ரயில்வே சலூன்! 
 
 
இந்தியன் ரயில்வே மெல்ல பிரீமியமான போக்குவரத்து சேவையாக மாறிவருகிறது. அதிக எக்ஸ்பிரஸ் ரயில்கள், புல்லட் ரயில்திட்டம் என  எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளரும் அத்துறை அடுத்தபடியாக சலூன் வசதியையும் ரயில்களில் தொடங்கவிருக்கிறது. இதற்காகவே இன்ஸ்பெக்ஷன்  கோச் வரப்போகிறது. இரண்டு படுக்கையறை, டைனிங் அறை, கழிவறை, சமையலறை ஆகியவை இதில் அமைக்கப்பட்டிருக்கும். ரயில்வே  அதிகாரிகள், அமைச்சர்கள் பயன்படுத்தி வரும் இந்த வசதி இனி கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் மக்களுக்கும் கிடைக்கும். ராஜ்தானி, துரந்தோ,  சதாப்தி, கட்டிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இவ்வசதி கிடையாது.   
   நோயாளிக்கு இறுதிச்சடங்கு செய்த டாக்டர்!
  கேரளாவில் வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ் இன்றுவரை மக்களை பயமுறுத்தி வருகிறது. இச்சூழலில் நிபா நோயால் இறந்தவரை  புதைக்கக் கூட உறவினர்கள் அஞ்சும் நிலையில் அவருக்கு இறுதி மரியாதையை கோழிக்கோடு சுகாதார அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.கோபகுமார் செய்து  மனிதநேயத்துக்கு உதாரணமாகியுள்ளார். 25 வயதான ரசினின் தந்தை நிபாவுக்கு பலியானவர்தான். 
  ரசினின் தாய்க்கும் நோய்த்தொற்றுக்கான சிகிச்சை நடைபெற்று வருகிறது இந்நிலையில் ரசின் நிபாவால் பரிதாபமாக இறந்துபோனார். ‘‘அவரது  அம்மாவிடம் அனுமதி பெற்று கவுரவத்துடன் உடலை தகனம் செய்தோம்...’’ என்று சொல்லும் டாக்டர் கோபகுமார், இதுவரை நிபாவால் இறந்த 12  நபர்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்! 
  பிளாஸ்டிக் மீட்டிங்!
  அட்வைஸ் செய்துவிட்டு அசால்ட்டாக அதை மீறுபவர்களை ஊருக்கு உபதேசம் என கிராமங்களில் கிண்டலாகச் சொல்வார்கள். மகாராஷ்டிரா  முதல்வர் அதனை உலகிற்கே மீட்டிங் போட்டு சொல்லிவிட்டார்! உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடிய மறுதினம் நாளிதழ்களில் வெளியான  ஒரு படத்தைப் பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஷாக் ஆனார்கள். ‘பிளாஸ்டிக்கை எப்படி ஒழிக்கலாம்’ என மகாராஷ்டிரா முதல்வர் தன்  அமைச்சரவை சகாக்களோடு டிசைன் டிசைனாக யோசிக்கும் புகைப்படம்தான் அது. 
  ஐடியா ஓகே. ஆனால், பிளாஸ்டிக்கை ஒழிக்கும் மீட்டிங்கில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை டேபிள் மேலேயே தில்லாக வைத்திருந்தது பலரையும்  முகம் சுளிக்க வைத்திருக்கிறது. முன்னமே பிளாஸ்டிக் பைகள், பொருட்களுக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்திருந்த நிலைமையில் பிளாஸ்டிக்  பாட்டில்கள் அரசின் தடை உத்தரவு லட்சணத்தை ஊருக்கே காட்டிவிட்டன. 
  காதல் கொள்ளை
  காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அடுத்தவர்களின் கண்களை ஏமாற்றி போன்களை பிடுங்கிச் செல்ல வைத்ததும் கூட காதல்தான். மும்பை போரிவில்லி ஸ்டேஷன். மேற்கு ரயில்வேயின் லோக்கல் ரயில்களில் மட்டுமே 38 மொபைல்போன்கள் மிஸ்ஸிங் என தொடர்ச்சியாக புகார்.  விசாரணையில் இறங்கிய காவல்துறை டிவிங்கிள் சோனி, பார்மர் என இரு டீன் ஏஜ் பியூட்டிகளை கைது செய்தனர். 
   கைதான சோனி, பார்மர் ஆகிய இருவரும் இக்குற்றத்தை செய்ததற்குக் காரணம் ஹிரிஷி சிங் என்ற இளைஞன்! அவன் மீது இவ்விரு பெண்களும்  பிரேமம் கொண்டிருந்தனர்! ‘‘இவ்விரு பெண்களும் திருடும் போன்களை ஹிரிஷி சிங் விற்றுத் தருவார். அப்பணத்தை ஹிரிஷிக்கே செலவு செய்து டூ  இன் ஒன் காதலை வளர்த்துள்ளனர்...’’ என காதல் கதைக்கு ஃபிளாஷ்பேக் சொல்கிறார் டிசிபி புருஷோத்தம் காரத்.                 
  குறுந்தொழில்களை கொன்ற ஜிஎஸ்டி!
  தமிழ்நாட்டில் கடந்த 30 மாதங்களில் வார்தா புயல், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளால் 50ஆயிரம் குறுந் தொழிலகங்கள்  மூடப்பட்டுவிட்டன என சிறு, குறுந்தொழில்துறை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. 2016 - 17ம் ஆண்டில் தமிழத்தில் 2.67 லட்சம் சிறு மற்றும் குறு  நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்தன. 
  இப்போது அவற்றின் எண்ணிக்கை 2.18 லட்சமாக சுருங்கிவிட்டது. இதில் பணியாற்றிய 5 லட்சம் பேரின் வேலை பறிபோயுள்ளது. ‘‘இவர்களில் 8 - 10  சதவிகிதம் பேர் மட்டுமே வங்கி நிதியுதவி பெற்று தொழில் தொடங்கியவர்கள். மற்றவர்கள் தனியாரிடம் நிதிபெற்றவர்கள்...’’ என்கிறார் சிறு மற்றும்  குறுந்தொழில் (TANSTIA) சங்கத்தலைவரான சி.கே.மோகன்.    
  வீரர்களுக்கு சம்பளம் கட்! 
  அண்மையில் அரியானா அரசு, விளையாட்டு வளர்ச்சிக்காக ஒரு காரியத்தை செய்துள்ளது. என்ன தெரியுமா? மாநில விளையாட்டு வீரர்களின் சம்பளத்தை அதிரடியாகக் குறைத்துள்ளது. ஆம். மாநிலத்திலுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் தம் சம்பளத்தில் மூன்றில் ஒருபகுதியை விளையாட்டு கவுன்சிலில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது. 
  ‘மாநில அரசின் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தம் ஊதியத்தில் மூன்றில் ஒருபகுதியை விளையாட்டு கவுன்சிலில் டெபாசிட் செய்து விளையாட்டு வளர்ச்சிக்கு உதவ வேண்டும்!’ என அறிக்கையில் அரியானா விளையாட்டுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு மல்யுத்த வீராங்கனை கீதா  போகத் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
  தொகுப்பு: ரோனி
  
 
  
 |