பிழைப்புக்காக புலம் பெயர்ந்த தமிழர்கள் மகிழ்ச்சியா வாழறது இந்தத் தீவுல மட்டும்தான்!



- டி.ரஞ்சித்

ஆச்சர்யம் தரும் ரீயூனியன்

உலகின் அத்தனை அழகையும் ஓர் ஆடையைப் போல அணிந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது ‘ரீயூனியன்’ தீவு. மொரீஷியஸுக்கு அருகில் இருக்கும் இத்தீவின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் தமிழர்கள். சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு பிழைப்புக்காக இங்கே வந்த தமிழர்கள் இன்று அதன் வளர்ச்சிக்குத் தூணாக இருக்கிறார்கள். அண்மையில் இந்தக் குட்டித் தீவின் உணவுகள் குறித்து ஒரு நிகழ்வு சென்னையில் நடந்தது.

அதில் கலந்துகொண்டு, இந்தத் தீவின் வரலாற்றைச் சொல்லக்கூடிய நபர் யாராக இருக்கும் என்று விசாரித்தோம். அவர்கள் கைகாட்டியது ரீயூனியன் தமிழ் சங்கத் தலைவரான டாக்டர் செல்வம் சண்முகம். ஐஎஸ்டியில் அவரைப் பிடித்தோம். ‘‘ஒருகாலத்துல இந்தத் தீவுல யாருமே இல்ல. அப்ப இந்தியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு வர்ற அந்நிய நாட்டுக் கப்பல்கள், கரீபியன் கடல், இந்துமாக் கடல் வழியாத்தான் பயணம் செய்யும்.

ஓய்வு எடுக்க பிரெஞ்சுக்காரர்கள் இந்தத் தீவுல இறங்கியிருக்காங்க. அப்படியே முகாமிட ஆரம்பிச்சு நிரந்தர தங்குமிடமா இதை மாத்திட்டாங்க. இப்படித்தான் இந்தத் தீவு உருவாச்சு...’’ என்ற செல்வம் சண்முகத்திடம் இத்தீவுக்கு எப்படி தமிழர்கள் வந்தார்கள் என்று கேட்டோம். ‘‘இந்தியா சுதந்திரம் அடையறதுக்கு முன்னாடி புதுச்சேரில நிறைய பிரெஞ்சுக்காரங்க இருந்தாங்க.

பிரெஞ்சு கப்பல்கள் அப்படி வர்றப்ப வேலைக்காக தமிழர்களையும் கூட்டிட்டு வந்துட்டாங்க. இதெல்லாம் 1848ல நடந்தது. சரியா அந்த வருஷத்துலதான் இந்தத் தீவுல அடிமை முறை ஒழித்து சட்டம் இயற்றப்பட்டது. அதனால ஒப்பந்தக் கூலிகளா தமிழர்கள் நியமிக்கப்பட்டாங்க. சில பத்தாண்டுகள்ல தமிழர்களோட எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தொட்டது.

சுதந்திரம் அடைஞ்ச பிறகு புதுச்சேரியும் இந்தியாவோட இணைஞ்சது. அப்ப பிரெஞ்சு அரசாங்கத்துல வேலை பார்த்த தமிழர்கள், பிரான்ஸ் இல்லைனா அதனோட காலனி நாடுகளுக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டாங்க. இப்படி மாற்றல் ஆனவங்கள்ல எங்கப்பா, அம்மாவும் ஒருத்தங்க. அப்பா, புதுச்சேரி. அம்மா, மதராஸ் ராஜதானி. நான் சென்னைலதான் பிறந்தேன். 1967ல இந்தத் தீவுக்கு நாங்க வந்தப்ப நான் சின்னப் பையன்.

இப்ப இந்தத் தீவுல மூணுல ஒரு பங்கு தமிழர்கள்தான். சீன, கறுப்பின மக்களும் இங்க வசிக்கிறாங்க...’’ என்ற சண்முகத்திடம் தமிழர்களின் நிலை குறித்து கேட்டோம். ‘‘அடிமை முறை ஒழிக்கப்பட்டதால இப்ப பல தொழில்களை செய்யறாங்க. சரக்கு லாரி கம்பெனிகள், பஸ் கம்பெனி, ஹோட்டல்னு வணிகத்துல கவனம் செலுத்துறாங்க.

ஒரே வார்த்தைல சொல்லணும்னா பிழைப்புக்காக மத்த நாடுகளுக்குப் போன தமிழர்கள்ல சந்தோஷமா இருக்கறது இந்த ரீயூனியன் தமிழர்கள்தான்...’’ என்று பெருமைப்பட்டவரிடம் தமிழர்களின் பெயர்களில் கலப்பு தென்படுகிறதே என்ற கேள்வியை எழுப்பினோம். ‘‘உண்மைதான். முன்னாடியே சொன்ன மாதிரி இது பிரெஞ்சுக்காரர்களோட தேசம். ஆரம்பத்துல மதமாற்றம் எல்லாம் நடந்தது.

