அலப்பறை தேவையா?



-ரீடர்ஸ் வாய்ஸ்

வாசகர் கடிதம் எழுதும் அயன்புரம் த.சத்தியநாராயணனைப் பற்றி எழுதி வாசகர்களைப் பெருமிதப்படுத்தி விட்டீர்கள். சத்தியநாராயணன் பற்றிய செய்திகளை வெளியிட்டு வாசக எழுத்தாளர்களுக்கும் கிரீடம் அணிவித்து அழகு பார்க்கும் குங்குமத்திற்கு நன்றி!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம். விஜயநிர்மலன், சென்னை - 125. இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. பூதலிங்கம், நாகர்கோவில்.

‘குங்குமத்துக்கு கொலை மிரட்டல்’ அலப்பறை தேவையா? நடக்கிற பிரச்னைகளுக்கு நடுவில் காதல் சிறப்பிதழை முழுமையாக போட்டிருந்தால் புண்பட்ட நெஞ்சங்களுக்கு இதமாக இருந்திருக்குமே!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

சினிமா பிரபலங்களுக்கு மத்தியில் முகம் தெரியாத பல மனிதர்கள் பத்ம விருதுகள் பெற்றிருப்பதை குங்குமம் சொல்லித்தான் தெரிந்துகொண்டோம்.
- வி.வி.வினிஷா, சிவகாசி.

கோயம்பேடு பூ மார்க்கெட் நிலவரம் சொல்லி மணக்க மணக்க சுற்றிப் பார்க்க வைத்துவிட்டீரே!
- மயிலை கோபி, சென்னை - 78. சி.பா.சந்தானகோபால கிருஷ்ணன், சென்னை - 4.

இன்டர்நேஷனல் இயக்குநர் வெற்றிமாறனின் அம்மா மேகலா சித்ரவேலின் பேட்டியில் வெற்றிமாறன் சிறந்த கிரிக்கெட் வீரர் போன்ற தகவல் எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. குட் மதர்! குட் சன்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சும்மா காசு கொடுத்துவிட்டு வஞ்சனை இல்லாமல் நம் பங்குக்கு அது சொத்தை இது நொள்ளை என விமர்சனம் செய்துவிடுகிறோம். ஆனால், அதை எடுப்பதற்கு எத்தனை கஷ்டம் என்பதையும், உழைப்பவர்களின் சிரமங்களையும் கவிஞர் யுகபாரதி தனது ‘ஊஞ்சல் தேநீர்’ பத்தியில் அருமையாக விளக்கி இருக்கிறார். சினிமா எடுப்பவர்களின் கண்ணோட்டத்தில் ரசிகர்களின் விமர்சனம் இருக்க வேண்டும் என்பதை அண்ணன் தம்பி ராமையா வழியாக நமக்குப் புரிய வைத்திருக்கிறார்.
- ஜெயலட்சுமி சேஷாத்ரி, கும்பகோணம் - 1.

திராவிட பரம்பரையில் வந்ததால் இயக்குநர் வெற்றிமாறனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் தூய தமிழில் இருக்கிறது. இதைப் படித்து அறியும்போதே பெருமையாக இருக்கிறது. எழுத்தாளர் மேகலா சித்ரவேலின் கல்வித் தகுதியையும், தேடித் தேடி அவர் கற்ற மொழிகளையும் கண்டு அசந்துவிட்டேன். நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
- உமரி பொ.கணேசன், மும்பை - 37.