அதர்வாவின் போலீஸ்டோரி!



அதர்வாவும் இப்போ போலீஸ்! அதிரடி திகுதிகுக்கும் ட்ரெயின் ஃபைட், துரத்தும் சேஸிங் என ஃபுல் ஆக்‌ஷனுக்கு தாவியிருக்கிறார். எக்ஸ்ட்ரா  போனஸாக ஹன்சிகா, காமெடிக்கு யோகிபாபு என செம பேக்கேஜுடன் ரெடியாகி வருகிறது ‘100’. ஜி.வி.பிரகாஷை வைத்து ‘டார்லிங்’, ‘எனக்கு  இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிய சாம்ஆண்டன் இப்போது அதர்வாவுடன் கைகோர்த்திருக்கிறார்.

‘‘முதல் இரண்டு படங்கள்ல காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தேன். இப்ப ஆக்‌ஷன். முழு ஸ்கிரிப்ட்டும் எழுதின பிறகு அதர்வா பொருத்தமா  இருப்பார்னு தோணிச்சு. இதுவரை அவர் போலீஸ் கதைகள் பண்ணினதில்ல. நிச்சயமா ஃப்ரெஷ்ஷா இருக்கும். ‘அவுரா சினிமாஸ்’ மகேஷ், என் காலேஜ்  சீனியர். அவர்கிட்ட கதையைச் சொன்னேன். அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. ஃபர்ஸ்ட் லுக் வெளியானப்ப ‘டைட்டில் நம்பர்ல இருக்கே’னு  பலரும் ஆச்சரியப்பட்டாங்க. கதைக்கு இதைவிட பொருத்தமான டைட்டில் கிடைக்கலை!’’ போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கிடையே திருப்தியாகப்  பேசுகிறார் சாம்ஆண்டன்.

நீங்களும் போலீஸ் ஸ்டோரி..?

இது வழக்கமான போலீஸ் கதை இல்ல. ஒரு நாள் மிட்நைட்ல ஏர்போர்ட்ல இருந்து கார்ல வீட்டுக்கு திரும்பிட்டிருந்தேன். ஒரு சிக்னல்ல  போலீஸ்காரங்க வழிமறிச்சாங்க. அந்த இன்ஸிடென்ட்ல தோணின கதை இது. நம்ம எல்லாருக்குமே போலீஸ் கண்ட்ரோல் ரூம் பத்தி தெரிஞ்சிருக்கும்.  பலரும் ஒருதடவையாவது அதுக்கு போன் செஞ்சிருப்போம். அங்க நடக்கிற நிகழ்ச்சிகள்தான் கதை. அதர்வா ஜாலியா ஊர் சுத்தறவர். ‘சிங்கம்’ சூர்யா  மாதிரி போலீஸ் ஆகணும்னு அவருக்கு ஆசை.

ஆனா, டிபார்ட்மென்ட்ல அவரை கண்ட்ரோல் ரூம்ல டூட்டி பார்க்கச் சொல்லிடறாங்க. இதுல இருந்து கதை நூறு கி.மீ. வேகத்துல பறக்கும். அதர்வா  கூட இதுவரை ஜோடி சேராதவங்க யாருனு லிஸ்ட் எடுத்தோம். முதல் ஆளா ஹன்சிகா வந்து நின்னாங்க.  அப்புறம் ராதாரவி சார், யோகிபாபு,  யூடியூப் ‘எருமசாணி’ல வந்த விஜய் - ஹரிஜா... இவங்க தவிர நிறைய புதுமுகங்களும் இருக்காங்க. முதல் படத்துல இருந்து என்னோட பயணமாகிற  கிருஷ்ணன்வசந்த் ஒளிப்பதிவு படத்துக்கு ப்ளஸ்.

மொத்த டாக்கி போர்ஷனையும் 24 நாட்கள்ல முடிக்க அவரோட வேகமும் ஒரு காரணம். ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்குப் பிறகு திலீப் சுப்பராயன்  மாஸ்டரோட ஸ்டண்ட் இதுல பேசப்படும். ஆக்‌ஷன் ப்ளாக்குக்காகவே 18 நாட்கள் உழைச்சி ருக்கோம். பாடல்கள் நல்லா வந்திருக்கு. ‘விக்ரம்  வேதா’வுக்கு அடுத்து சாம்.எஸ். கமிட் ஆன படம் இது. இன்னும் ஒரு பாடல் ஷூட் மீதி இருக்கு. அதை ஃபாரின்ல எடுக்கலாம்னு ப்ளான்.

அதர்வா - ஹன்சிகா ஜோடி பொருத்தம் எப்படி?

புரியுது. ஹன்சிகா கொஞ்சம் சீனியர். அவர் அதர்வாவுக்கு ஜோடினா... பொருத்தம் சரியா இருக்குமானு கேட்கறீங்க. எங்களுக்கும் இருந்தது. ஆனா,  ஹன்சிகாவை நேர்ல சந்திச்சதும் உற்சாகமாகிட்டோம். ஸ்லிம்மா, க்யூட்டா அதர்வாவுக்கு பர்ஃபெக்ட்டா இருந்தாங்க. படம் பார்த்தா உங்களுக்கே நான்  சொல்றது புரியும். அதர்வா, ஒரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். முழுசா இயக்குநரை நம்பறவர். ஹன்சிகா இதுல கால்சென்டர்ல ஒர்க் பண்ற பொண்ணு.  ஆஸ்பிட்டல்ல ஒரு சேஸிங்ல ரிஸ்க் எடுத்து நடிச்சாங்க.

உங்க ஃப்ரெண்ட் யோகிபாபு என்ன சொல்றார்..?

உற்சாகமா தோள் கொடுக்கறார். பட ஆரம்பத்துல அவர் கொடுத்த கால்ஷீட்டை எங்களால பயன்படுத்த முடியலை. மறுபடி ஷூட் கிளம்பறப்ப கேட்ட  தேதில வந்து நடிச்சுக் கொடுத்தார். இயல்பாவே காமெடி ரசனை உள்ள ஆளு. நிறைய டயலாக்ல அவர் பங்கு இருக்கு. ஆனாலும் டைரக்டர்தான்  பண்ணினார்னு கிரெடிட்ஸ் கொடுப்பார். ராதாரவி சார் வர்ற சீன்கள்ல காமெடியும், சீரியஸும் களைகட்டும்.

உங்க டியர் ஃப்ரெண்ட் ஜி.வி.பிரகாஷ் எப்படி இருக்கார்..?

சந்தோஷமா இருக்கார். முதல் இரண்டு படங்கள்ல நாங்க சேர்ந்து ஒர்க் பண்ணினோம். ரெண்டு பேருக்குமே ஒரு சேஞ்ச் தேவைப்பட்டது. கண்டிப்பா  ஃபியூச்சர்ல கைகோர்த்து பல படங்கள் கொடுப்போம். அவர்கிட்ட பிடிச்ச விஷயம், டைமிங். அவ்வளவு துல்லியமா ஃபாலோ பண்ணுவார்.


 மை.பாரதிராஜா