சவ ஊர்வலத்துக்கு செலவு செய்யறதால யாருக்கு என்ன லாபம்?!



கேட்கிறார் ‘ஈ.ம.யௌ’ மலையாளப் பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

சமீபத்தில் வெளியாகி திரை ஆர்வலர்களிடம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கும் மலையாளப் படம், ‘ஈ.ம.யௌ’. ஒளிப்பதிவு, திரைக்கதை,  இயக்கம், நடிப்பு, இசை... என்று எல்லாவற்றிலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது இப்படம். ‘ஈஸோ மரியம் யௌசேப்பு’ என்பதன் சுருக்கம்தான்  ‘ஈ.ம.யௌ’.

லத்தீன் கிறிஸ்துவ சமூகத்தில் மரணமடைந்தவரின் காதில் பிரார்த்திக்கிற சொற்கள் இவை. அந்த சமூகத்தின் ஈமச்சடங்கு அழைப்பிதழின்  மேல்பகுதியில் பிள்ளையார்சுழி போல இது அச்சடிக்கப்பட்டிருக்கும். தலைப்பே படம் எதைப்பற்றியது என்று சொல்கிறது. கடற்கரையோர செல்லனம்  கிராமத்தில் வசிக்கும் வாவச்சன் மேஸ்திரி, மகன் ஈசியிடம் தன் தந்தைக்கு நடந்த பிரமாண்ட இறுதி ஊர்வலத்தைப் பற்றிச் சொல்கிறார்.

தனக்கும் அது மாதிரி செய்யப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதைவிட பெரிய சவ ஊர்வலத்தை உனக்கு நடத்துவேன் என்று அப்பாவிடம்  வாக்கு தருகிறான் மகன். வாவச்சன்  இறந்துபோகிறார். மகன் கொடுத்த வாக்கை நிறைவேற்றினானா என்பதே கதை. மரணம் நிகழ்ந்த வீட்டில்  நடக்கும் துக்க நிகழ்வுகள்தான் படம் என்றாலும், திரையரங்கே சிரிப்பலையில் மிதக்கிறது. அதே நேரம் படம் முடிந்து வெளியே வரும்போது இதயம்  கனமாகிறது. இதுவே படத்தின் சிறப்பு. 18 நாட்களில் படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ஏற்கனவே ‘அங்காமாலி  டைரீஸ்’ இயக்கி பெரிய அதிர்வலையை உண்டாக்கியவர்.

இந்தக் கதை எப்படி உருவானது?

ரொம்ப நாளைக்கு முன்னாடி ‘அப்பா - மகனை வைச்சு ஒரு கதை பண்ணலாமா...’னு மேத்யூஸ் சாரிடம் கேட்டேன். இந்த ஒன்லைனை மட்டும்தான்  அவர்கிட்ட சொல்லியிருந்தேன். அவர்தான் ஸ்கிரிப்ட் எழுதணும்ங்கிறது என் ஆசை. கேரளத்துல பெரிய எழுத்தாளர் அவர். மரணத்தை ஒட்டி நிறைய  கதைகளை எழுதியிருக்கிறார். அவருக்குப் பிடிச்ச அந்த சப்ஜெக்ட்லயே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணித் தந்தார்.

எனக்கும் பிடிச்சிருந்தது. பெரும்பாலும் இங்கே சினிமாவுக்கான கதைகள்ல மரணத்தைப் பற்றி பெருசா பேசமாட்டோம். மக்கள் தியேட்டருக்கு வந்து  இதையெல்லாம் பார்ப்பாங்களான்னு ஒரு சந்தேகம். ஆனால், வாழ்க்கையில் இருக்கும் உண்மைகளைச் சொன்னா, அதுவும் கதையோடு தங்களைத்  தொடர்புபடுத்திப் பார்க்கிற மாதிரி சொன்னா, நிச்சயமா மக்களுக்குப் பிடிக்கும். இப்படித்தான் இந்தக் கதை உருவாச்சு.

படம் ரொம்பவே உணர்வுபூர்வமாக இருந்தது...