இன்னிக்கி இருக்கிற இரண்டரை லட்சம் தமிழர்கள்ல கால்வாசிப் பேர் அப்ப மதம் மாறினவங்கதான். இந்த வம்சாவளி வந்தவர்களோட தோல் வெள்ளையா இருக்கும். பெயர்ல பாதி தமிழ், மீதி பிரெஞ்சு. ஆனா, இவங்க வாழ்க்கை முறைல பிரெஞ்சு கலாசாரத்தோட கறுப்பர், சீன, தமிழர்களோட பண்பாடும் கலந்திருக்கு. உதாரணமா நான்காம் / ஐந்தாம் தலைமுறை தமிழர்கள் தேவாலயங்களுக்கும் போவாங்க, இந்து கோயிலுக்கும் வருவாங்க.

மாசி மாசம் தைப்பூசம் நடக்கிறப்ப இந்த கலப்புத் தமிழர்களும் பங்கேற்பாங்க. கலப்புத் திருமணங்கள் இங்க அதிகம். ஒரே வார்த்தைல சொல்லணும்னா இது கலப்பின மக்கள் வாழற ஒற்றுமையான தேசம்...’’ என்ற சண்முகத்திடம் அவரைப் பற்றிக் கேட்டோம். ‘‘ஆரம்பக் கல்வியை இங்க முடிச்சுட்டு பிரான்ஸ்ல டாக்டர் பட்டத்தை முடிச்சேன். அப்புறம் இங்கயே திருமணம், தொழில்னு செட்டிலாகிட்டேன். ஆரம்பத்துல இருந்த அளவுக்கு மொழி உணர்வும், தமிழ்ப் பண்பாடும் இப்ப இல்ல.

மதமாற்றம் செய்யப்பட்டாலும் தங்கள் வீட்டோட பின்பக்கத்துல இந்து சாமிகளை வைச்சு கும்பிட தமிழர்கள் தயங்கலை. தொடக்கத்துல கருப்பன், சுப்பன், மாரினு தங்கள் பசங்களுக்கு பெயர் வைச்சாங்க. இப்ப முத்துசாமி ஜான்பால்னு மாறியிருக்கு. ஆனா, இந்த ஜெனரேஷன் தங்கள் பசங்களுக்கு கதிர்வாசன், அம்பிகைனு திரும்பவும் தூய தமிழ்ல பெயர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க...’’ என்கிறார் டாக்டர் செல்வம் சண்முகம்.                           

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

விசா அவசியமில்லை..!

‘‘இந்தத் தீவோட சுற்றளவு சுமார் 2500 சதுர கி.மீ. இங்க இருக்கிற எரிமலைகள்தான் ரொம்ப ஃபேமஸ். சொல்லப்போனா எரிமலை வெடிப்பு காரணமாதான் இந்தத் தீவே உருவாச்சுனு சொல்றாங்க. இப்பவும் இரண்டு எரிமலைகள் இங்க இருக்கு. ஒவ்வொரு வருஷமும் குறிப்பிட்ட இடைவெளில தீக்குழம்புகள் அங்கேந்து கிளம்பும். ஆனா, வெடிக்கிற அளவுக்கு போறதில்லை. இந்த எரிமலைகளைப் பார்க்க சுற்றுலாப் பயணிங்க வர்றாங்க. மொரீஷியஸுக்கு 175 கி.மீ. தென்மேற்குல, இந்துமா கடல்ல இந்தத் தீவு இருக்கு.

எரிமலை தவிர, அழகிய மலைகளும் வெள்ளை மணல் பீச்சும் இங்க உண்டு. நீர் விளையாட்டு புகழ்பெற்றது. தமிழகத்துல பயன்படுத்தப்படற மசாலாக்களைத்தான் இங்குள்ள தமிழர்களும் உபயோகப்படுத்தறாங்க. ஆனா, உணவோட வடிவம் வேற மாதிரி இருக்கும். தமிழகத்து சமோசாவை விட இங்க பிரமாதமா சமோசா கிடைக்கும். மஞ்சள்லதான் சோறு. ஆனா, மஞ்சள் வாசனை கொஞ்சம் கூட வராது. இங்க இருக்கிற தமிழர்களை ‘மலபார்’னுதான் மத்தவங்க அழைக்கிறாங்க.

முகத்தைப் பார்த்தே தமிழர்கள்னு சொல்லிடலாம். ஆனா, தெளிவா தமிழ் பேசுவாங்கனு நிச்சயமில்லை. சென்னைலேந்து வாரத்துக்கு இரண்டு விமானங்கள் இந்தத் தீவுக்கு வருது. 6 மணி நேர பயணம். போக வர ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் செலவாகும். 15 நாட்களுக்கு விசா அவசியமில்லை. அதனால சுற்றுலா வர்றவங்களுக்கு பிரச்னையில்லை. ஒரே நாள்ல முழுத்தீவையும் சுத்திப் பார்த்துடலாம்...’’ என்கிறார் தென் பிராந்திய இயக்குனரும், இந்திய - பிரான்ஸ் வர்த்தக மற்றும் தொழில் அமைப்பைச் சேர்ந்தவருமான மெர்லின் சாரா சிமோன்.