அரசியலவாதிகளை அலற விடும் YouYube சேனல்!



- திலீபன் புகழ்

‘‘இனி எல்லாமே யூ டியூப்தான். கமல்ஹாசன் சொன்ன மாதிரி யூ டியூப்ல சினிமாவை வெளியிடுற காலம் ரொம்ப தூரத்துல இல்ல. அப்ப நாங்கதான் பயனீர் மீடியாவா இருப்போம்...’’ நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறார் ஆர்.ஜே.முத்து. ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ யூ டியூப் சேனலில் புதுப்படங்களை அலசி ஆராய்ந்து ரகளையாக விமர்சனம் செய்வதில் இவர் கில்லி.

‘‘எல்லாருக்கும் தெரிஞ்ச பெயரா இருக்கணும்னு யோசிச்சப்பதான், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ங்ற பேரு சிக்குச்சு. ஆரம்பத்துல படு சீரியசான விஷயங்களை வீடியோவா செஞ்சோம். ஒரு ஈ, காக்கா கூட ஏறெடுத்துக்கூட பார்க்கல. ‘மூணார்’, ‘ஆண்டிப்பட்டி அரசம்பட்டி’, ‘விடாயுதம்’, ‘ஜமீன் கோட்டை’னு ஓடாத படங்களை விமர்சனம் செய்தோம். எல்லா கான்செப்ட்டும் புதுசா இருந்துச்சு. இருந்தாலும் மக்கள்கிட்ட இருந்து எந்த வரவேற்பும் கிடைக்கல.

கோபி அரவிந்த், சுதாகர் வந்த பிறகுதான் எங்க சேனல் ஃபுல் காமெடியில பின்னி எடுக்க ஆரம்பிச்சது. இப்ப அந்த பழைய வீடியோக்களைக் கூட மக்கள் பார்க்க ஆரம்பிக்கறாங்க...’’ உற்சாகமாக சொல்கிறார் ராகவ். இவர்தான் இந்த டீமின் யூ.பி.எஸ். ‘மெட்ராஸ் சென்ட்ரலி’ல் சூப்பர் ஸ்டார் என்றால் அது கோபி அரவிந்தும், சுதாகரும்தான். சீமானை வறுத்தெடுத்து அவர்கள் செய்த வீடியோ வைரல் ஹிட். நான்கு லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி இன்றும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

குரலை மிமிக்ரி செய்வதைத் தாண்டி அந்த நபரை தத்ரூபமாக இமிடேட் செய்வதுதான் இவர்களின் தனித்துவம். ‘‘சொந்த ஊரு சிவகங்கை. வீணாப் போன இன்ஜினியரிங்க படிச்சிட்டு சினிமாவுல விசிட்டிங் கார்டு கிடைக்கும்னு சென்னைக்கு வந்தேன். ஆரம்பத்துல அப்படி இப்படினு சுத்தி இப்போ யூ டியூப் சேனல்ல அடையாளம் கிடைச்சிருக்கு. முதல்ல சினிமா ரிவ்யூ சொல்ற ப்ளூ சட்டை மாறனை கிண்டல் செய்து வீடியோ பண்ணினோம்.

‘ரொம்ப புதுசா இருக்கு’ன்னு மக்களும் ஃபீட்பேக் கொடுத்தாங்க. இன்னைக்கு சீரியசை விட காமெடியைத்தான் மக்கள் விரும்புறாங்க. அதுவும் அவங்களுக்கு பிடிக்காத தலைவர்களை, நடிகர்களை நையாண்டி செஞ்சா உடனே அது வைரலாகுது. இப்படி யோசிச்சப்பதான் சீமான் வசமா சிக்குனாரு. தலையைத் தடவித் தடவி பேசுவார். அப்பப்ப தன் மீசையைத் தொட்டுத் தொட்டு பார்த்துக்குவார். இதை அப்படியே இமிடேட் பண்ணி என்னோட பாணியில செஞ்சேன்.

பெரிய ஹிட்டாச்சு...’’ என்று தலையைத் தடவிக்கொண்டே சொல்கிறார் கோபி. மற்றவர்களை இமிடேட் செய்து காமெடி பண்ணுவதில் கோபிதான் ஹீரோ. ‘‘பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செஞ்சப்ப, பேங்குல என்ன நடக்குதோ அதை அப்படியே பதிவு செஞ்சோம். ‘வங்கின்னு வைக்கிறதுக்கு பதிலா ‘வாங்கி’னு வைக்கலாம். பணத்தை வாங்கி உள்ள போடுறீங்களே தவிர, தர மாட்டீங்கிறீங்களே’னு அந்த வீடியோ ஆரம்பிக்கும்.