நான் பெங்களூர்ல இருந்த சமயத்துல அப்பா எதிர்பாராம இறந்துட்டார். அடுத்த சில மணி நேரங்களில் ஒரு மகனோட மனநிலை எப்படியிருக்கும்னு  என்னால சொல்ல முடியும். படத்தில் வர்ற அப்பாவும் எதிர்பாராத ஒரு நேரத்தில்தான் இறக்கிறார். அதனால இந்தக் கதையை இன்னமும் நெருக்கமா  படமாக்க முடிந்தது.

ரொம்ப சீரியஸான விஷயத்தை எப்படி நகைச்சுவையா சொன்னீங்க..?

நம்மால எந்தச் சூழலிலும் நகைச்சுவையைக் கண்டு கொள்ள முடியும். அதுக்கு மரணம் கூட விதிவிலக்கல்ல. இந்தப் படத்துல நகைச்சுவை சூழலோடு  பின்னியிருக்கும். தனியே இருக்காது. யாராவது இறக்கும்போது அது அந்தக் குடும்பத்துக்கு மட்டும்தான் துயரமான விஷயம். பெரும்பாலும்  சுற்றியிருக்கிறவங்க வேடிக்கை பாக்கவும், அங்கே என்னென்ன நடக்குது, யார் யார் வர்றாங்கன்னு குசலம் விசாரிக்கவும்தான் வர்றாங்க. அவங்களை  அந்த மரணம் பெருசா பாதிச்சிருக்காது.

அங்கே பார்க்குற காட்சிகள்தான் அவங்களுக்கு முக்கியம். உண்மையைச் சொல்லணும்னா அந்தக் காட்சிகளைப் பார்க்கறதுக்காக மட்டும்தான்  பெரும்பாலானவங்க மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு வர்றாங்க. இது கிறிஸ்துவ சமூகத்துக்கு மட்டுமல்ல, எல்லா சமூகத்துக்கும் பொருந்தும். ஒருத்தர்  இறந்துட்டா அவரைப் புதைக்க ஒரு குழி, அந்தக் குழியை மூட கொஞ்சம் மண் போதும். ரொம்ப எளிமையான விஷயம் இது. ஆனால், அது இதுன்னு  ஏகப்பட்ட விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கு. இதெல்லாம் மத்தவங்களுக்காக நாம செய்ற வெற்று அலங்காரம்தான்.

இதனால எந்தப் பயனும் இல்லை. இன்னைக்கு இந்த அலங்காரத்தால ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையும் கடினமாகிடுச்சு. சுற்றியிருக்கிற ஆளுங்க  வாழவும் சாகவும் விட மாட்டாங்க. இன்னைக்கு 5 லட்சம், 5 கோடினு செலவு செஞ்சு, அப்படி இப்படின்னு அலங்காரம் பண்ணி கல்யாணம் செய்றோம்.  இதெல்லாம் யாருக்காக? புருஷன் - பொண்டாட்டிக்குள்ள புரிதல் இல்லைன்னா இவ்வளவு செலவு பண்ணி என்ன பயன்? இதைத்தான் படத்துல  சொல்லியிருக்கேன்.

கன்னட ‘திதி’, தமிழ் ‘மதயானைக்கூட்டம்’... இதெல்லாம் இந்தப் படத்துக்கு இன்ஸ்பிரேஷனா?

‘மதயானைக்கூட்டம்’ இன்னும் பார்க்கலை. ‘திதி’ எனக்குப் பிடிச்ச படம். அவ்வளவுதான்.

உங்களோட ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் காட்டுறீங்களே...

ஒரு இயக்குநரைப் பொறுத்த வரைக்கும் ஒரே மாதிரியான படங்களைப் பண்றதுல என்ன உற்சாகம் இருக்கப்போகிறது? இதுவரை செய்யாத ஒண்ணை  செய்றதுதான் சவால். அதனாலதான் புது விஷயங்களை நாம முயற்சி பண்றோம். நல்ல படம் பண்ற எல்லோருக்குமே இது பொருந்தும்.  மலையாளத்துல மட்டுமல்ல, தமிழிலும் இப்படித்தான். உதாரணத்துக்கு பெங்களூர் ஃபிலிம் பெஸ்டிவல்ல ‘டூலெட்’ பார்த்தேன். நல்ல முயற்சி. எனக்கு  ரொம்ப பிடிச்சிருந்துச்சு.

த.சக்திவேல்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்