உடலில் இருப்பது ஆடையல்ல பெயின்டிங்!



உலகம் முழுக்க பிரபலமான பாடி ஆர்ட் கலை, ஏனோ இந்தியாவில் சரியான வரவேற்பில்லாமல் இருக்கிறது. காரணம் கலாசாரம், கட்டுப்பாடு.  உடலில் பெயின்ட் மட்டும் பூசிக் கொண்டு போஸ் கொடுக்க நம் பெண்களும், ஆண்களும் தயங்குகிறார்கள். ஆனால், எந்தக் கலையையும் காண்பிக்கும்  விதத்தில் காண்பித்தால் கண்களை உறுத்தாது என நிரூபித்திருக்கிறார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இளங்கேஸ்வரி முருகன்.

மேலாடை துணியா அல்லது தூரிகை செய்த மாயமா என்னும் அளவுக்கு அவ்வளவு தத்ரூபமாக பாடி ஆர்ட் செய்திருக்கிறார். “குற்றாலம்தான் சொந்த  ஊர். மேக்கப் கலைல 19 வருட அனுபவம். ஏதாவது வித்தியாசமா செய்துகிட்டே இருக்கணும்னு நினைப்பேன். வெறுமனே மேக்கப் போட்டோம்...  சம்பளம் வாங்கினோம்னு இருக்கப் பிடிக்கலை. கிரியேடிவ்வா ஏதாவது செய்யணும்னு தோணுச்சு...’’ என்று சொல்லும் இளங்கேஸ்வரி, நீளமான ஹேர்  ஸ்டைலை செய்து தமிழக விருதை வாங்கியிருக்கிறார்.

‘‘16 மணி நேரங்கள் கண்களை கட்டிகிட்டு மெக்கப் பண்ணணும்கற போட்டில கலந்துகிட்டேன். இந்தியன் புக் ஆஃப் அவார்ட் விருது வாங்கினேன்.  இதுபோக சிறந்த மேக்கப் ஆர்டிஸ்ட், சிறந்த தொழில் முனைவோர்னு நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன்...’’ என்ற இளங்கேஸ்வரி, பாடி ஆர்ட்  குறித்து பேசத் தொடங்கினார். “ஐடியா செஞ்சுட்டேன். ஆனா, மாடல் கிடைக்க போராடினேன்! நிச்சயமா என் பாடி ஆர்ட் முகம் சுளிக்க வைக்காது...  அது ஆர்ட்டுனு கண்டுபிடிக்கவே முடியாதுனு உறுதி கொடுத்தும் மாடல்ஸ் கிடைக்கலை!

நிறைய தேடல்கள், காத்திருப்புகளுக்குப் பிறகுதான் ஸ்ருதி பெரியசாமி ஓகே சொன்னாங்க. ஆனாலும் அவங்களுக்கும் உள்ளூர சந்தேகம் இருந்தது.  அது நியாயம்தான். எந்தப் பெண்தான் மேலாடை இல்லாம போஸ் கொடுக்க ஓகே சொல்வாங்க? ‘நான் வரையறேன். அதுக்குப் பிறகும் உங்களுக்குத்  தயக்கம் இருந்தா போட்டோ எடுக்காம விட்டுடலாம்’னு உறுதி கொடுத்தேன். ஓகே சொன்னாங்க. ஸ்டூடியோனா யாராவது வந்துகிட்டு இருப்பாங்க.  அதனால என் வீட்ல ஆரம்பிச்சோம். எதுவும் சாப்பிடலை.

ஸ்ருதியும் நடுவுல மோர்தான் குடிச்சாங்க. யாரையும் எங்க ரூமுக்குள்ள விடலை. கடைசியா ஸ்ருதிக்கும் திருப்தியாக போட்டோ எடுக்க சம்மதிச்ச  பிறகுதான் என் உதவியாளர்கள், போட்டோகிரா ஃபரை எல்லாம் அழைச்சோம். அது பாடி ஆர்ட்டுனு யாராலயும் நம்ப முடியலை! ட்ரைலான்  பெயின்டிங்கை பயன்படுத்தினேன். க்ளாஸ் பீஸ், லேஸஸ்... எல்லாம் அட்டாச் பண்ணியிருந்தேன். இப்ப என் பாடி ஆர்ட் பேசப்படுது. நம்பிக்கை வைச்சு  சம்மதிச்ச ஸ்ருதி பெரியசாமிக்கு தேங்க்ஸ்!’’ புன்னகைக்கிறார் இளங்கேஸ்வரி.

ஸ்டைலிஸ்ட்: அருள்மொழி
ஷாலினி நியூட்டன்
படங்கள்: கில்பர்ட் சந்தியாகு