப் படம் பார்ப்பீர்கள்!

பஸ்ஸாசனம்

பிஸியான நேரங்களில், நெரிசலான சிட்டி பஸ்ஸில் முட்டி மோதி எப்படியோ ஏறினாலும் உள்ளே கால் வைக்க முடியாமல் தவிப்போம். ‘டிக்கெட்  கொடுக்க இடம் விட்டு நில்லுங்க...’ என கண்டக்டரும், ‘பின்னால இருக்கறவங்களை இடிக்காதீங்க...’ என போராளிகளாக மாறும் பயணிகளும் நம்மை  குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவார்கள்.

இதைச் சமாளிக்க வீட்டிலுள்ள ஓர் அறையில் குழாய் கம்பி ஒன்றை இரு சுவர்களுக்கு இடையே பொருத்துங்கள். அதில் நைந்துபோன, எளிதில்  அறுந்து விடக்கூடிய ரப்பர் கைப்பிடியைப் பொருத்துங்கள். அதைக் கையில் பிடித்து தரையில் கால் படாமல் தொங்கிக் கொண்டே உடலை  முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் வளைத்து பயிற்சி செய்யுங்கள். அவ்வளவுதான். பஸ்ஸில் நீங்கள் இப்போது நிம்மதியாகத் தொங்கலாம்!

எஸ்.ராமன்