வீட்டு நிலத்திலும் உழவு அவசியம்!



ஹோம் அக்ரி-10

நாம் எதற்காக நிலத்தை உழ வேண்டும்? யாருடைய உதவியும் இல்லாமல், உரமிடாமல், உழாமல், பயிர் பாதுகாப்பு செய்யாமல் காடுகளில் செடி,  கொடிகள் நன்றாக வளர்கின்றனவே..?

இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் எழும். இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்வது மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு நமக்கு உதவும். காடுகளில்  பயிர்கள் தன்னிச்சையாக வளர்கின்றன. காடுகளைப் பார்த்து நாம் ஒருசில விஷயங்களைக் கற்றுக்கொண்டு அவற்றை  விவசாயத்தில் புகுத்தி வெற்றி  பெற பல வழிகள் இருந்தாலும், உழாமல் விவசாயம் செய்வது கடினம். உழவு என்ற சொல் தமிழில் விவசாயம் என்பதற்கான பொருளையே தருகிறது.  வள்ளுவரும், அதனாலேயே பயிர்த்தொழில் குறித்த அத்தியாயத்துக்கு உழவு என்றே பெயரிட்டார்.

உழும்போது மண்ணுக்குள் இருக்கும் பூச்சிகளின் முட்டைகள் மேற்புறம் வந்து வெயிலில் காய்கின்றன. இதனால் பெரும்பாலான தீங்கு தரும்  பூச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. ஆக, பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த உழவு அவசியமாகிறது மண்ணின் கீழ்ப்பகுதியில் இருக்கும்  பலவிதமான தீங்கு தரும் பூஞ்சைகளும், வைரஸ், பாக்டீரியாக்களும் மேல்புறம் வந்து சூரிய ஒளியில் படுவதால் அழிக்கப்படுகின்றன. அதனால்  கிருமிகளின் பாதிப்பை குறைக்க உழவு அவசியமாகிறது மண் துகள்களுக்கு இடையில் நீரும் காற்றும் இருக்கின்றன.

இந்தக் காற்றும், நீரும் மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிர்களுக்கு இன்றியமையாதவை. பயிர் செய்யும் காலப்போக்கில் மண் இறுகுவதால்  காற்றோட்டம் குறைகிறது. நீர்ப்பிடிப்பும், நீர்வடியும் தன்மையும் மாறி விடுகிறது. அதனால் மண்ணுக்குள் காற்றோட்டத்தை மேம்படுத்த உழவு  அவசியமாகிறது. உழும்போது களைகள் வேரோடு நீக்கப்படுகின்றன. களைகளின் விதைகளும் அழிக்கப்படுகின்றன. ஆக, களைக் கட்டுப்பாட்டுக்கும்  உழுவது தேவையாகிறது. ஆக, உழவில்லாமல் விவசாயம் இல்லை. வீட்டுச் சூழலில் நாம் ஏர் கொண்டு உழப் போவதில்லை என்பதால், எப்படி உழ  வேண்டும் என்பதை நாம் இங்கு பார்க்கப் போவதில்லை.

மாறாக, வீட்டுச் சூழலில் எப்படி நிலம் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். பயிர் செய்வதற்கு முன் மட்டும் நிலத்தைக் கொத்திவிட்டு மண்ணைப்  புழுதியாக்குவது போதாது. பயிர் செய்வதாக முடிவு செய்தபின், ஒருசில மாதங்களுக்கு முன்பிருந்தே நன்றாகக் கொத்தி புழுதியாக்க வேண்டும்.  குறைந்தது முக்கால் அடி ஆழம் வரை கொத்தி விடுவது நல்லது. இதற்கு, மண்வெட்டி, களைக்கொத்தி, கடப்பாறை இவற்றைப்பயன்படுத்தலாம்.  பலமுறை இப்படிச் செய்யும்போது களை, பூச்சிகள் கட்டுப்படுவதோடு வேர்கள் எளிதில் கீழே சென்று செடியும் எளிதில் ஸ்திரமாக நிற்க ஏதுவாகும்.

மண் தயாரிப்பில் நாம் எவ்வளவு நேரமும், உழைப்பும், கவனமும் தருகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு பயிர் பாதுகாப்பிலும், விளைச்சலிலும் பலன்  கிடைக்கும். செடிகள் ஆரோக்கியமாகவும், பலமானதாகவும் இருப்பதால் பயிர் பாதுகாப்பு எளிதாகவும் இருக்கும். பயிர் வளர்ப்பதில் அஸ்திவாரம்  போன்றது உழுவதும், மண் தயாரிப்பும். அதனால் தான் திருவள்ளுவரும், தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் என்ற  குறள் மூலம் நன்றாக புழுதியாகுமாறு உழப்பட்ட நிலத்துக்கு எருவே தேவையில்லை என்கிறார்.

எருவே தேவையில்லை என்பது மிகைப்படுத்திச் சொல்லப்பட்டது என்றாலும் அது உழவின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. உழும் போது  கட்டிகள் உடைபட்டு மண் சிறிய அளவாகிறது. மண் எந்த அளவுக்கு தனித்தனியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நுன்ணுயிர்கள், நீர் மற்றும் காற்று  தங்க, நகர இடம் கிடைக்கிறது. அதனாலேயே மீண்டும் மீண்டும் உழுவது பலன் தருகிறது. இனி நிலம் தயார் செய்வதிலிலுள்ள படிப்படியான  செயல்பாடுகளைப் பார்ப்போம். வீட்டுச் சூழலில் உழவு என்பதை கொத்தி விடுதல் என்று புரிந்து கொள்ளவும்.

