மனிதக் கழிவை அள்ளும் எந்திரன்!



கேரள இளைஞர்களின் புதுமை கண்டுபிடிப்பு

கேரளாவைச் சேர்ந்த ஜென்ரோபாடிக்ஸ் இன்னோவேஷன்ஸ் என்னும் ஸ்டார்ட் அப்நிறுவனம், மலம் அள்ளும் ரோபாட்டை உருவாக்கி சாதித்துள்ளது.  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்ட இளைஞர் குழுவின் இந்த அற்புத கண்டுபிடிப்பை கேரள அரசு, மாநிலமெங்கும் பயன்படுத்த  ஆலோசித்து வருகிறது.

‘‘2015ம் ஆண்டு பாதாள சாக்கடையில் இறங்கிய இருவரைக் காப்பாற்ற முனைந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவரும் மூச்சுத்திணறி இறந்துபோன  வேதனையை எங்களால் மறக்கவே முடியவில்லை. அதுதான் இக்கண்டுபிடிப்புக்கு தூண்டுதல்!’’ தீர்க்கமாக பேசுகிறார் நிறுவனத்தின் இயக்குநரான  எம்.கே.விமல்கோவிந்த். கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் இறந்துபோன மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300.

இந்த ஆண்டு இதுவரை மலமள்ளும் முயற்சியில் ஈடுபட்ட 9 பேர் இறந்துள்ளனர் என சஃபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் அறிக்கை தகவல்  தெரிவிக்கிறது. 2013ம் ஆண்டு அமுலுக்கு வந்த மலமள்ளும் தொழிலாளர்கள் தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளதா என்ற ஐயத்தை எழுப்புகிறது  மேற்கண்ட மரணச்செய்திகள். இந்தியாவிலுள்ள மலமள்ளும் தொழிலாளர்களில் 80 சதவிகித தொழிலாளர்கள் 60 வயதுக்குள் இறந்துவிடுவதாக  ‘வைஸ்’ (Vice) என்ற இணையதளம் தகவல் தெரிவிக்கிறது.

இச்சூழலில் ‘பண்டிகூட்’ (Bandicoot) என்ற எந்திரத்தை வடிவமைத்திருக்கும் ஜென் ரோபாட்டிக் இன்னோவேஷன் குழுவினரின் முதல்கட்ட சோதனை  வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு சூழல்களிலும் 360 டிகிரியில் தன் இரும்புக் கரங்களை இயக்கி இந்த எந்திரம் குப்பைகளை அள்ளும். திடக்கழிவுகளைக்  கையாளும் ‘பண்டிகூட்’டின் அலுமினிய உடலை எளிதாக ஒருவர் இயக்க முடியும். ஐந்து பணியாளர்களின் வேலையை இது தனியாகச் செய்யும் திறன்  கொண்டது. இப்போது கார்ப்பரேஷன் தொழிலாளர்களுக்கு இந்த எந்திரத்தை இயக்க கேரள அரசு பயிற்சியளித்து வருகிறது.

இதற்கு முன் ஜென் ரோபாட்டிக்ஸ் குழு, பத்தடி உயரத்தில் நூறு கிலோ எடையைத் தூக்கிச் செல்லும் எந்திரனை வடிவமைத்தது. ‘‘ராணுவப்  பணிக்கென வடிவமைத்த ரோபாட்டைப் பார்க்கும்போது ‘அவதார்’ எந்திரனைப் போலவே இருக்கும்...’’ என்கிறார் இணை நிறுவனரான அருண் ஜார்ஜ்.  விமல்கோவிந்தின் தந்தை ராணுவ வீரர் என்பதால் பொருட்களைத் தூக்கிச் சுமந்து செல்லும் சிரமங்களைக் களைய விமல் விரும்பினார். இதுகுறித்து  சிங்கப்பூர் மாநாட்டில் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரையை அமெரிக்க ஆராய்ச்சி சங்கம் சிறந்த கட்டுரையாகத் தேர்ந்தெடுத்து பரிசளித்தது.

இச்செய்தியை அறிந்த கேரள ஐடி துறை அமைச்சர் எம்.சிவசங்கரன், மலமள்ளும் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வுகளை தரமுடியுமா என்று கேட்க,  சோதனைமுறையில் ‘பண்டிகூட்’ எந்திரம் உருவாகியுள்ளது. இதன் வெற்றியைக் கவனித்த கர்நாடக அரசு, 50 பண்டிகூட் எந்திரங்களை உருவாக்கித்  தரக் கேட்டுள்ளது. இப்போது எந்திரங்களைத் தயாரிக்க தொழிற்சாலை நிறுவும் முயற்சியில் ஜென் இன்னோவேஷன் குழு உழைத்து வருகிறது. எது  எப்படியோ, மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவலம் களையப்பட்டால் சரிதான்.  

ச.அன்பரசு