புதிய பாடத் திட்டம் மாணவர்களுக்கு வரமா சுமையா?



அலசுகிறார்கள் ஆசிரியர்கள்

‘‘நம் மாணவ கண்மணிகளுக்காக பார்த்துப் பார்த்து இந்தப் புதிய பாடப் புத்தகங்களைச் செதுக்கியிருக்கிறோம். அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சிந்தனையாளர்களைக் கொண்டு, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறோம். வேண்டுமானால் பாருங்கள்... இன்னும்  இரண்டு வருடங்களில் அகில இந்திய அளவிலான போட்டித்தேர்வுகளில் நம்முடைய மாணவர்கள்தான் முன்னிலையில் இருப்பார்கள்...’’ கட்டை  விரலை உயர்த்தி, சாதித்த பெருமிதத்துடன் பேசுகிறார் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தமிழ்ச் சூழலில் இவருக்குப் பெரிய அறிமுகம் தேவையில்லை.

கல்வித்துறையில் அதிரடியான பல மாற்றங்களைப் புகுத்தியவர். இப்போது பாடத்திட்டத்திலும் ஆழமாகக் கால் பதித்துள்ளார். இந்தக் கல்வியாண்டில்  ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்திருக்கிறது. இதை முன்னின்று  வழிநடத்தியவர் உதயச்சந்திரன்தான். புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தவர்கள் எல்லாம் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம், எளிமைப்படுத்தப்பட்ட  தகவல்களைக் குறித்து பிரமித்துப் போயிருக்கிறார்கள். இதுவரை இதுபோன்ற பாடப் புத்தகங்கள் வரவேயில்லை என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

‘‘பாடங்களைப் பற்றிய மேலான புரிதல்களுக்கு QR கோடுகள் கொடுத்திருக்கிறோம். அதை ஸ்கேன் செய்தால் பாடம் சம்பந்தமான தகவல்களுடன்,  அனிமேஷன் வீடியோக்களையும் பார்க்க முடியும். இது மாணவர்களுக்கு பாடத்தைத் தாண்டிய புரிதலைக் கொடுப்பதோடு, தங்கள் வாழ்க்கையுடன்  தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளவும் உதவும். தவிர, ஆசிரியர் நடத்திய பாடத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் இணையம் மூலம் அந்த  சந்தேகத்தை உடனடியாக தீர்க்க ‘விர்ச்சுவல் ஆசிரியர்’ என்ற வசதியையும் உருவாக்கியிருக்கிறோம்.

அழ.வள்ளியப்பா, பிரமிள், ஆத்மாநாம், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், பிரபஞ்சன், ந.பிச்சமூர்த்தி, இன்குலாப், மீரா, அ.முத்துலிங்கம்... என தமிழின்  அதிமுக்கிய ஆளுமைகளின் படைப்புகளை நம் குழந்தைகளுக்குப் புரிகிற வகையில் எளிமையான வடிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். ‘ஐ.சி.டி.  கார்னர்’ என்ற ஒரு பகுதி, நம் இந்தியப் பாடப் புத்தகங்களில் புதுவரவு. வரலாறு மற்றும் புவியியலுடன் கூகுள் எர்த்தை இணைத்திருக்கிறோம்.  இவையெல்லாம் ஒரு துளிதான். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கிறது.

நிச்சயமாக இந்தப் புதிய பாடப் புத்தகங்கள் வெறும் எழுத்துகளாக இல்லாமல் தொழில்நுட்பத்தால் ஜொலிக்கும்...’’ என்று புதிய பாடப் புத்தகத்தின்  சிறப்புகளை அடுக்கினார் உதயச்சந்திரன். அதே நேரத்தில் இதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ஆலோசனையையும் வழங்குகிறார்  அவிநாசியைச் சேர்ந்த ஆசிரியர் க.சம்பத்குமார். ‘‘ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தை எடுத்துக்கொண்டால் பக்க அளவு குறைவு. இன்னும்  கொஞ்சம் பக்கங்களை ஒதுக்கி, செயல்பாடுகளைச் சற்று விரிவாகக் கொடுத்திருக்கலாம்.

குழந்தைகளை அது வெகுவாக ஈர்த்திருக்கும். ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் Prose பகுதி வாசிப்புக்கு ஏற்ப வகைப்படுத்தி இருந்தாலும்,  அதிக பக்கங்களுடன் உள்ளது. அதை சிறிய பகுதியாக வடிவமைத்திருந்தால் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் ஏதுவாக இருந்திருக்கும். அதேபோல்  Phonetic மற்றும் அதன் குறியீடுகளையும் அறிமுகம் செய்திருக்கலாம். வாசிப்பை எளிதாக்க உதவியிருக்கும். Speaking skill பகுதியும், பாடப்  புத்தகத்துக்கு வெளியே செய்து பார்ப்பதற்கான செயல்பாடுகளும் குறைவாகவுள்ளன. Spoken English பயிற்சிக்கென சில பக்கங்களை  ஒதுக்கியிருக்கலாம்.

