எஸ்எம்எஸ்



காலை ஒன்பது மணியிருக்கும். கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சிக்கு அரசுப் பேருந்தில் போய்க்கொண்டிருந்தேன். மழை கடுமையாகப் பெய்து  கொண்டிருந்ததால் பேருந்தின் ஜன்னல்களை அடைத்துவிட்டோம். ஜன்னலோர இருக்கையாக இருந்தாலும் வெளியே எதையும் சரியாகப் பார்க்க  முடியவில்லை. பேருந்துக்குள் ஆங்காங்கே மழை நீர் தாரை தாரையாக ஒழுகிக் கொண்டிருந்தது. இருக்கைகள் நனைய ஆரம்பித்ததால் சிலர்  நின்றுகொண்டே பயணித்தனர். அப்போதும் அவர்களின் தலையை மழை நனைத்தது. அரசைத் திட்டிக்கொண்டே இருக்கைக்கு அருகில் இருக்கும்  கம்பியை கெட்டியாகப் பிடித்தபடி பயணிகள் நின்று கொண்டிருந்தனர்.

மழை நீர் அதிகளவில் உள்ளே புகுந்ததால் இடையிலேயே பிரேக் டவுன் ஆகி பேருந்து நின்றுவிட்டது. பேருந்து நின்ற இடம் எதுவென்று சரியாகத்  தெரியவில்லை. ஒரு மணி நேரம் அங்கேயே காத்திருந்தோம். இன்னொரு அரசு பேருந்து வந்தது. நடத்துநர் எங்களை அதில் ஏற்றிவிட்டார். அந்தப்  பேருந்துக்குள்ளும் மழை. அப்போது மொபைலில் எஸ்எம்எஸ் வந்ததற்கான டோன் கேட்டது. போனை வெளியே எடுத்தால் மழையில் நனைந்து  விடுமோ என்று அப்படியே விட்டுவிட்டேன். கொஞ்ச நேரத்தில் மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. பொள்ளாச்சியை நெருங்கும் முன் மழை  நின்றுவிட்டது. பள்ளியில் என்னுடன் படித்த ஒரு நண்பனைப் பார்க்க வந்திருந்தேன்.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிடம் நடந்தால் நண்பனின் வீட்டை அடைந்துவிடலாம். மேகம் தெளிவாக இருந்தது. மழை  பெய்ததற்கான எந்த சுவடும் இல்லை. நண்பனின் வீட்டை அடைந்தேன். பள்ளி நாட்களை அசைபோட்டோம். அவன் வீட்டிலேயே மதிய உணவை  அருந்திவிட்டு ஊரைச் சுற்ற பைக்கில் கிளம்பினோம். நேரம் போனதே தெரியவில்லை. மகிழ்ச்சியுடன் கோவைக்குக் கிளம்பினேன். இந்த முறை  தனியார் பேருந்து. உக்கடத்தில் விட்டிருந்த பைக்கை எடுத்து வீட்டுக்கு வந்து சேர இரவு 11 மணி ஆகிவிட்டது. அம்மா எனக்காக விழித்திருந்தார்.  ‘‘ஏன்டா கார்த்தி... போனை ஆன் பண்ணி வைக்க மாட்டியா?’’ அம்மாவின் குரலில் பதற்றம்.

‘‘இல்லம்மா... மழைல நனைஞ்சுடும்னு போனை ஆப் பண்ணி வெச்சுட்டேன்...’’ அம்மாவும் அமைதியானாள். சார்ஜ் போட்டு போனை ஆன் செய்தவுடன்  வரிசையாக எஸ்எம்எஸ் கொட்டியது. ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தேன். ஆறு வருடங்களாக நான் அழிக்காமல் பாதுகாத்து வந்த நண்பன்  சுகுமாரனின் எஸ்எம்எஸ்ஸும் வந்தது. ஏனோ தெரியவில்லை. கால முள் ஆறு வருடங்களுக்கு முன்னால் சென்று நின்றது. அப்போது கோவையில்  உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். நன்றாக மழை பெய்துகொண்டிருந்த ஓர் இரவில் ‘மன்னிக்கவும்.  இனிமேல் உன்னால் என்னைப் பார்க்க முடியாது’ என்று சுகுவிடம் இருந்து தங்கிலீஷில் டைப் செய்யப்பட்ட எஸ்எம்எஸ் வந்தது.

