காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா-62

வன்முறை போதும் என்கிற முடிவுக்கு பாப்லோ எஸ்கோபார் ஏற்கனவே வந்துவிட்டார். அவரோடு தொடர்பில் இருந்த ஆர்ச்பிஷப்பான டேரியோ,  கொலம்பிய அதிபர் சீஸருக்கும் நெருக்கமானவர்தான். இன்னும் சொல்லப்போனால் அதிபருக்கு திருமணம் நடத்தி வைத்தவரே இந்த பிஷப்தான். பாப்லோவும் இவருடைய பேச்சைக்கேட்பார், அதிபருக்கும் அவர் குருநாதர் ஸ்தானத்தில் இருந்தார் என்பதால் பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடந்து  வந்தது. கார்டெல்களுக்கு மட்டுமல்ல, கொலம்பிய சர்ச்சுகளுக்கும் பாப்லோ, காட்ஃபாதராக இருந்துவந்தார்.

பாப்லோவின் தாயார் மத நம்பிக்கை மிகுந்தவர் என்பதால், தன்னுடைய அம்மாவை திருப்திப்படுத்தவும் சர்ச்சுகளுக்கு ஏராளமான நற்பணிகளைச்  செய்துவந்தார். சர்ச் மூலமாக ஏழைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற வசதிகளுக்கான ஏற்பாடுகளுக்கு கணிசமாக பணம் தந்துவந்தார்.  தன்னுடைய உயிருக்கே உலை வைக்கப்பட்டிருந்த நெருக்கடியான சூழல்களிலும்கூட நற்பணிகளை பாப்லோ நிறுத்தவே இல்லை. கொலம்பியா  முழுக்கவும் ஹெலிகாப்டரில் பறந்து பின்தங்கியிருந்த நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நேரடியாக விசிட் அடித்து, தேவையான உதவிகளைச் செய்து  கொண்டே இருந்தார்.

எல் போப்லதோ என்கிற இடத்தில் பிஷப்புடன் பாப்லோவின் சந்திப்பு நிகழ்ந்தது. தன்னுடைய நெருங்கிய சகாக்கள், மற்றும் சில உறவினர்களோடு  அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார் பாப்லோ. “ஃபாதர்! நான் சரணடைய சம்மதிக்கிறேன் என்று அதிபரிடம் கூறுங்கள். அவர் மீது மரியாதையும்,  நம்பிக்கையும் எனக்கு இருப்பதையும் தெரியப்படுத்துங்கள்” என்று பாப்லோ ஆரம்பித்தார். “மகிழ்ச்சியாக இருக்கிறது. உடனே இதற்கான ஏற்பாடுகளை  செய்கிறேன். வேறெதுவும் நீங்கள் சொல்ல வேண்டாம்.

உங்கள் பாதுகாப்புக்கு நான் உறுதி தருகிறேன்” என்று சட்டு புட்டென்று பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு கிளம்ப நினைத்த பிஷப்பின் கைகளை  இறுகப் பற்றிக்கொண்டார் பாப்லோ எஸ்கோபார். “எனக்கு கொஞ்சம் அச்சம் இருக்கிறது. மேலும், சில நிபந்தனைகளும் உண்டு. அவற்றை அரசு  அதிகாரிகளோடு என்னால் பேசவும் முடியாது. உங்களிடம் மட்டும் சொல்கிறேன். நீங்களும் யாரிடமும் சொல்லாமல், அதிபரிடம் மட்டும்  சொல்லுங்கள்…” ‘பிரச்சினை ஜவ்வு மாதிரி இன்னும் இழுக்கும் போலிருக்கிறதே?’ என்கிற எண்ணத்தோடு முன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டே  பாப்லோ பட்டியலிட ஆரம்பித்த நிபந்தனைகளை கவனமாகக் கேட்க ஆரம்பித்தார் பிஷப்.

“முதலில், ஒரே ஒரு கொலம்பியன்கூட அமெரிக்கா கேட்கிறது என்கிற காரணத்துக்காக நாடு கடத்தப்படக் கூடாது. என்னுடைய மெதிலின் கார்டெல்  ஆட்கள் மட்டுமல்ல, என்னுடைய எதிரிகளான காலி கார்டெல் ஆட்களைக்கூட அமெரிக்காவுக்கு தாரை வார்க்கக் கூடாது. எங்கள் மீதான சட்ட  விசாரணை கொலம்பியாவிலேயே நடக்க வேண்டும். எங்களுக்கு மரணதண்டனையே விதிக்கப்பட்டாலும் நாங்கள் கொலம்பியாவிலேயே புதைக்கப்பட  வேண்டும்.” “அப்படியெல்லாம் ஆகாது. அவசரப்படாதே பாப்லோ…” “என்னை முழுமையாகப் பேசவிடுங்கள் ஃபாதர்.

ஏற்கனவே சரண்டர் ஆனவர்களுக்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு, அவர்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டதால் அத்தண்டனை  பத்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேமாதிரியான தண்டனை எனக்கும், என்னுடைய ஆட்களுக்கும் கொடுக்கப்பட்டால்கூட ஒப்புக்  கொள்கிறேன். எனக்கு என்று பிரத்யேகமாக சலுகைகள் ஏதும் தேவையில்லை.” பிஷப், தன் கையை பாப்லோ தலையில் வைத்து ஆசீர்வதித்தார்.  “நல்லதே நடக்கும். என்னை நம்பு.” ஆனால் இதே சமயத்தில் கொலம்பியாவில் போலீஸ், முன்பைக் காட்டிலும் கூடுதலான வன்முறையை நிகழ்த்திக்  கொண்டிருந்தது.