விளையாட்டு அடிப்படையில் சில செயல்பாடுகளை முயற்சித்திருக்கலாம். இலக்கணப் பகுதி எப்போதும் போல் முன், பின் வகுப்புகளோடு  தொடர்பின்றியே அமைந்திருக்கிறது. துணைப்பாடப் பகுதிகளை யாருடைய துணையுமின்றி மாணவர்களே வாசித்து மகிழும்படியாக  சிறுகதைப்பகுதியாக, நிறைய படங்களுடன் கூடியதாக அமைத்திருக்கலாம். இப்போது அதுவும் மற்றொரு பாடமாகவே உணரக்கூடிய வகையில்  உள்ளது. ஆறாம் வகுப்பு அறிவியல் / சமூகவியல் பாடத்தில் உள்ள பாடம் சார்ந்த சொற்களுடன் (Technical terms) அதற்கான ஆங்கிலச்  சொற்களையும் உடன் வழங்கியிருக்கலாம் அல்லது பாடத்தின் பிற்பகுதியில் இணைத்திருக்கலாம்.

ஆறாம் வகுப்பு பாடநூல் சற்றே மாணவர்களுக்கு சிரமம் தரக்கூடியதாக இருக்கும்...’’ என்று அழுத்தமாக பதிவு செய்தார் க.சம்பத்குமார். ‘‘QR கோடுகள்  சரியாக செயல்படவில்லை. மட்டுமல்ல, QR கோடுகள் மூலம் ஆசிரியர்கள் தம் மொபைலில் காணும் செய்திகளை வகுப்பில் உள்ள மாணவர்களும்  பார்த்து கற்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. கழுத்தை நெரிக்கும் அளவுக்கு அதிகமான தகவல்களுடன் பாடத் திட்டம் அமைந்திருப்பது  மாணவர்களுக்குச் சுமையாக அமையும். பள்ளி இயங்கும் நாட்களும் குறைந்த கால அளவே இருப்பதால் ஆசிரியர்களுக்கும் பாடம் நடத்துவது  கடினமாக மாறும். செயல்பாடுகள் நிறைய இருக்கின்றன.

ஆனால், அதைச் செய்வதற்கான கால அளவு மிகக் குறைவாகவே உள்ளது. மனப்பாடத்திலிருந்து வெளியே வருவதுதான் இந்தப் பாடத்திட்டத்தின்  முக்கிய நோக்கம். இதற்கான வாய்ப்புகள் குறைவு. காரணம், நேரப் பற்றாக்குறை. முக்கியமாக மாணவர்களைப் போட்டித் தேர்வுக்காக கட்டமைக்கும்  ஒரு நோக்கில்தான் இப்புதிய பாடத் திட்டம் அமைந்துள்ளது...’’ என்று ஆதங்கப்படுகின்றனர் முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள். ‘‘பழையதுடன்  ஒப்பிடும்போது புதிய பாடத் திட்டத்தில் பொருளடக்கத்தின் அடிப்படையில் 10 முதல் 20 சதவீதம் அதிகமாயிருக்கும். நிறைய புகைப்படங்கள்,  இன்போகிராப், பயிற்சிகளைக் கொடுத்திருப்பதால் அப்படித் தெரிகிறது.

குறிப்பாக அறிவியலில் செயல்பாடுகள், பாக்ஸ், இன்டர்நெட் வேல்யூ எடிசன்ஸ் என்று நிறைய உள்ளன. இது மாணவர்களுக்கு சுமையாக இருக்காது.  11ம் வகுப்பு பாடத் திட்டத்தில் ‘நீட்’ போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தேவைப்படுகிற மாதிரி நிறைய உதாரணங்களைக் கொடுத்திருக்கிறோம். தேசிய  அளவில் போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் நம் ஆயுதத்தை எடுக்க வேண்டியுள்ளது.  ஆசிரியர்களைப் பொறுத்தவரை முன்பைவிட இப்போது கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

அவர்களுக்குப் பயிற்சி தருவதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் பயிற்சி  ஏடுகள் கொடுக்கப்போகிறோம். அதில் புதுமையான நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறோம். இது பக்கக் குறைவை நிவர்த்தி செய்யும். தமிழகக்  கல்வி வரலாற்றில் இதுபோல் செய்வது இதுதான் முதல்முறை. இரண்டாவது, ஆசிரியர்களுக்கும் கையேடுகளைக் கொடுக்கப்போகிறோம். QR  கோடுகள் கனெக்டிவிட்டி பிரச்னையாக இருக்கும். அதை சரி செய்துவிடலாம். பள்ளிகளுக்கு நிறைய கம்ப்யூட்டர்களை வழங்க இருக்கிறோம். எல்லாம்  படிப்படியாக நிறைவேற்றப்படும்.

மொழியை மட்டும் கற்றுக்கொடுத்தால் வறட்டுத்தனமாக இருக்கும். விஷயங்கள் இருந்தால்தான் குழந்தைகள் ஆர்வமாக கற்றுக்கொள்வார்கள்.  அதற்காகத்தான் மொழிப் பாடத்துக்கு அதிக பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம்...’’ என்று தன் பதிலை கறாராக முன்வைத்தார் உதயச்சந்திரன்.  ‘‘குழந்தைகளைக் கவரும் விதத்தில் வண்ணமயமாக பாடத்திட்டங்கள் அமைந்திருக்கின்றன. ஆசிரியர்கள் இதை மாணவர்களிடம் கொண்டுபோவதைப்  பொறுத்துத்தான் இந்தப் பாடத்திட்டம் வெற்றியா? தோல்வியா? என்று சொல்ல முடியும். முழுமையான பாடத்திட்டம் என்று ஒன்றை உருவாக்க  முடியாதல்லவா? ஆசிரியர்களின் கையில்தான் எல்லாம் இருக்கிறது...’’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.  

த.சக்திவேல்
படங்கள்: ஆர்.சி.எஸ்