திரிபுராவின் தேவதை!



ஒரு இந்தியப் பெண்ணால் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப் போட்டி வரை செல்ல முடியும் என்ற பெருமையை நமக்குத் தந்தவர், ‘புரோடுநோவா’ என்ற அபாயகரமான விளையாட்டை நமக்கு அறிமுகம் செய்தவர், ஒலிம்பிக்கில் நூலிழை வித்தியாசத்தில் பதக்கத்தைத் தவற விட்டாலும் தன்னால் சாதிக்க முடியாததற்காக மன்னிப்பு கேட்டு ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் தீபா கர்மாகர்.

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற சமீப காலத்துக்கு முன்புவரை தீபா கர்மாகரை நமக்குத் தெரியாது; ஆனால் அவரது சொந்த மாநிலமான திரிபுரா மக்களுக்கு தீபா தவிர வேறு யாரையும் தெரியாது. திரிபுரா தலைநகரம் அகர்தலாவில் தீபாவின் போஸ்டர் இல்லாத வீடுகளே கிடையாது. ‘‘நான் என்ன சாதித்துவிட்டேன். பதக்கம் வாங்காமல் வெறும் கையோடு திரும்பி வருகிறேன். எனக்கு வரவேற்பு, பாராட்டு விழா எதுவும் வேண்டாம்’’ என்று தயங்கினார் தீபா. ஆனால் அவர் ஊர் திரும்பியபோது பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அளித்து, மாநில முதல்வர் மாணிக் சர்க்காரே வந்து வரவேற்பு கொடுத்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலுமே தீவிரவாதம் பெரும் பிரச்னை. வெவ்வேறு இனக்குழுக்கள், அவர்களுக்குள் மோதல்கள், உயிரிழப்புகள் என நிம்மதியற்ற வாழ்வு! பள்ளிப் படிப்பை முடிக்கும்முன்பே தீவிரவாதக் குழுக்களில் இணைந்துவிடுவார்கள். மாணிக் சர்க்கார் முதல்வர் ஆனதும், பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் பிள்ளைகளின் ஆர்வத்தை மைதானங்கள் பக்கம் திருப்பி விடத் தீர்மானித்தார். எல்லா பள்ளிகளிலும் விளையாட்டு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளில் தீவிரவாதம் தொலைந்தது. இப்போது வடகிழக்கு மாநிலங்களில் ஒரே அமைதிப் பூங்கா திரிபுரா மட்டும்தான்!

விளையாட்டு வெறுமனே அமைதியைத் தந்தால் போதுமா? பதக்கம் வேண்டாமா? அப்படித்தான் இந்த அமைப்புகளிலிருந்து தீபா கர்மாகர் போன்றவர்கள் உருவாகி வந்தார்கள். தங்கள் அடையாளம் என சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத திரிபுரா மக்கள், தீபாவை தங்களின் எதிர்கால நம்பிக்கையாகக் கொண்டாடுகிறார்கள். திரிபுராவில் இப்போது குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும்போதே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் சேர்கிறார்கள்.

‘‘டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்’’ என திரிபுராவுக்கு உறுதிமொழி கொடுத்திருக்கிறார் தீபா. தீபாவுக்கு திரிபுரா அரசாங்கம் கோடிகளில் பரிசுத்தொகை கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு பொருளாதார வளம் அங்கு இல்லை. தலைநகரம் அகர்தலாவில் உள்ள அரசு பயிற்சி அரங்கில் ஃபோம் தளம் இல்லை. அதனால் தீபா பயிற்சிக்காக டெல்லி போக வேண்டியிருக்கிறது. இப்போது அவருக்கு இதைச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு. இந்த அமைப்பிலிருந்துதான் தீபாக்கள் சாதிக்கிறார்கள்!

- எஸ்.உமாபதி