அப்படி வன்முறையே நடக்கவில்லை என்றுதான் அதிபர் நினைத்துக் கொண்டிருந்தார். அதிபரின் அதிகாரத்தையும் தாண்டிய மறைமுக சக்திகள்  அமெரிக்க ஆதரவோடு, கொலம்பிய போலீஸைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம். பாப்லோவிடமிருந்து, ‘போலீஸிடம்  மோதவேண்டாம்’ என்கிற ஒற்றைக் கட்டளை, கொலம்பியா முழுக்கப் பரவியிருந்த மெதிலின் கார்டெல் ஆட்களுக்குச் சென்றது. அவர்கள்  ஆயுதங்களை மவுனமாக்கினாலும், போலீஸாரின் துப்பாக்கிகள் தோட்டாக்களைத் துப்பிக் கொண்டுதான் இருந்தன.

வேறு வழியில்லை, மீண்டும் போரைத் துவக்க வேண்டியதுதான் என்று பாப்லோ முடிவெடுத்த நிலையில், அதிபரிடமிருந்து தகவல் வந்தது. “உங்கள்  நிபந்தனைகளை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம். சரணடைவதற்கு நாள் குறியுங்கள்.” அதிபரும், பாப்லோ எஸ்கோபாரும் டீலிங்குக்கு  வந்துவிட்டதை அறிந்த அமெரிக்கா, கொதிப்புக்கு உள்ளானது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கொலம்பியாவுக்கு அவசர அவசரமாக  வந்தார்கள். அதிபரின் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை ‘கரெக்ட்’ செய்ய முயற்சித்தார்கள். கொலம்பியாவுக்கு பல லட்சம் டாலர் கடன் வசதி,  ராணுவத்தை மேம்படுத்த இலவசமாக நவீன ஆயுதங்கள், அதிகாரிகள் மட்டத்திலிருந்தவர்களுக்கு லஞ்சம் என்றெல்லாம் என்னென்னவோ பேசிப்  பார்த்தார்கள்.

பாப்லோவை உயிருடனோ, பிணமாகவோ அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதில் வெறியாக இருந்தார்கள். ஏனெனில், அதுவரை  கார்டெல்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவர்களை கொலம்பியாவில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய்  அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரணை நடத்தி சிறையில் தள்ளியிருந்தார்கள். பாப்லோவையும் அதுபோல சிறையில் தள்ளினாலோ,  கொன்றாலோதான் அமெரிக்க மக்கள் தன்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள் என்று அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்,  குழந்தைத்தனமாகக் கருதினார். கொலம்பிய அதிபரோ இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தார்.

பாப்லோ, சரணடைய ஒப்புக்கொள்கிறார். அப்படி சரணடையும் பட்சத்தில் கொலம்பியா வன்முறைகளற்ற அமைதியான தேசமாக மாற  வாய்ப்பிருக்கிறது. அதே நேரம், பாப்லோ சரணடைந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா மும்முரமாக இருக்கிறது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி  பாப்லோவுடனான சமாதானத் திட்டத்தை முன்னெடுத்தால், பாப்லோ செய்துகொண்டிருந்த வன்முறையை அமெரிக்காவே செய்வதற்கும் வாய்ப்பாகும்.  அவருடைய தர்மசங்கடம் தற்காலிகமாக அகன்றது. அதற்கு புண்ணியம் கட்டிக் கொண்டவர் ஈராக் அதிபர் சதாம் உசேன்.

வளைகுடா நாடுகளில் நடந்து கொண்டிருந்த எண்ணெய் அரசியலின் விளைவாக, திடீரென்று குவைத் நாட்டினை ஆக்கிரமித்தார் சதாம் உசேன்.  இதனால் குவைத்தில் எண்ணெய் எடுத்துக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. சதாம் உசேன் மீது போர்  தொடுத்தே தீரவேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில்  ஈராக் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கா அனுமதி கோரியது. உலக நாடுகள் பலவும் இரு அணிகளாகப் பிரிந்து அமெரிக்காவின் கோரிக்கை  தடுமாற்றத்தை எட்டியது.

ஐநாவில் தாக்குதலுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கொலம்பியாவிடம் அதிபர் புஷ் வேண்டிக் கொண்டார். இதுதான் நேரமென்று புரிந்துகொண்ட  கொலம்பிய அதிபர் சீஸர், “நாங்கள் ஈராக்- குவைத் விவகாரத்தில் உங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்றால், கொலம்பிய போதைப்  பொருள் கடத்தல்காரர்களை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற வெளியேற்றச் சட்டத்தை காலாவதி ஆக்குங்கள்” என்று நெருக்கடி  கொடுத்தார். பூனைக்கும் காலம் வந்துவிட்டதே என்று நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டே இதற்கு அரைமனதோடு ஒப்புக்கொண்டது  அமெரிக்கா. இனி, பாப்லோ கொலம்பியாவிடம் சரணடைவதற்கு எவ்விதமான முட்டுக்கட்டையும் இல்லை. சரணடைந்தாரா?


(மிரட்டுவோம்)  
ஓவியம் : அரஸ்