சுகு... சுகுமாரன் கல்லூரியில் எனக்குக் கிடைத்த அற்புதமான நண்பன். படிப்பில் கெட்டிக்காரன். ஒரே பெஞ்ச்சில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.  அவனுக்கு அருகில் உட்கார்ந்திருந்தது மட்டும்தான் அவனுடனான நட்பு கிடைக்க ஒரே காரணம். சுகு தன் ஒரே நண்பனான சாகுலை அறிமுகம் செய்து  வைத்தான். அவனும் எங்கள் கல்லூரியில் பி.எஸ்சி படித்துவந்தான். கல்லூரியில் நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம்.  ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்;  ஒன்றாகத்தான் எங்கும் செல்வோம். சுகுவின் அப்பா டெக்ஸ்டைல் பிசினஸ் செய்துவந்தார். அம்மா ஹவுஸ் ஒய்ப்.  ஒரு தம்பி, பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். ஒரு காலத்தில் அவன் அப்பா டெக்ஸ்டைல் பிசினஸில் கொடிகட்டிப் பறந்தவர்.

தீபாவளி சமயங்களில் அவரை கையில் பிடிக்கவே முடியாது. ஆனால், கடந்த சில வருடங்களாக கோவையில் புதிது புதிதாக டெக்ஸ்டைல்  நிறுவனங்கள் நாலாப்பக்கமும் கடை விரித்ததால் அவரது பிசினஸ் சரியாகப் போகவில்லை. கடனை வாங்கி கவுரவத்துக்காக பிசினஸை தொடர்ந்து  நடத்திக் கொண்டிருந்தார். வீடு முதல் அம்மா காதிலிருந்த கம்மல் வரை எல்லாமே அடமானத்தில் இருந்தன. ‘‘வீட்டுக்குப் போகவே பிடிக்கலடா  கார்த்தி. கடன்கொடுத்தவங்க யாராவது வீட்ல வந்து உட்கார்ந்துட்டு இருக்காங்க. காலை அஞ்சு மணிக்கே வந்துடறாங்க. அம்மா முகத்தை பாக்க  முடியலடா. இதெல்லாம் தெரிய வேண்டாம்னு தம்பியை ஹாஸ்டல்ல சேர்த்துட்டோம்.

நாலு மாசமா அவன் ஹாஸ்டல் பீஸை கட்டல. ஸ்கூல்ல இருந்து பேரன்ட்ஸை வரச் சொல்லியிருக்காங்க. நான்தான் போயாகணும். பணத்துக்கு  என்ன பண்றதுனு தெரியல. பார்ட் டைமா ஏதாவது வேலைக்குப் போலாம்னு இருக்கேன்...’’ இந்த இரண்டு வருடங்களில் இதுபோல் சுகு என்னிடம்  பேசியதே இல்லை. எப்போதும் கலகலப்பாக இருப்பான். எனக்கு பிரச்னை என்றாலும் பாசிட்டிவ்வாகப் பேசுவான். அப்படிப்பட்டவன் அழுததும்  நிலைகுலைந்தேன். ஆறுதலாக அவன் கைகளை இறுக்கிப் பற்றினேன். சுகுவின் கவலைகள் எங்கள் இருவரைத் தவிர கல்லூரியில் யாருக்கும்  தெரியாது. சாகுல் உட்பட. மறுநாள் சுகு காலேஜுக்கு வரவில்லை. அவன் மொபைலும் ஆப் ஆகியிருந்தது.

லீவ் என்றால் நிச்சயம் என்னிடம் போனில் பேசுவான். அன்று அவனிடமிருந்து ஒரு கால் கூட வரவில்லை. அன்று மட்டுமல்ல... அந்த வாரம் முழுக்க  அவன் வரவேயில்லை. மொபைலும் ஸ்விட்ச் ஆப். அவன் வீட்டுக்கு அருகிலிருந்த கடைக்கு போன் செய்தேன். எந்த தகவலும் இல்லை. பைக்கை  எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குச் சென்றேன். பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தேன். ‘நாலைஞ்சு நாளைக்கு முன்னாடி வீட்டை காலி  பண்ணிட்டு போயிட்டாங்க. எதுவுமே சொல்லலை...’ என்றார்கள். அவன் தம்பி படித்த ஸ்கூல் ஹாஸ்டலுக்கு மறுநாள் சென்றேன். ஒரு வாரமாக  வரவில்லை என்றார்கள். ஏதேதோ எண்ணங்கள். சரியாக உறங்காமல் தவித்தேன்.

