காலா



அதிகாரத்தின் அடையாளத்தை எதிர்த்து தாராவி மண்ணுக்காகப் போராடும் ஒற்றை மனிதனின் யுத்தமே ‘காலா’. ‘நிலம் மனிதனின் உரிமை’ என்ற  கொள்கையைப் பின்புலமாக வைத்து உருவாக்கியதாலேயே இயக்குநர் பா.இரஞ்ஜித் கவனம் பெறுகிறார். தாராவியின் அடையாளத்தில் தமிழர்களுக்கு  இருக்கிற பெரும்பங்கு, தலைமுறை தலைமுறையாக மும்பை மாநகரத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்து விட்டு, அடிப்படை வசதிகள் கூட  இல்லாது இருக்கும் மக்கள்... அதை மீட்கத் துடிக்கும் அதிகார வர்க்கம்... அதற்கு துணைபோகும் காவல்துறை.

இத்தகைய சதிவலையில் மக்கள் துயர் நீக்க போராடும் காலாவின் வாழ்க்கைக்கு சவால் விடும் நானா படேகரின் எதிர் நிலை என்னவானது என்பது  க்ளைமேக்ஸ். வழக்கமான ஹீரோயிசத்தை தள்ளி வைத்துவிட்டு கதையின் நீள அகலத்துக்குள் வந்து மனமுவந்து நடித்திருக்கிறார் ரஜினி. மொத்த  குடும்பத்தோடும் அவருக்கு இருக்கிற சகஜம், இயல்பு, கதையோட்டத்துக்கு உறுதுணை. மகனையும், மனைவியையும் இழந்த தவிப்பு, காதலியிடம்  பழைய நினைவுகளை மீட்பது, ஒவ்வொரு முறை நானாவிடம் பேசும்போதும் ஆத்திரம் உச்சிக்கு ஏறி பின் அடங்குவது என மிக நீண்ட நாட்களுக்குப்  பிறகு ‘வெல்கம் பேக்’ ரஜினி. ஈஸ்வரி ராவின் அறிமுகமே அட்டகாசம்.

பழகிய ‘அம்மா’ கேரக்டர் என்றாலும், முழுக் குடும்பத்தையும் தீரா பேச்சோடு சேர்ந்த அன்பில் இணைக்கும் கண்ணியாக ஆஸம். மணிகண்ட னோடு  இணைந்து அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்டு துளைக்கும் அஞ்சலி படேல் அருமையான வார்ப்பு. முணுக்கென்று எதுவொன்றுக்கும் பாய்ந்துவிடும்,  மக்களின் துயருக்கு நியாயமாகப் போராடும் மகனாக மணிகண்டன் நிறைவு. படத்தில் பேசும் ஒவ்வொரு பெண்களின் குரல்களிலும் உண்மையும்,  உரிமை கேட்பும், சுதந்திரமும், அன்பும் ஒட்டிக்கொண்டு இருப்பது சிறப்பு.

ஹரி தாதாவாக நானா படேகர் அனுபவத் தெறிப்பு. அத்தனை பெரிய தாராவியின் இண்டு இடுக்குகளில் எல்லாம், கதாபாத்திரங்களின் வழியே  பயணிக்கிறது முரளியின் ஒளிப்பதிவு. முழு தாராவியையும் அப்படியே கொண்டு வந்திருக்கும் கலை இயக்குநருக்கு சிறப்பு பூங்கொத்து. பல  இடங்களில் வசனங்கள் பளிச். உமாதேவியின் வரிகளில் ‘கண்ணம்மா’ பாடல் தாலாட்டு. சந்தோஷ் நாராயணன் பாடல்களில் சோகமும், இதமும்,  கோபமும் காட்டுகிறார்.

இரண்டாவது பாதியில் காட்சிகள் ஒரே இடத்தைச் சுற்றுகின்றன. அவ்வளவு போற்றுதலுக்குரிய ‘காலா’, தாராவி மக்களுக்கு நிலப் பறிமுதலைத்  தடுப்பதைத் தவிர வேறு என்ன நன்மைகள் செய்தார் என்ற கேள்வி எழுகிறது. போலவே நானா படேகர் எம்.எல்.ஏ.வா, அமைச்சரா, ரியல் எஸ்டேட்  நிறுவன அதிபரா, கட்சித் தலைவரா... என்ற தெளிவுமில்லை. இதைச் சரி செய்திருந்தால் ‘காலா’ இன்னும் நிமிர்ந்திருப்பார்.


குங்குமம் விமர்சனக்குழு