டிரெண்ட்ல இருக்கிறத வீடியோவா பண்ணினாதான் மக்கள்கிட்ட ரீச் ஆகுது...’’ என்கிற சுதாகர் சின்னம்மா போலவே இமிடேட் செய்வதில் பிரபலமானவர். இவர்தான் கோபியின் ஸ்கிரிப்டை ஷார்ப் செய்யும் திரைக்கதையாசிரியர். இந்தளவு எல்லோரையும் கிண்டல் பண்ணுறீங்களே, இதுவரைக்கும் மிரட்டல் ஏதாவது வந்திருக்கிறதா என்றதும் சிரிக்கிறார்கள். ‘‘இதுவரைக்கும் எதுவும் வரலை. சீமான் வீடியோவுக்கு வரும்னு எதிர்பார்த்தோம். ஆனால், அவங்க கட்சி ஆட்களே நல்லா இருக்குனு பாராட்டுனாங்க.

ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. பலபேரு கமென்ட்லயும், போன் பண்ணியும் ‘இப்படி கலாசாரத்தை சீரழிக்கிறீங்களே’ன்னு கெட்ட வார்த்தையிலே திட்டுவாங்க. ‘நாங்க கலாசாரத்தை சீரழிக்கிறது இருக்கட்டும். கெட்ட வார்த்தைல பேசுற நீங்க...’னு கேட்ட அடுத்த நிமிஷமே கால் கட்டாயிடும்...’’ என்கிறார்கள் கோரஸாக. ‘‘பஸ் ஸ்டா ண்ட் பற்றிய ‘பரிதாபங்கள்’ வீடியோதான் சக்கைப்போடு போட்டது.

பொதுவா விழாக்காலங்கள்ல சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்பவரின் நிலை உருளைக்கிழங்கு லாரில மாட்டுன தக்காளி மாதிரிதான் இருக்கும். வால்வோ பஸ்ங்கிற பேர்ல சுந்தரா டிராவல்சை புக் பண்ணிட்டு மக்கள் படாத பாடு படுவாங்க. நீங்க ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்குப் போனீங்கன்னா எந்த ஊர் போறீங்கன்னு கேக்காம மதுரை போகிறவரை கடலூர் பக்கமும், திருச்சிக்கு போகிறவரை வேலூர் பஸ்லயும் புரோக்கர்கள் ஏத்தி விட்ருவாங்க.

சரியான பஸ்ஸை பிடிச்சு ஏறி உட்காருவதற்குள்ள போதும் போது ம்னு ஆகிடும். பஸ்ல ஏறி உட்கார்ந்து ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சு பாத்தோம்னா கோயம்பேடை விட்டே வெளியில போயிருக்க மாட்டோம். அப்புறம் இடையில விக்கிரவாண்டி பக்கம் வண்டியை நிறுத்துவாங்க பாருங்க... கழனித் தண்ணி மாதிரி இருக்கும் டீ. அதுக்கு 20 ரூபாய் சொல்லுவாங்க. டீ குடிக்க மக்களை பஸ்ல இருந்து இறக்கறதுக்கு என்ன என்னவோ பண்ணுவாங்க.

வாட்டர் பாட்டில வச்சி லொட்டு லொட்டுனு காது கிழிய பஸ் ஜன்னல தட்டுவாங்க. அப்படியும் பஸ்ஸை விட்டு இறங்கலைன்னா கத்தி கூப்பாடு போடுற மாதிரி கிராமிய பாட்ட போட்டு தூக்கத்தை கலைச்சி நம்மளை இறங்க வச்சிடுவாங்க. இந்த பஸ் காமெடியை தொடர்ந்து இரண்டு தொடரா பண்ணினோம். மக்களோட வாழ்க்கையை, அனுபவத்தை சொன்னதால பெரிய ஹிட் ஆச்சு. இந்த மாதிரி நிறைய பண்ணுவோம்...’’ என்றார் முத்து நிறைவாக.                         

படங்கள்: சதீஷ் குமார்