ஒரு நாள் மதியம் என் மொபைலுக்கு முன்பின் அறியாத லேண்ட் லைனில் இருந்து கால் வந்தது. ‘‘நான் சுகு பேசுறேன்...’’ எதிர்முனையில் அந்தக்  குரலைக் கேட்டதும் ஆனந்தத்தில் உறைந்தேன். கண்ணீர் என் முகத்தை நனைத்தது. ‘‘ஈவினிங் சரியா அஞ்சு மணிக்கு காந்திபுரம் பார்க் வந்துடு...’’  போனை வைத்துவிட்டான். அப்போது மணி மதியம் இரண்டுதான். காலேஜில் இருந்து ஒரு மணிநேரத்தில் பார்க்கை அடையலாம். இருப்புக்  கொள்ளவில்லை. அப்பொழுதே கிளம்பி காந்திபுரம் பார்க்கை அடைந்தேன். நேரத்தைக் கடத்துவது சவாலாக இருந்தது. பார்க்கிற்கு அருகிலிருக்கும்  அரோமா பேக்கரியில் சூடான மசாலா டீயைப் பருகிக்கொண்டு, பக்கத்திலிருக்கும் என்.சி.பி.ஹெச் புத்தகக் கடைக்குள் நுழைந்தேன்.

வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்களைப் புரட்டினேன். 4.25க்கு மொபைல் அடித்தது. வேறொரு  லேண்ட் லைனில் இருந்து கால். சுகுதான். ‘‘வந்துட்டேன். அரோமா பேக்கரி முன்னாடி வெயிட் பண்றேன்...’’ என்றான். சில நொடிகளில் அங்கு  சென்றேன். இருவராலும் எதுவும் பேச முடியவில்லை. வார்த்தைகள் தொண்டையை அடைத்துக் கொண்டன. கண்ணீர் மல்க என்னை அணைத்தான்.  மெல்ல பார்க்கில் நுழைந்து ஒரு பெஞ்ச்சில் அமர்ந்தோம். ‘‘ஒரு மாசத்துக்கு முன்னாடி, கடன் கொடுத்தவங்க வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட கண்டபடி  சத்தம் போட்டிருக்காங்க. அப்பாவும் வீட்ல இல்ல. டிவி, கட்டில், ஃப்ரிட்ஜ், சோஃபானு எல்லாத்தையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க.

ஊரே வேடிக்கை  பார்த்துச்சு. யாருமே எதுவும் கேட்கல. ரொம்பவே அவமானமா போயிடுச்சுடா. அம்மா உடைஞ்சுட்டாங்க. அப்பா கடன்காரன்  ஒருத்தனுக்கு வீட்டை எழுதிக் கொடுத்துட்டாரு. இப்ப தலைமறைவா பொள்ளாச்சிக்குப் பக்கத்துல ஒரு காட்டுக்குள்ள இருக்கோம். தம்பியும்  ஸ்கூலுக்குப் போறதில்ல...’’ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். ‘‘எல்லோரும் செத்துப்போயி டலாம்னு அப்பா சொல்றாரு.  வீட்ல சாப்பிட பயமா இருக்கு. வீட்டைவிட்டு வந்துட்டேன். எனக்கு சாக விருப்பமில்லை. நான் வாழணும். என்ன பண்றதுனு தெரியல. நான் வேணா  உன் வீட்டுக்கு வந்துடட்டா?’’ ‘‘வா...’’ என்றபடி அவன் கரங்களைப் பற்றினேன்.

எதுவும் பேசாமல் சுற்றிலும் இருந்த செடி கொடிகளைப் பார்த்துக் கொண்டு இரண்டு மணிநேரம் அப்படியே அமர்ந்திருந்தோம். செக்யூரிட்டி வந்து ‘மணி  ஆகிடுச்சு. பார்க்கை மூடப் போகிறோம்’ என்று விசில் அடித்தார். என்னுடன் வீட்டுக்கு வந்தான். இரவு உணவை ஒன்றாகச் சாப்பிட்டோம். என்ன  நினைத்தான் என்று தெரியவில்லை. ‘தம்பியைப் பாக்கணும் போலிருக்கு’ என்று பொள்ளாச்சிக்குக் கிளம்பினான். எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை.  பைக்கில் அவனை அழைத்துச் சென்று உக்கடத்தில் இறக்கிவிட்டு அரை மனதோடு வீட்டுக்கு வந்தேன். மனது துடித்துக்கொண்டே இருந்தது. அடுத்த  சில நிமிடங்களில் கேட்ட மொபைலின் ரிங் டோன் ரத்த அழுத்தத்தை அதிகரித்தது.

