காதலர் தின எஸ்கேப்!'காதலர் தினம்' என்ற இடைத்தேர்தல் நாளில் பலரும் தங்கள் காதலை உங்களிடம் தெரிவிப்பதற்காக நேரில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்பார்கள். அதுவும் மிஸ்டு கால் கொடுத்து! சர்வநிச்சயமாக இப்படி டார்ச்சர் செய்பவர் ஒருவராக இருக்க மாட்டார். குறைந்தது நான்கைந்து பேராவது தொடை தட்டி ஸ்பீக்கர் வைத்து அலறி களத்தில் குதிப்பார்கள். மிரள வைக்கும் இந்த வேட்பாளர் லிஸ்ட்டிலிருந்து பலரை நீக்கவோ காத்திருப்பு பட்டியலில் வைக்கவோ நீங்கள் நினைத்தால் -இந்த ஐடியாஸ் உங்களுக்குத்தான்! பேட்டன்ட்உரிமை இல்லை. தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கூல் கூலர்
தம்மாத்தூண்டு பரிசை பெரிய அளவு பார்சலாகக்கட்டி, ‘பாகுபலி’ ஸ்டைலில் தலையில் சுமந்து கொண்டு தன் சொந்தக் கார் போல் சீன் போட்டு, வாடகைக் காரில் வந்து இறங்கும் நண்பர் ரஜினி ஸ்டைலில் கூலிங்க்ளாசைக் கழற்ற முயற்சிப்பார். ஸ்டைல் என்னும் இந்தக் கண்றாவியை எதிர்கொள்ள உங்கள் தலையை அலங்கரிக்கும் கூலரை சற்று கீழிறக்கி நீலாம்பரி ஸ்டைலில் நீங்கள் கண்களில் மாட்டலாம்.

‘இந்த கூலர்ல நீ சூப்பரா இருக்க..!’ என வழிந்து கொண்டே அவர் உங்களை கணக்கு பண்ண முற்படும்போது, ‘எனக்கு மெட்ராஸ் ஐ... உனக்கு நாளை (உளவுப்படை மூலம் இதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்!) அரியர்ஸ் கிளியரன்ஸ் கடைசி வாய்ப்பு எக்ஸாம்னு தெரியும்...’ என தோளைக் குலுக்கியபடி சொல்லுங்கள். ஜெர்க்காகும் நண்பர், கொண்டு வந்த பரிசைக் கொடுக்காமல் தலைதெறிக்க ஓடுவார்!

தமிழனாக இருந்தால் ஃபார்வர்ட் செய்யவும்! 
‘கன்னி ராசியில் பிறந்தவளான எனக்கு ‘இன்று' யார் யாரெல்லாம் பரிசு தருகிறார்களோ அவர்களை எல்லாம் எமன் அரவணைப்பார். ஆனால், இந்தச் செய்தியைப் படிக்கும் ஆயிரத்து ஓராவது நபர் தாராளமாக எனக்கு பரிசு வழங்கலாம். அவர்களை எமன் நெருங்க மாட்டார் என எங்கள் குடும்ப ஜோதிடர் சொல்கிறார். உண்மையான தமிழனாக இருந்தால் ஃபார்வர்ட் செய்யவும்...’இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் செய்தியாக அனுப்புங்கள்.

பல குரூப்களில் பதியுங்கள். நிச்சயம் இவர்களில் சிலர்தான் உங்களுக்கு பரிசு தரப் போகிறவர்கள்! அவர்கள் கதிகலங்கி விடுவார்கள். ஆயிரம் பேர் இதைப் படித்தார்களா இல்லையா என்ற குழப்பம் அவர்கள் மத்தியில் எழும். எனவே, பின்வாங்குவார்கள். அச்சம் அவர்கள் கண்களில்  டவுன்லோட் ஆகும்! வாட்ஸ்அப்பில் வருவது எல்லாம் உண்மை என நம்பும் உலகம் இது என்பதால் இந்த ஐடியா கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகும்!

ஆத்தா... மகமாயி...
நெற்றியில் பழைய ஒரு ரூபாய் அளவிலான குங்குமப் பொட்டுடன் தலைவிரி கோலமாக காட்சியளித்து, ‘இந்த சமயத்தில் எனக்கு யாராவது அன்பு(!)ப் பரிசு கொடுத்தால் அது தெய்வ குற்றமாகி இந்த ஜென்மம் முழுக்க திருமணமாகாமல் பிரம்மச்சாரியாகவே காலத்தைக் கழிக்க நேரிடும்... பட், உனக்குத்தான் சாமி நம்பிக்கை இல்லையே! பரிசைக் கொடு.

வாங்கிக் கொள்கிறேன்...’ என்று சொல்லுங்கள்.‘ஒரு நிமிஷம், இதோ வந்துடறேன்...’ என பரிசுடன் வந்த நண்பர் ஆன்மிக ஓட்டமெடுப்பார்! இந்த கெட்டப் வெற்றி பெற குறைந்தது இரு நாட்களாவது நீங்கள் கே.ஆர்.விஜயா நடித்த பழைய படங்களைப்  பார்க்க வேண்டும்!

Half மீசைக்காரன்
 ‘பல தலைமுறைகளுக்கு முன்னாடி என் கி..ரே..ட் கொள்ளுத் தாத்தா தனக்குப் பிடிச்சவளுக்கு, அவளுக்குப் பிடிக்காத பரிசைக் கொடுத்திருக்காரு. டென்ஷன் ஆனவ, சாபம் கொடுத்துட்டா. அதுலேந்து எங்க வம்சத்துல பிறந்த பொண்ணுங்களுக்கு பரிசு கொடுக்கற எல்லாருமே பாதி மீசையோடதான் கொடுக்கணும். அப்பதான் ஓகே ஆகும். உன்னை பாதி மீசைல பார்க்க ஆசையா இருக்குடா...’என ஹஸ்கி வாய்ஸில் சொல்லுங்கள். பொத்திக் கொண்டு ‘தம்பி’ கம்பி நீட்டி விடுவார்! ஃபிகர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை பையன்கள் மத்தியில் இருப்பதால் இந்த ஐடியா ஷ்யூர் ஷாட் ஹிட்!

சேது பந்தனம்!
‘உன் கூட சேர்ந்து ஒரேநாள்ல நாலு படம் பார்க்கணும். அதுக்குப் பிறகு பரிசு வாங்கிக்கறேன்...’ என கொஞ்சுங்கள். பார்ட்டி ஹேப்பியாகி ‘பட்சி சிக்கிடுச்சு’ என தன் சர்க்கிளுக்கு மெசேஜ் தட்ட முற்படுவார்.அப்போது, ‘அதுவும் பேக் டு பேக் ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘மூன்றாம் பிறை’, ‘குணா’, ‘சேது’ பார்க்கணும்...’ என சிணுங்குங்கள்!சித்தம் கலங்கி பரிசு தர நினைப்பவர் கண்டிப்பாக ஜூட் விடுவார்! தியேட்டரில்தான் காதல் நிச்சயிக்கப்படுகிறது என்று நம்பும் மன்மதர்கள் சூழ் உலகு இது. ஸோ, ஜெயம் உங்களுக்கே!

- எஸ்.ராமன்