நியூஸ் வே



* 39 வயதில்தான் நிறைய கள்ளக்காதல்கள் உருவாகின்றனவாம்! பிரிட்டிஷ் இணையதளமான ‘Illict Encounters’ இதைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது.

* கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் கணித வினாத்தாள் கடினமாக இருந்தது. இது இந்தியா முழுக்க மாணவர்கள் மத்தியில் கண்ணீர் அலையையும், பெற்றோர்கள் மத்தியில் கோப அலையையும் உருவாக்கியது. இப்போது சி.பி.எஸ்.இ அமைப்பு இறங்கிவந்து, ‘‘அடுத்த ஆண்டு கேள்வித்தாள் சுலபமாகவோ, ஆவரேஜாகவோ இருக்கும்’’ என அறிவித்துள்ளது.

* சமீபத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடப் போன மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், அரை அடி தண்ணீரில் கூட இறங்கி நடக்கவில்லை. போலீஸார் அவரைத் தூக்கிக்கொண்டு போனார்கள். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளான அவரை நெட்டிசன்கள் காய்ச்சி எடுத்துவிட்டனர். அவர்கள் உருவாக்கிய ‘ட்ரோல்’களில் சௌகான் ‘கபாலி’ படம் பார்க்க விமானத்தில் வந்து இறங்குகிறார்; நயாகராவில் போகிறார்; உசைன் போல்ட்டை முந்தி பரிசு பெறுகிறார்.

* ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு அடுத்து நியமனம் பெற்றுள்ள உர்ஜித் படேல், முக்கியமாக எல்லா விஷயங்களிலும் ரகுராம் ராஜனின் கொள்கைகளைக் கொண்டிருப்பவர். கென்யாவில் பிறந்த இந்தியர். ரிலையன்ஸ், பாஸ்டன் கன்சல்டிங் குரூப் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பணியாற்றியவர். நிறைய வெளிநாடுகளில் வேலை பார்த்தவர். ஆனாலும் ரகுராம் ராஜனை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்த சுப்ரமணியன் சுவாமி, ‘‘உர்ஜித் படேலை விமர்சனம் செய்வது முட்டாள் தனம். வெளிநாட்டில் பிறந்தாலும் அவர் இந்தியர்தான்’’ என்றிருக்கிறார்.

* நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரி மகன் திருமணம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. திருமணத்தை ஸ்கைப்பில் ‘லைவ்’வாக பார்த்த தாவூத், பாகிஸ்தானில் இருந்தபடியே வாழ்த்தினாராம்!

* பாகிஸ்தானை ‘நரகம்’ என்றார் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர். ‘பொல்லாதவன்’ ஹீரோயினும் கர்நாடக காங்கிரஸ் அரசியல்வாதியுமான ரம்யா, ‘‘பாகிஸ்தான் நரகம் என்பது எல்லாம் இல்லை. அங்கும் அன்பான மக்கள் இருக்கிறார்கள். எல்லைக்கோடு பிரிக்கிறது என்பதாலேயே நாம் வெறுப்பை உமிழ வேண்டுமா?’’ என்று ஒரு பேரணியில் பேசிவிட்டார். அது அவரை தேசத் துரோக வழக்கில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. ‘‘ரம்யா போன்றவர்கள் எல்லாம் கொசுக்கள், பூச்சிகள்... இவற்றை அழிக்க விஷம்தான் சரியான வழி’’ என்று சாடியிருக்கிறார் பி.ஜே.பி தலைவர் ஒருவர்.

* 1.36 கோடிப் பேர்... கடந்த நிதி ஆண்டில் மட்டும் வருமான வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை என ராஜ்யசபாவில் தெரிவித்திருக்கிறார் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார்.

* கிரிக்கெட் வீரரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட டோன்ஜா என்ற கிராமத்தைத் தத்தெடுத்திருக்கிறார். ஒவ்வொரு எம்.பியும் ஏதேனும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து ‘மாதிரி கிராம’மாக மாற்ற வேண்டுமென ‘சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ என்ற திட்டத்தை  2014ம் ஆண்டே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, டோன்ஜா கிராமத்தை செலக்ட் செய்து களத்தில் இறங்கியிருக்கிறார் டெண்டுல்கர்.

இனி, டோன்ஜா வளர்ச்சி பாதைக்குத் திரும்பும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் உள்ளூர்வாசிகள். 2 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் புட்டம்ராஜுவாரி கண்ட்ரிகா என்ற கிராமத்தைத் தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளைச் செய்தார் சச்சின். இப்போது அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் சச்சின் போஸ்டர் இருக்கிறது!

* மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அணியும் சேலையுடன் இணைந்த ஹாஃப் ஜாக்கெட் டிரஸ், பள்ளிகளில் நடக்கும் ஃபேன்ஸி டிரஸ் போட்டிகளில் ஃபேஷனாகி இருக்கிறது. ‘ரியா’ என்ற குழந்தை இதுபோல சுஷ்மாவின் காஸ்ட்யூமை அணிய, அதை அவரது தந்தையே ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பதிலளித்த சுஷ்மா, ‘ஓ, ஐ லவ் யுவர் ஜாக்கெட்’ என நெகிழ்ந்தார். இதேபோல், பாவ்யா என்ற குழந்தையும் சுஷ்மா டிரஸ்ஸை அணிந்து பதிவிட, ‘டியர் பாவ்யா, இனி என்னை எல்லோரும் டூப்ளிகேட் என்றே நினைப்பார்கள். உன்னைத்தான் உண்மையான சுஷ்மா என்று அழைப்பார்கள்’ என மெச்சியிருக்கிறார்.

* எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பிறகு ஐ.நா. பொதுச்சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். எம்.எஸ் அங்கு இசை நிகழ்ச்சி நடத்தி 50 ஆண்டுகள் நிறைந்துள்ளன; இது எம்.எஸ். நூற்றாண்டு விழாக் காலம். இந்த நேரத்தில் அவருக்கு உலக மேடையில் நிகழ்த்தப்பட்ட அஞ்சலி இது. 3 மணி நேர நிகழ்ச்சியில் ‘குறையொன்றுமில்லை’ பாடல் மட்டுமின்றி, பல கர்நாடக இசைப் பாடல்களும், சூஃபி பாடல்களும் உலக நாடுகளின் தூதர்களை மயங்கச் செய்தன. அடித்தட்டு திறமையாளர்களை உலக மேடையில் அறிமுகம் செய்ய ரஹ்மான் உருவாக்கிய சன்ஷைன் ஆர்க்கெஸ்ட்ராதான் அவரோடு போயிருந்தது.

* மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் உதவி கேட்டு வருபவர்களில் ஒரு குரூப் வித்தியாசமானது. அமைச்சர் ஆவதற்கு முன்பாக டெல்லியில் புகழ்பெற்ற ஈ.என்.டி நிபுணர் அவர். அவரது முன்னாள் நோயாளிகள் பலர் இப்போதும் தங்கள் ரிப்போர்ட்களுடன் ஆலோசனை கேட்டு வருகிறார்கள். அவரும் முகம் சுளிக்காமல் பார்த்து ஆலோசனை சொல்கிறார்.

* கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் அவரோடு பங்கேற்க பிரதமர் மோடி அணிந்திருந்த சூட், 4.31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. தங்க நிற இழைகளால் மோடியின் பெயர் எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த உடை, ‘உலகில் அதிக விலைக்கு ஏலம் போன சூட்’ என கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது. ஒலிம்பிக்கில் சாதிக்காவிட்டாலும் நாம் கின்னஸில் சாதிக்கிறோம்.