கீழுள்ள மண்ணை மேலே கொண்டுவரும்படியான கோடை உழவு - ஆழமான உழவு. தேவையில்லாத செடிகளை வேருடன் களைந்து, நிலத்தை  சமப்படுத்துதல். சரியான ஈரப்பதத்தில் இரண்டு முறை உழுதல். எரு, மேலுரம் இடுதல் அல்லது கிடை அமர்த்துதல் அல்லது இரண்டும். மீண்டும்  ஒருமுறையோ, இரு முறையோ உழுதல் - தெளிப்பு முறையில் விதையிட வேண்டியிருந்தால், இந்த இரண்டாவது உழவில், விதைத்துக் கொண்டே  உழலாம். பள்ள பாத்தி / மேட்டு பாத்தி / ராமர் பாத்தி அமைத்தல் - நீர் பாய்ச்ச வாய்க்கால் அமைத்தல்.

கேள்வி பதில்கள்

Foam மெத்தையைவிட இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்குவது நல்லது என்கிறார்களே?
- சி.ஓவியா, நாகூர்.

நிச்சயமாக. ‘இலவம் பஞ்சில் துயில்’ என்று அவ்வையார் ஆத்திச்சூடி யில் சொன்னதில் மிகப்பெரிய அறிவியல் உண்மைகளும், பின்புலமும் உள்ளன.
இலவு என்ற மரத்தில் விளையும் இலவம் பஞ்சு, பருத்தியின் பஞ்சிலிருந்து வேறுபட்டது. இது பருத்தியைக் காட்டிலும் எட்டு மடங்கு இலேசானது, நீர்  உறிஞ்சும் தன்மை இல்லாதது. இலவம் பஞ்சின் இழைகளின் உட்புறம் கூடு போல உள்ளதால் ஒலியை நன்றாக உறிஞ்சக்கூடியவையாகவும்,  வெப்பத்தை தக்கவைக்காதவையாகவும் இருக்கின்றன.  

இதன் வழுக்கும் தன்மையாலும், நீர் ஒட்டா தன்மையாலும் இவை மெத்தை, தலையணைகளை மிருதுவாகவும், சுத்தம் செய்ய ஏதுவாகவும்  மாற்றுகின்றன. இந்த இழைகள் ஒவ்வாமை ஏற்படுத்தாதவை. இவைகளிலிருந்து தூசி வெளிப்படுவதில்லை. இவை நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மை  கொண்டிருப்பதால், இவற்றில் நுண் கிருமிகள் ஏதும் தங்குவதில்லை. இலவம் பஞ்சு மெத்தைகளும், தலையணைகளும் காதி கடைகளில் கிடைக்கும்.  காதி கடைகளில் ரெடிமேடாகவும் மாவட்ட தலைநகர்களிலுள்ள காதி கிராமோத்யக் கடைகளில் தேவையான அளவுகளில் ஆர்டர் கொடுத்தும்  செய்துகொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் பஞ்சு மெத்தைகள் பருத்திப் பஞ்சாலும் செய்யப்படுகின்றன. அவை எடை அதிகமாக இருக்கும்.  

தேசிய மலர் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
- எம்.செல்வி, தூத்துக்குடி.
பூனாவில். தட்பவெப்பம் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வணிக ரீதியாக பூனாவிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் அதிகளவில் பூ வளர்ப்பு நடக்கிறது.

பசலிக்கீரையில் வைட்டமின் டி அதிகளவு உள்ளது என படித்தேன். உண்மையா?
- எம்.சுப்பிரமணியன், துளசியாப்பட்டினம்.
பசலிக்கீரையில் வைட்டமின் டி உள்ளது. ஆனால், அதிக அளவு என்று சொல்ல முடியாது. சிறிய மீன்கள், மீன் எண்ணெய், முட்டை, காளான்  இவைகளில் பசலிக்கீரையில் இருப்பதை விட வைட்டமின் டி அதிகமாக உள்ளது. வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ  மட்டுமே வேலை செய்பவர்களுக்கே வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. இக்குறைபாட்டால் மனச்சோர்வும், எலும்பு ஆரோக்யமும்  பாதிக்கப்படுகிறது. பசலிக்கீரையில் உள்ள மிக முக்கியமான சத்து வைட்டமின் K மற்றும் A.

நான் பல்வேறு வகையான பூமரங்களை வளர்க்க விரும்புகிறேன். எத்தனை வகையான பூமரங்கள் இந்தியாவில் உள்ளன? பூமரங்களைப் பற்றி  அறிந்துகொள்ள யாரை அணுகவேண்டும்?
- இ.இந்திரா, திருநெல்வேலி.
நமது தட்பவெப்ப சூழலில் நீங்கள் சரக்கொன்றை, மஞ்சள் கொன்றை, கதலி, மரவல்லி, மந்தாரை, பூவரசு, வாகை, குல்மொஹர், முள்முருங்கை,  இலவம் பஞ்சு, பாரிஜாதம் போன்றவற்றை வளர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு அரசாங்க வனத்துறை மற்றும் வனத்துறையின் கன்று உற்பத்தி  செய்யும் தொழிலாளர்களை அணுகவும்.

(வளரும்)
மன்னர் மன்னன்