‘‘வீட்டுக்கு வந்துட்டேன்டா. நாளைக்கு உன் வீட்டுக்கு வந்துடறேன். இந்த விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லிடாதே...’’ சுகு பேசியபிறகே மனம்  அமைதியானது. அடுத்த நாள் பயங்கரமான மழை. ஸ்கூல், காலேஜுக்கு லீவ். வீட்டில் மின்சாரம் இல்லை. மொபைலும் சார்ஜ் இல்லாமல் ஆப்  ஆகிவிட்டது. காலையில் ஆரம்பித்த மழை இரவு ஏழு மணிக்குத்தான் நின்றது. ‘‘நாளைக்கு உன் வீட்டுக்கு வந்துடறேன்...’’ என்று சொன்ன சுகுவின்  வார்த்தைகள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன. இரவு பத்து மணிக்கு மின்சாரம் வந்ததும் சார்ஜ் போட்டு போனை ஆன் செய்தேன். சுகுவிடம்  இருந்து ‘மன்னிக்கவும். இனிமேல் உன்னால் என்னைப் பார்க்க முடியாது’ என்ற அந்த எஸ்எம்எஸ் வந்தது. ஒன்றும் புரியாமல் அவனுக்கு போன்  செய்தேன்.

ஸ்விட்ச் ஆப். அப்போது சாகுலிடம் இருந்து போன். ‘‘சுகுவோட குடும்பமே தற்கொலை செஞ்சுட்டாங்க...’’ சாகுல் விசும்பிக் கொண்டிருந்த போதே  போனை கட் செய்தேன். அம்மாவிடம் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் காட்டுப் பகுதிக்கு தனியாக நடந்து சென்றேன். சேறும்  சகதியும் என் கால்களை இறுக்கிப்பிடித்து நகரவிடாமல் செய்தது. அதையும் மீறி நிலவின் வெளிச்சத்தில் நடந்தேன். நெஞ்சுக்குள் இனம்புரியாத  சுமையும், வலியும் அழுத்தியது. கண்ணீர் வற்றும் வரை கதறி அழுதேன். அன்று அழுத அழுகை இப்போதும் வந்தது. இன்றும் அம்மாவிடம் எதுவும்  சொல்லாமல் அதே காட்டுப் பகுதிக்குச் சென்றேன். அழுகை வெடித்தது.

த.சக்திவேல்

விண்வெளியில் ஃபுட்பால்!

ரஷ்யாவில் கால்பந்துப் போட்டி தொடங்கவுள்ள நிலையில் அந்த ஃபீவர் விண்வெளிக்கும் பரவிவிட்டது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்  பணிபுரியும் ரஷ்ய வீரர்கள் ஆன்டன் ஸ்காபில்ரோவ், ஆலெக் ஆர்டெமியெவ் ஆகிய இருவரும் புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் கால்பந்து  விளையாடிய வீடியோதான் இணையத்தில் ஹாட் வைரல்.

போய்வா தங்கமே!

கொச்சியின் எடப்பள்ளியிலுள்ள புனித ஜார்ஜ் சர்ச்சில், பிறந்து இரு நாட்களேயான குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் என்கொயரியில், குழந்தையை முத்தமிட்டு சர்ச்சில் வைத்துவிட்டு செல்பவரைக் கண்டுபிடித்தனர். அவர் வேறு யாருமல்ல; பிட்டு டேவிஸ். குழந்தையின் தந்தை.  வறுமையின் காரணமாக நான்காவது குழந்தையை முத்தமிட்டு கைவிட்டது தெரிந்து உலகமே உச்சு கொட்டியுள்ளது.

கோவிந்தா டான்ஸ்!

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கித்தாய்ப்பாக போட்ட கோவிந்தா டான்ஸ் இணையத்தில் கிறுகிறு  வைரல். ‘ஆப் கே ஆ ஜானே சே...’ என்ற பாடலுக்கு அவர் போட்ட ஸ்டெப்ஸ் பாலிவுட் பிரபலங்கள் அனுஷ்கா சர்மா, அர்ஜுன் கபூர் ஆகியோரையும்  லைக் போட வைக்க, செலிபிரிட்டியானார் அங்கிள். இப்போது இணையத்தில் அங்கிள் டான்ஸை காப்பி செய்து டான்ஸ் ஆடி வருகின்றனர்.